அவரை சந்தித்த அனுபவத்தின் முதல் பகுதி இங்கே.

பிறகு எல்லாரும் ஒரு ரெஸ்டாரன்ட் கிளம்பிச் சென்றோம். அங்கே informal ஆக பேசிக்கொண்டிருந்தோம். அவர் ஒரு “ஹிந்துத்வவாதி”, பா.ஜ.க.வின் ஹிந்துத்துவம் போதவில்லை என்று நினைப்பவர் என்று அங்கேதான் தெரிந்துகொண்டேன். அங்கே வந்த பலரும் அப்படி நினைத்தவர்கள்தான் என்று தெரிந்தது. நானோ ஹிந்துத்வா எதிர்ப்பாளன். அப்புறம் எனக்கு இந்த சபை நாகரீகம் எல்லாம் கிடையாது. அதனால் எனக்கு உறுதியான கருத்து உடைய சிதம்பரம் கோவில் விஷயத்திலிருந்து ஆரம்பித்தேன்.
ஆர்வி: சிதம்பரம் கோவிலில் தீட்சிதர்கள் தமிழ் பாட்டு பாடக்கூடாது என்று சொல்வதை எப்படி நியாயப்படுத்துகிறீர்கள்?
சாமி: சிதம்பரம் கோவில் தீட்சிதர்களின் சொத்து.
ஆர்வி: மிச்ச கோவில்கள் எல்லாம் கோவில் அர்ச்சகர்களின் சொத்தாக இல்லாதபோது இது மட்டும் எப்படி தீட்சிதர்களின் சொத்தாக இருக்க முடியும்?
சாமி: எந்த கோவிலும் அரசின் சொத்தாக இருக்க முடியாது. அரசியல் சட்டம் கோவில் (மற்றும் மசூதி, சர்ச், குருத்வாரா) ஆகியவற்றின் நிர்வாகம் சரி இல்லாதபோது அரசு நிர்வாகத்தை ஏற்கும் உரிமை அளிக்கிறது. ஆனால் நிர்வாகத்தை சரி செய்த பிறகு அரசின் கண்ட்ரோலில் கோவில் இருக்கக் கூடாது. இதற்காக நான் இன்னொரு கேஸ் போட்டிருக்கிறேன். (திருப்பதி கோவில் சம்பந்தப்பட்ட கேசாம்) கோவில்களை முக்கிய மடாதிபதிகள் பங்கு பெற்றுள்ள “ஹிந்து தர்மிக் சமாஜ்” அமைப்பின் கண்ட்ரோலில் கொண்டு வரலாம்.
ஆர்வி: தமிழர்கள் பணத்தில் கட்டப்பட்ட கோவில்; அங்கே தமிழ் பாட்டு கூடாது என்பது அநியாயம் இல்லையா?
சாமி: மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் போய் தேவாரம் பாட முடியுமா? அங்கே அதன் விதிகளின் படித்தான் நடக்க வேண்டும்.
ஆர்வி: மைக்ரோசாஃப்ட் ஆன்மீக அமைப்பு இல்லை. கோவிலில் தேவாரம் பாடப்படுவது எந்த முறையில் தவறு?
சாமி: கோவிலில் தேவாரம் பாடப்படுவது ஆன்மீகம்தானா இல்லையா என்ற கேள்விக்குள் நான் போக விரும்பவில்லை. தீட்சிதர்களின் நிர்வாகம் சரி இல்லை என்றால் ஹிந்து தர்மிக் சமாஜிடம் நிர்வாகத்தை கொடுப்போம். அவர்கள் தேவாரம் பாடலாமா கூடாதா என்று தீர்மானித்துக் கொள்வார்கள். இதை சட்ட ரீதியாகத்தான் பார்க்க வேண்டும். இங்கே தமிழ் பாட்டு வேண்டும் என்று மக்கள் ஒன்றும் பொங்கி எழவில்லையே!
ஆர்வி: ஒரே ஒருவர் மட்டும்தான் தமிழ் பாட்டு பாட வேண்டும் என்று கேட்கிறார் என்றே வைத்துக் கொள்வோம். அதனால் என்ன? சட்டம் எத்தனை பேர் கேட்கிறார்கள் என்பதைப் பற்றி இல்லையே? மேலும் அவர் கேட்பது சரிதானே? அதை எந்த விதத்தில் மறுக்க முடியும்? அப்புறம் சட்டம் பேசுகிறீர்கள். மக்கள் பிரதிநிதிகள் கேட்கிறார்கள்; எம்.எல்.ஏக்கள் கேட்கிறார்கள்; எம்.பி.க்கள் கேட்கிறார்கள்; அவர்கள்தானே சட்டப்படி மக்கள் விருப்பத்தை பிரதிபலிக்கிறவர்கள்?

