பத்தூர் என்ற ஊரில் உள்ள ஆலயத்தின் நடராஜர் சிலை ஒன்று திருட்டுப் போய் விட்டது. லண்டனில் அது கண்டுபிடிக்கப்பட்டு, அங்குள்ள உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. இந்தியாவிலிருந்து சாட்சி சொல்வதற்காக நான் அனுப்பப்பட்டேன். கோர்ட்டில் வாதங்கள் நடந்தது. இது உங்கள் நாட்டிற்குத்தான் சொந்தமானது என்று எப்படிக் கூறுகிறீர்கள் என்று நீதிபதி பல குறுக்குக் கேள்விகளைக் கேட்டார். நம்மிடம் அப்போது அதற்கான எந்தச் சான்றுகளும் இல்லை. இருந்தாலும் நான் நமது கல்வெட்டுச் சான்றுகளையும், கோயில் பற்றிய அறிவையும், நமது பண்பாடு, கலைகள் பற்றியும் நீதிபதியிடம் விளக்கிக் கூறினேன். இது நம் நாட்டைச் சேர்ந்ததுதான் என்பதை மற்ற ஆலயங்கள், சிலைகளை ஒப்பிட்டுக் காட்டி நிரூபித்தேன். அதைக் கேட்ட அந்நாட்டு நீதிபதி மிகவும் வியந்து என்னைப் பாராட்டினார். Unparalleled Expert in this field என்று அவர் தன் தீர்ப்பில் என்னைப்பற்றி எழுதினார். உடனடியாகச் சிலையை நம்மிடம் ஒப்படைக்கத் தீர்ப்புக் கூறினார். ஆனால் எதிர்த்தரப்பினர் பிரபுக்கள் சபையில்மேல்முறையீடு செய்தனர். அதில் இருந்த மூன்று முதிர்ந்த நீதிபதிகள், இதில் விவாதிக்க ஏதுமில்லை, சாட்சியங்கள் எல்லாம் மிக வலுவாக உள்ளன என்று கூறி வழக்கை ஏற்க மறுத்து விட்டனர். பின்னர் வழக்கு ப்ரிவி கவுன்சிலுக்குப் போனது. அந்த நீதிபதியும் இந்த வழக்கு நடந்த விதம் மிகச்சரி, இனி இதில் விவாதிக்க ஏதுமில்லை என்று கூறி வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டார். நடராஜரும் நம் ஊருக்குத் திரும்ப வந்தார்.

டாக்டர்  இரா. நாகசாமி


டாக்டர் இரா. நாகசாமி, தமிழகத் தொல்லியல் துறையின் முதல் இயக்குநர். தமிழ்நாட்டின் முக்கியமான வரலாற்று அறிஞர். தமிழகக் கலைப் பொக்கிஷங்களை ஆராய்ந்து பல உண்மைகளை வெளிக் கொணர்ந்தவர். இந்தியாவிலேயே முதன்முதலாக பூம்புகாரில் ஆழ்கடல் ஆய்வுப் பணியை மேற்கொண்டவர். கங்கைகொண்டசோழபுரம் தொல்லியல் ஆய்வுக்கு வழிவகுத்தவர். இவர் மேற்கொண்ட மாமல்லபுரம் பற்றிய ஆராய்ச்சி மிகவும் புகழ்பெற்றது. எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், கவிஞர், சொற்பொழிவாளர். இவரது கட்டுரைகளை உலக அளவில் 25க்கும் மேற்பட்ட மொழிகளில் பெயர்த்து யுனெஸ்கோ பதிப்பித்துள்ளது. தமிழ், ஆங்கிலம், சம்ஸ்க்ருதத்தில் 150க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். மத்திய அரசின் பல கலை, பண்பாட்டுக் குழுக்களில் ஆலோசகராகப் பணியாற்றியிருக்கிறார். உலக நாடுகள் பலவற்றிலும் பன்னாட்டுக் கருத்தரங்குகளில் கலந்து கொண்டு, தமிழகத்தின் பண்டைச் சிறப்பை, நாகரிகத்தை உலகுக்குச் சான்றுகளோடு அடையாளம் காட்டியவர். பார்க்க: tamilartsacademy.com

நன்றி – தென்றல் மாத இதழ்  (ஆகஸ்ட் 2010)

http://www.tamilonline.com/thendral/

Advertisements