நண்பர் கோபால் கொஞ்ச நாளைக்கு அப்புறம் ஒரு பதிவை அனுப்பி இருக்கிறார். அவருக்கு நன்றி!

————————————————————————————–

வாழ்க்கையில் சில விஷயங்களில் பிடிப்பு இல்லையென்றாலும், சாப்பாடு என்றால் ஒரு வித இனம் புரியாத ஈர்ப்பு உண்டாகிவிடும். எங்கு போனாலும், சாப்பாடு கிடைத்தால் மனது கும்மாளமிடும். அந்த சின்ன வயதில் நன்றாக சாப்பிட ஒரு வித எதிர்பார்ப்பை மனது உருவாக்கிக் கொண்டு, எதுவும் வேண்டாம் என்று சொல்வதற்குண்டான பக்குவ நிலையை தயார் படுத்திக்கொள்ளவில்லை. கூடுமான வரை கல்யாணங்களுக்கு, சடங்குகளுக்கு, கோவில் திருவிழாக்களுக்கு, பக்கத்து ஊரில் நடக்கும் சீதா கல்யாண வைபோபவங்களுக்கு என பட்டியல் போட்டு இவற்றை தாக்கியதுண்டு.

இது போன்ற விழாக்களுக்கு பொது அழைப்பு இருக்குமென்றாலும், சும்மா சாப்பிடக் கூடாது என்ற ரோஷமான கொள்கையை பிரசவ வைராக்கியமாக வைத்துக் கொண்டு, எல்லோருக்கும் ஒரு இரண்டு பந்திக்கு தண்ணீர் சேந்தி கொடுத்துவிட்டு சாப்பிட்டுவிடுவேன். வைராக்கியத்தில் இரண்டு வகை உண்டு, ஒன்று பிரசவ வைராக்கியம், இன்னொன்று மயான வைராக்கியம். இதில் பிரசவ வைராக்கியம் என்பது பெண்கள் பிரசவத்தின் போது ஏற்படும் இன்பம் கலந்த துன்பத்தால் இனி மேல் குழந்தை பெற்றுக்கொள்ளக்கூடாது என்று சபதமேற்று, பின் அதை மறப்பது. மயான வைராக்கியம் என்பது ஏதாவது இறந்தவர் வீட்டுக்கு போனால் நாமும் சாகப்போகிறோம் என்ற எண்ணம் மேலிட்டு இனி மேல் நேர்மையாக நடக்கவேண்டும் என்று எண்ணி, சபதமேற்று – இரண்டு நாளில் மறந்து மாமூல் வாழ்க்கைக்கு வருகிறோமே அதுதான். இவை இரண்டுமே தோன்றி மறையும் மனித அவலங்கள்.

இதில் நான் விருப்பமாக சாப்பிடும் மோர்க்குழம்பு பெரிய விருந்தில் உணவுப் பட்டியலில் இருக்காது. சில வீட்டு விருந்திலோ, தனிப்பட்ட முறையிலோதான் சமைக்கப்படும். சாம்பார், ரசம், மோர் என்ற வரிசையில் உள்ளதால் -மோர்க்குழம்பு என்று ஒன்று பாரம்பரியமாக பட்டியலில் இருப்பதில்லை. அதனைத் தகுதியிழக்க செய்தவர்கள் கற்கால மனிதர்களே. கல்யாண வைபவங்களிலும் இருக்காது, கோவிலில் நடக்கும் திருவிழாக்களிலும் இதற்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கும். முன்பெல்லாம், அதாவது 1978 to 1985 வருடம் என்று நினைவு பல இடங்களுக்கு பேருந்தில் பயணிக்கும்போது (தமிழ்நாட்டில்) உணவு விடுதிகளில் வெளியில் இன்று என்ன உணவுப் பட்டியல் என்று சிறு குறும்பலகையில் எழுதி வைத்திருப்பார்கள். அதை ஆர்வமாகப் படிப்பேன், சில விடுதிகளில் ‘மோர்க்குழம்பு’, ‘மிளகாய் வத்தல்’, என்றெல்லாம் எழுதியிருப்பதைப் பார்த்து நாக்கில் எச்சில் ஊறூம்.

