சந்திரசேகரேந்திர சரஸ்வதி பதிவு சில நண்பர்கள் மனதை புண்படுத்திவிட்டது. அதனால் நினைவு இருக்கும்போதே ஜாக்கிரதையாக ஒரு Disclaimer கொடுத்துவிடுகிறேன். இது எவர் மனதையும் புண்படுத்த எழுதப்பட்டதில்லை. பழைய ஏற்பாட்டை (Old Testament) தெய்வத்தின் வரலாறாக மதிப்பவர்களுக்கு இது irreverent ஆகத் தெரியலாம். எனக்கு பழைய ஏற்பாடு இலக்கியம்+வரலாறு+legend மட்டுமே என்பதை முடிந்தால் நினைவு வைத்துக் கொள்ளுங்கள்.

பழைய ஏற்பாடு மிக சுவாரசியமான புத்தகம். யூத, கிருஸ்துவ, இஸ்லாமியர்களின் புராணங்கள் என்று சொல்லலாம். இஸ்லாமியர்களின் version சில வேறுபாடுகள் உடையது.

நான் பழைய ஏற்பாட்டை முதல் முறையாக படித்தபோது எனக்கு ஒரு பதினாறு வயது இருக்கலாம். எனக்கு எப்போதுமே இந்த புராணம், இதிகாசம் எல்லாம் படிப்பதில் விருப்பம் உண்டு. மகாபாரதத்தில் பெரிய பித்தே உண்டு. ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் படித்தேன். ஆங்கில புத்தகத்தில் begat என்ற வார்த்தையை முதல் முறையாக பார்த்தது இன்னும் ஞாபகம் இருக்கிறது.

நான் புதிய ஏற்பாட்டை முழுமையாக படித்தத்தில்லை. ஆனால் பழைய ஏற்பாட்டின் கடவுளுக்கும் (ஜெஹோவா), புதிய ஏற்பாட்டின் கடவுளுக்கும் எக்கச்சக்க வித்தியாசம்! புதிய ஏற்பாட்டில் தேவ குமாரன் ஏசு ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு என்கிறார்; ஆனால் பழைய ஏற்பாட்டின் ஜெஹோவாவிடம் (ஏசுவின் அப்பா என்று வைத்துக் கொள்ளுங்களேன்) இந்த பாச்சா எல்லாம் பலிக்காது. அவர் மிக கடுமையானவர். அவரிடம் வைத்துக் கொண்டால் தீர்த்துவிடுவார். தன்னை வழிபடும் யூதர்களை எகிப்திலிருந்து மீட்க ஒவ்வொரு எகிப்தியனின் முதல் ஆண் குழந்தையை கொல்லத் தயங்கவே மாட்டார். சிறு குழந்தைகள் என்ன பாவம் செய்தன, ஜெஹோவாவின் வலிமையை காண்பிக்க அப்பாவி குழந்தைகளை கொல்வது சரியா என்று யாரும் கேட்கக் கூடாது. அவருக்கு நான்-வெஜ்தான் பிடிக்கும் போல, அதனால் ஏபல் ஆட்டை பலி கொடுப்பதை ஏற்றுக் கொள்வார், ஆனால் உழவன் கெய்னின் படையலை ஏற்க மாட்டார். கெய்ன் கடுப்பாகி தம்பி ஏபலை கொன்றுவிடுவான். எனக்கென்னவோ கொலையில் ஜெஹோவாவுக்கு பங்கிருப்பதாகத்தான் தோன்றுகிறது!

அவருடைய முடிவுகள் ஏன் எடுக்கப்படுகின்றன என்று அவரை வழிபடுபவர்களுக்கு புரிய வைக்க வேண்டிய அவசியமே இல்லை. சும்மா போகிற போக்கில் ஆபிரகாமின் சந்ததியினர் மட்டுமே தமக்கு பிடித்தமானவர் என்று சொல்வார். அப்புறம் யூதர்கள் என்ன தவறு செய்தாலும் மன்னித்து விட்டுவிடுவார். மிச்ச பேர் எல்லாம் ஏன் பிறப்பிலேயே பாபாத்மாவா? அப்படி பிறவியிலேயே பாபாத்மாக்களை ஏன் படைத்தார்? (நம்மூர் ஜாதி மாதிரி இல்லை?) ஜெஹோவா என்னை துதியுங்கள், என்னை துதியுங்கள் என்று எப்போதும் யூதர்கள் பின்னாலேயே மட்டும் ஓடுவார், மற்ற மனிதர்கள் “போலிக்” கடவுள்களை கும்பிட்டால் அவருக்கு அதைப் பற்றி அக்கறை இல்லை. அல்லா காஃபிர்களை படைக்கவும் படைக்கிறார், அப்புறம் காஃபிர்களுக்கு நரகத்தையும் விதிக்கிறார்போல!

நம்மூரில் சுடலைமாடன் பயமுறுத்துவார், எனக்கு படையல் வைக்காவிட்டால் கிராமத்தை அழித்துவிடுவேன், மழை பெய்யாது, ஊரில் வியாதி வரும் என்றெல்லாம் பூசாரி மேல் ஏறி சொல்வார். ஜெஹோவாவும் அந்த மாதிரிதான். ஒரே ஒரு வித்தியாசம் – மாடன் அடுத்த தெய்வங்களுக்கு படையல் வைப்பதை தடுப்பதில்லை. ஜெஹோவா எனக்கு மட்டும்தான் படையல் என்று பிடிவாதம் பிடிக்கிறார்!

தொகுக்கப்பட்ட பக்கம்: மிச்சம் மீதி