மும்பையில் வட்டமாக நின்று , பானிபூரியைச் சும்மா 30 – 40 என்று ஸ்வாஹா பண்ணும் பெண்கள் ஏராளம்.  “பானிபூரி சாப்பிடும்போது கூச்சம், வெட்கம் எல்லாம் படக் கூடாது”  என்று எல்.கே.ஜி. மும்பை கேர்ள் கூடச் சொல்லுமே!  நாலைந்து பெண்கள் சேர்ந்தாலே போதும். (பசங்களும்தான்)  ‘ரிங்கா ரிங்கா ரோசஸ்‘ கணக்கா வட்டமா நின்னுண்டு கலாட்டாவாகப் பேசி, ஹைடோனில்  சிரித்து, பானிபூரி சம்ஹாரம் பண்ணிக் கொண்டிருப்பார்கள்.

‘பய்யா,  பய்யா’  (அண்ணா)  என்று பானிபூரி,   பாவ்பாஜி விற்பவனுடன் ஒரு உறவு முறை.  “பய்யா, இம்லி சட்னி (புளிப்பு சட்னி), ‘பய்யா,  தீக்கா’  (காரம்),  ‘பய்யா, மீட்டா  (இனிப்பு) சட்னி…’ என்று ஏகப்பட்ட நேயர் விருப்பம் வேறு.

நான் என் ஹஸ்பெண்டை  செலக்ட் பண்ணியதே பானிபூரி திங்கறச்சேதான்.  நான் முப்பது முடிக்கறதுக்குள்ள ‘அவன்’  (அவுரு, இவுரு இதெல்லாம் பாட்டிங்க காலத்துப் பழக்கம்..கொடுத்து வச்ச தாத்தாங்க)  நாப்பது தின்னுட்டான்.   அப்பவே டிசைட் பண்ணிட்டேன்.  இவன்தான் நமக்கு செட்டாவான்னு….” கர்வமாக ப்ரீத்தி சொல்கிறாள்.

பெயரைப் போடக் கூடாது என்ற கண்டிஷனுடன்,  ஒரு தாதர் பகுதித் தமிழர் பகிர்ந்து கொண்ட சீக்ரட்,  “எங்க First நைட்டில் பால் பழம் இதெல்லாம் கிடையாது.   பானிபூரி, வடாபாவ் கண்டிப்பா இருக்கணும்னு wife சொல்லிட்டா….”  பயங்கரச் சிரிப்புடன் சொல்கிறார்.

மும்பையின் நாடித் துடிப்பே பானிபூரிபேல்பூரிபாவ்பாஜி, வடாபாவ் தான் !  பத்து ரூபாய்க்குள் முடிந்து விடும்.  டிஃபனாகவும் சாப்பிடலாம்.   இன்னிக்கு டின்னர் இதுதான் என்றும் சாப்பிடலாம்.  சுடச்சுட கண்ணெதிரே பரிமாறப்படும்.  ஈஸி,  quick அண்ட் பெஸ்ட் + எக்கனாமிகல் வெரைட்டி.

சில மும்பை பிரத்யேக உணவு வகைகளின் சரித்திரத்தை அடுத்த பதிவில் பார்ப்போமா ?

–டேஸ்டி டூர் தொடரும்

Advertisements