எனக்கு மோர் என்றாலே ஒரு வித வெறுப்பு உண்டு, என்னை விரட்ட வேண்டுமென்றால் மோரை ஒரு கரண்டியில் கொண்டு வந்தால் ஓடிவிடுவேன். மோர்க்குழம்பு என்றால் ஒரு பிடி பிடிப்பேன். மோர் பிடிக்காது, தயிர் பிடிக்கும், வெண்ணை பிடிக்காது, நெய்பிடிக்கும் இது என்ன பிறவியோ தெரியவில்லை. எப்படி இந்தப் பிறவி வெட்டியாக ஓடிக் கொண்டிருக்கிறதோ, அதே போல் ஏன் பிடிக்கவில்லை என்பதற்கு காரணம் புரியவில்லை. பல வித சைவ உணவின் சுவையை ரசித்து ருசித்து சாப்பிட ஒரு ஆர்வம் உருவாக இரண்டு காரணங்கள். ஒன்று என் அம்மா மிகவும் அற்புதமாக சமைப்பார்கள். இரண்டு என் அப்பா எப்படிச்சமைத்தாலும் இன்னும் நன்றாக வரவேண்டும் என்பார்.

இதில் மோர்க்குழம்பு பல வகைகளில் செய்யப்படும். வறுத்து அரைத்த மோர்க்குழம்பு, பருப்புருண்டை மோர்க்குழம்பு, நீர்த்த மோர்க்குழம்பு, வெந்தய மோர்க்குழம்பு, முருங்கைக்காய் மோர்குழம்பு, திடீர் மோர்க்குழம்பு, பச்சை மோர்க்குழம்பு, மோர்க்குழம்பு ரசம், ‘திவச’ மோர்க்குழம்பு. (இந்த ‘திவச’ மோர்க்குழம்பை, தாத்தா (அ) பாட்டி ‘திவசத்தன்று’, அன்று மட்டும் மிளகை அரைத்து சேப்பங்கிழங்கு சேர்த்து செய்வர்கள் – இது தனிச் சுவை கொடுக்கும், இதைச் சாப்பிடுவதற்காக அன்று பள்ளிக்கூடம் போகமாட்டேன்) என்று பல வகையான சுவைக் குழம்புகளை கழனிப் பானையில் விழுந்த எலியாக குடித்திருக்கிறேன், தவறு சாப்பிட்டிருக்கிறேன். கேரளத்தில் மோர்க்கூட்டான் என்று ஒன்று வைப்பார்கள், கிட்டத்தட்ட நம்ம ரகம்தான் என்றாலும், அதன் சுவை சற்று மாறுபடும். இதில் கடைசிஅலங்காரத்தில் தேங்காய் எண்ணய் சேர்த்து ‘தாளித்து’ விடுவார்கள், இது சிலபேருக்கு பிடிக்காது. ஒரு முறை திருச்செந்தூர் போய்விட்டு திரும்ப வீடு வந்து சேரும்போது மிகவும் தாமதமாகி விட்டது, சிறுகுடலை பெருங்குடல் பசியால் திண்றுகொண்டிருந்தது. பசி கண்ணைக் கட்டினால் கோபம் கொப்பளிக்கும். அப்போது என் அம்மா பசக்கென்று துரிதமாக ஒரு மோர்க்குழம்பு வைத்து பசியாற்றினாள். அதன் சுவையும், நினைவுகளும் இன்னும் நினைவில் உள்ளன.