அதிக நேரம் இந்த ஒரே விஷயத்தில் செலவழிக்கப்பட்டுவிட்டதாலும், என் ஒருவன் கேள்விகளுக்கு மட்டுமே பதில் சொல்ல முடியாது என்பதாலும், இங்கே முடித்துக் கொள்ள வேண்டியதாயிற்று. ஆனால் சாமியின் பதில்கள் திருப்தி தரவில்லை. தமிழ் வேண்டும் என்று மக்கள் பொங்கி எழ வில்லையே என்கிறார். சமஸ்கிருதம் வேண்டும் என்று எப்போது மக்கள் பொங்கி எழுந்தார்கள்? அட தமிழில் பாடலாம் என்று தீர்ப்பு வந்தபோது சிதம்பரத்தில் ஏதாவது கடை அடைப்பு, பந்த், ஊர்வலம் நடந்ததா? தலித்கள் ஆலயப் பிரவேசம் செய்யலாம் என்று அரசு சட்டம் இயற்ற முடியும் என்றால் தேவாரம் பாடலாம் என்று சட்டம் இயற்றும் உரிமை மட்டும் எப்படி இல்லாமல் போகும்? நிர்வாகத்தை ஹிந்து தர்மிக் சமாஜிடம் தர வேண்டுமாம், அப்புறம் அவர்கள் முடிவு செய்வார்களாம் – ஏன் இப்போதே தேவாரம் பாடலாம் (அல்லது பாடக்கூடாது) இதுதான் எங்கள் நிலை என்று சொல்வதுதானே? இவர்களிடம் நிர்வாகத்தை கொடுத்துவிட்டு அப்புறம் அவர்கள் நியாயமாக நடந்து கொள்வார்கள் என்று நம்பிக்கை தரும்படி எந்த மடம் நடந்துகொண்டிருக்கிறது? ஊரில் இன்னும் முப்பது நாற்பது வேத பாடசாலைகளாவது இருக்கிறது. எந்த வேத பாடசாலையில் ஒரு தலித்துக்கு, அட ஒரு அனாதைக்கு, அட விடுங்கள் ஒரு பிராமணப் பெண்ணுக்கு வேதம் சொல்லித் தரப்படுகிறது? எனக்குத் தெரிந்து சேரிகளுக்குப் போன ஒரே மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதிதான். அந்த காஞ்சி மடம் நடத்தும் வேத பாடசாலையில் கூட நிச்சயமாக இது நடக்கவில்லை. எல்லா மடங்களிலும் ஒரே ஜாதிக்காரர்கள்தான் தொடர்ந்து மடாதிபதி ஆகிறார்கள். திருவாவடுதுறை ஆதீனத்தில் ஒரு பிராமணனோ தலித்தோ மடாதிபதி ஆகிவிட முடியுமா? (அய்யாவழி, நாராயண குரு, ராமகிருஷ்ணா மிஷன் அமைப்புகளில் எப்படி என்று தெரியவில்லை, தெரிந்தவர்கள் சொல்லலாம்.) அப்படிப்பட்ட மடாதிபதிகள் (அதுவும் சங்கர மடங்கள் மட்டுமே என்று நினைக்கிறேன், தெளிவாகத் தெரியவில்லை.) நிறைந்த ஒரு அமைப்பு பெரிதாக கிழித்துவிடும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. என் போன்றவர்களின் அவநம்பிக்கையைப் போக்கவாவது இப்போதே இந்த விஷயத்தில் என்ன நிலை என்று இந்த தார்மிக் சமாஜ் சொல்லிவிடலாமே! என் நம்பிக்கை பொய்யானால் என்ன வருத்தமா படப்போகிறேன்?

ஆனால் அவர் கடைசி வரை மசூதியில் தமிழில் அது என்னய்யா ஃபாத்தியாவா, ஏதோ ஒன்று, ஓதுவார்களா, சர்ச்சில் இப்படி கேட்க முடியுமா என்று சொல்லவே இல்லை. அது எனக்கு பிடித்திருந்தது. அப்படி கேட்பது எனக்கு எப்போதுமே எரிச்சல் ஊட்டும் விஷயம். நீ குளித்து சுத்தமாக இருக்கலாமே என்று சொன்னால் பக்கத்து வீட்டுக்காரன் குளிக்கவில்லையே என்று கேட்பது போன்ற முட்டாள்தனம் அது. ஒன்று மதச்சடங்குகள் எந்த மொழியில் நடத்தப்பட வேண்டும் என்று தீர்மானிப்பது பூசாரிகளின் உரிமை; இல்லை பக்தர்களின் உரிமை. அடுத்த மதக்காரனின் உரிமை இல்லையே!

தொடரும்…

தொகுக்கப்பட்ட பக்கம்: அரசியல், ஆளுமைகள்

தொடர்புடைய பக்கங்கள்:
சுப்ரமணிய சாமியை சந்தித்தேன் பகுதி 1, பகுதி 3, பகுதி 4

சிதம்பரம் கோவிலும் தமிழ் வழிபாடும் பகுதி 1, பகுதி 2

Advertisements