இந்த பல்கலை மன்னன்களில், பருப்பு உருண்டை மோர்க்குழம்பு மிகவும் பிரசித்தி. இதில் என் தோழன் வெங்குட்டு ஒரு பருப்பு உருண்டை வெறியன். அதுவும் மோர்க்குழம்பு பருப்பு உருண்டை என்றால் எங்குதான் ஒளித்து வைக்குமோ அவன் வயறு. அதற்காகவே நாங்கள் தவறுகள் செய்யும்போது பருப்புருண்டையை வாங்கித் தின்று எங்களை காட்டிக் கொடுத்துள்ளான் இந்த நவீன எட்டப்பன். இவனின் பருப்பு தாகத்தில் எங்கள் உறுப்பு சேதாரம் அடைந்துள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு பருப்புருண்டைகளை வாயில் இரண்டு பக்கவாட்டிலும் அடக்கிக்கொண்டு நடுவில் உள்ள ஓட்டையின் வழியே தொண்டைக்குள் ஒரு உருண்டையை ‘கோல்’ அடிப்பான். எண்ணி ஒரு 10 சாப்பிட்டால் எண்ணாமல் ஒரு 12 சாப்பிடுவான். நம் வீட்டில் பருப்பு உருண்டை மோர்க்குழம்பு என்றால் நாசியில் ஊசி போனது போல் மோப்பம் பிடித்து வந்துவிடுவான். அவனுக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை வெட்கம், மானம், அனுமதி கோரல். எங்கு யார் வீட்டில் இதைச் செய்தாலும், உருண்டு வந்துவிடுவான் உருண்டையை உள்ளே தள்ள. ரேஷன் கடையில் இன்று சர்க்கரை பட்டுவாடா செய்கிறார்கள் நீ போய் வாங்கி வா என்று அவன் அம்மா கூறினால் போகமாட்டான். இதே போல், பக்கத்து வீட்டு மாமி கூப்பிட்டு “டேய் வெங்குட்டு, கொஞ்சம் போய் வாங்கி வாடா, வரிசையில் நிக்க முடியலை, உனக்கு பருப்புருண்டை மோர்க்குழம்பு வைத்து தருகிறேன்” என்றால் இன்று போய் நாளை வா படத்தில் பாக்கியராஜ் செய்வது போல் பல தடைகளை உடைத்து துரிதமாக வாங்கிவருவான். ஆளும் கழுக் மொழுக் என்று இருந்ததால் நாங்கள் அவனுக்கு பருப்புருண்டை என்று பட்டப்பெயர் வைத்தோம்.

எனக்கும் பருப்புருண்டை பிடிக்கும் என்றாலும், எல்லோரிடமும் வெளிப்படையாகக் கேட்பதில் கொஞ்சம் தயக்கம். ஒரு முறை நாங்கள் திருநெல்வேலிக்கு பள்ளிக்கூட சுற்றுலா போனபோது, ஒவ்வொரு சாப்பாட்டுக் கடையாக ஏறி ஏறி இறங்கிக் கொண்டிருந்தான் வெங்குட்டு, வேறு எதற்கு பருப்புருண்டை கிடைக்குமா என்று பார்க்கத்தான். சில இடத்தில் அவர்கள் வேறு உருண்டையை காண்பித்தார்கள், சில இடத்தில் அவனை அடிக்காத குறைதான், இவன் ஒரு லூசு என்று முடிவெடுத்துவிட்டார்கள். ஊருக்கு போய் செய்து தருவதாக சொல்லித்தான் அவனை சமாதானப்படுத்த முடிந்தது. அவன்தான் எங்களின் பையை தூக்கிவருவான், இதை ஒரு சேவையாக செய்தான், அது மட்டுமல்லாது எதை கடையிலிருந்து வாங்கி வா என்றாலும் உடன் முகம் சுளிக்காமல் வாங்கி வருவான், அதனால் எங்களுக்கு அவனை சமாதானப்படுத்துவது ஒரு அத்தியாவசியத் தேவையாக இருந்தது.

இந்தப் பருப்புருண்டையை குழம்பிலும் போடுவார்கள், ஆனால், மோர்க்குழம்பில் போடும்போது ஒரு தனிவித மோகம். பல பேருக்கு பல வகை உணவில் ஆர்வம் இருக்கும், அதற்கு ஏன் என்ற காரணம் எல்லாம் கிடையாது. நாம் அறியாமலே, பழைய பாட்டை திடீர் என்று வாய் முணுமுணுக்கும், அதைக் கேட்க வேண்டும் என்று தோன்றும். அதே போல்தான் சாப்பாடும். சின்ன வயதில் பிடிக்காத உணவு வயதானவுடன் பிடிக்கும். என்ன ஒரு 500 பருப்புருண்டை சாப்பிட்டிருப்பேனா இது வரை, இருக்கலாம். படிப்பு காலம் முடியும் வரை சாப்பாடு பிரச்சனையில்லாமல் இருந்தது, பின் வேலைக்கு போக ஆரம்பத்தவுடன் மெஸ்ஸில் சாப்பிட்டதால் கொஞ்சம் கொஞ்சமாக கண்ணிலிருந்து மறைந்தது, ஆனால் எண்ணத்தில் பசுமையாக இருந்தது. பின் வெளிநாடு வந்து ஓரளவு வசதி வந்தவுடன், நாம் முயற்சித்தால் என்ன என்று கோதாவில் இறங்கினேன். அம்மாவிடம் செய்முறை விளக்கம் கேட்டேன். எழுதி வைத்து, கன்னி முயற்சியாக செய்து பார்த்தேன், திருப்தியாக இல்லை. முதல் தோல்வி. அதாவது இரண்டு தொழில் நுட்பக் கோளாறு வந்தது. ஒன்று, மோர் சூட்டில் பிரிந்து போனது, இன்னொன்று உருண்டை மிதக்கவில்லை. இரண்டையும் சரி செய்ய எண்ணி மீண்டும் பரிசோதனை முறையில் முயற்சித்தேன். கொஞ்சம் கெட்டியான மோரை தேங்காய் விழுதில் சேர்த்து அரைத்தேன். இளஞ்சூட்டை ஏற்றிக்கொண்டு, அரைத்த தேங்காய் விழுதை உருண்டையுடன் கொதிக்க வைத்து, வாணலியை இறக்கும் முன்பு மீதமுள்ள மோரைச் சேர்த்தேன், இபோது பிரமாதமாக வந்தது. வெற்றி! வெற்றி! நாலு நாளில் நாலு காகிதத்தை வைத்துக் கொண்டு அணுகுண்டை கண்டுபிடித்த வாத்தியார் போல் எக்காளமிட்டேன். பின் பலமுறை வெவ்வேறு விதமாக செய்து பார்த்து பலவற்றை கற்றுக் கொண்டேன்.

பல நாட்கள் கழித்து சமீபத்திய ஒரு நிகழ்வில் வெங்குட்டுவை பார்த்தேன். “என்னடா, இபோதெல்லாம் பருப்புருண்டை சாப்பிடுகிறாயா” என்றேன். முகத்தில் தேடி எடுத்த புன்னகையை, சோகத்தை குழைத்து தவழவிட்டான். ‘இல்லடா, வயசாகிவிட்டது ஒரு காரணம், கண்ணு ஒத்துழைக்கும் அளவு உடம்பும் ஒத்துழைக்கமாட்டேன்கிறது”, இதைத் தாண்டி ஒரு காரணம் இருக்குமோ என்று நினைத்து, “அதெனாலென்னடா, மாதத்திற்கு ஒரு முறை கூடவா சாப்பிட முடியவில்லை?” என்றேன். அதற்கு பதிலளித்த அவன், “என்ன செய்ய, என் மனைவிக்கு பிரசித்தி பெற்ற சமையல் பட்டியல்கள் செய்ய வராது. நானும் அழுத்தம் கொடுத்து தொந்தரவு செய்வதில்லை. பேச்சில் நாக்கை அடக்கமுடியாவிட்டாலும், சுவையில் அடக்கிக் கொண்டேன். சிறு வயதில் எல்லாம் நன்றாக அனுபவித்தாகிவிட்டது, அதனால் வருத்தமில்லை, பழைய நினைவுகள் மங்கிவிடவில்லை, எல்லாவற்றையும் கடந்து செல்வதுதானே வாழ்க்கை” என்றான்.

அவனைப் பார்த்துக் கொண்டே எண்ண ஓட்டத்தை நழுவவிட்டேன். எல்லா வித படைக்கப்பட்ட பொருளுக்கும் இரண்டு வித உபயோகம் உண்டு என்பார்கள். ஒரு பொருளினால், கெட்டதும், நல்லதும் ஒருங்கே வரும். உடம்பில் எந்தக் கழிவை வெளியேற்ற உறுப்பு தேவையோ அதே உறுப்பினால் ஒரு உயிர் உற்பத்தியாகிவிடுவது மஹேசனின் மஹிமை. அதே போல் எந்த உடம்பிற்கு ‘வேண்டும்’ என்று தோன்றும் உணவு, ஒரு கட்டத்தில் அதே ‘உடம்பினால்’ வெறுக்கப்பட்டுவிடுகிறது. இந்த எழுதாக்கிளவியாகிய தத்துவத்தைத்தான் வெங்குட்டு யதார்த்தமாகச் சொன்னான். “இந்த தத்துவத்தையெல்லாம் என்னிடம் கொண்டு வந்து போணி பண்ணாதே” என்றது என் மனம். இலங்கை-இந்திய கூட்டுத் தயாரிப்பை போல், என் மனதும், உடம்பும் கை கோர்த்து, “நான் விடுவதாக இல்லை” என்றது.

எப்போது பருப்புருண்டையை பார்த்தாலும், கர்ணன் படத்தில் தேவிகாவிற்கு நாயகனின் முகம் ‘நிலவில்’ வந்து மறைவதுபோல என் நண்பணின் எண்ணச் சிதறல்கள் வந்து போவதை தவிர்க்க முடியவில்லை. நான் ஒரு வேளை சின்ன வயது வெங்குட்டுவாக மாறிவிட்டேனோ? காலந்தான் பதில் சொல்லவேண்டும்!

இனி எனக்குத் தெரிந்த சமையல் பக்குவத்திலிருந்து மோர்க்குழம்புகளில் ஒரு தினுசு, உங்களுக்காக:
பருப்புருண்டை தயாரிப்பது எப்படி?
ஒரு சிறிய டம்ளர் துவரம்பருப்பு, ஒரு தேக்கரண்டி அரிசி ஆகியவற்றை சேர்த்து ஊற வைத்துக்கொள்ளவும். பின் அதை அரைக்கும்போது மிளகாய் வத்தல், பெருங்காயம், உப்பு சேர்த்து அரைத்த விழுதில் கொஞ்சம் கட்டித் தன்மைக்காக அரிசி மாவு சேர்த்து கட்டியாக வைத்துக் கொள்ளவும். பின் வாணலியில் எண்ணையில் கடுகு வெடித்ததும், அரைத்த விழுதை கொட்டி, (கொஞ்சம் எண்ணை அதிகமாக விடவும் அப்போதுதான் ஒட்டாமல் உதிர், உதிராக வரும், சுவையும் கூடும்), உதிராக வந்தவுடன் அடுப்பை அணைத்து ஆற விடவும். எலுமிச்சை அளவுக்கு சிறு உருண்டையாகப்பிடித்து, இட்லி பானையில் வேக வைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

மோர்க்குழம்பு தயாரிப்பது எப்படி?

தேவையான சாமான்கள்: ஒரு தேக்கரண்டி: ஜீரகம், அரிசி, கொத்துமல்லி விதை, 3 மிளகாய்ப்பழம் (தேவைப்பட்டால் காரத்தை கூட்டி குறைத்துக் கொள்ளவும்). கால் தேக்கரண்டி வெந்தயம், ஒரு மூடி தேங்காய், கட்டியான தயிர் அல்லது புளித்த மோர்.

செய்முறை: ஜீரகம், அரிசி, 3 மிளகாய்ப்பழம், கால் தேக்கரண்டி வெந்தயம், ஒரு மூடி தேங்காய் இவற்றை 2 கரண்டி எண்ணையில் வறுத்துக் கொள்ளவும், பின் தேங்காயைச் சேர்த்து அரைக்கும்போது அரவையில் தண்ணீருடன் கொஞ்சம் மோரை சேர்க்கவும், கட்டியான தயிர் அல்லது புளித்த மோரை கரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதை கொதிக்க விடும்போது உருட்டி வைத்த உருண்டைகளை சேர்க்கவும். மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை சேர்க்கவும். ஒரு கொதி வந்த பின், மீதமுள்ள மோரை சேர்த்து இளஞ்சூட்டிலேயே இறக்கிவிடவும் (உருண்டைகள் மிதக்க வேண்டும்). பின் பச்சைக் கொத்துமல்லி தழைகளை சிறிதாக வெட்டிப் போடவும் (கத்திரிக்கோலை வைத்து அலம்பிய தழைகளை அப்படியே வெட்டிப் போடலாம்). நாலு மோர் மிளகாய் வற்றலை நன்றாக வறுத்து, கொஞ்சம் கருவேப்பிலை, சேர்த்து தாளித்து பெருங்காய கரைசலுடன் கொட்டவும். பருப்புருண்டை மோர்க்குழம்பு தயார். அலங்கார வேலைகள் முடிந்தவுடன் பார்த்தால், பூனையின் கண்கள் போல் எண்ணை மிதக்கவேண்டும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: நண்பர்கள்->கோபால் பதிவுகள்

கோபாலின் முந்தைய பதிவுகள்:
நடிகை காஞ்சனா – அன்றும் இன்றும்
தேவன்: தமிழ் எழுத்துலக ஜாம்பவான்
பள்ளிக்கூடம், பரீட்சை, மாலைமுரசு
மருது பாண்டியர் பற்றி உ.வே. சாமிநாதய்யர்
பழமொழி விளக்கம் – அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி உதவார்
டைம் பாஸ் கவிதைகள்
ரெகார்ட் டான்ஸ் பார்த்த கோபால்
கோபாலின் நெல்லிக்காய் நினைவுகள்

Advertisements