ஜன கண மன அதி நாயக ஜய ஹே என்ற பாட்டை எழுதியவர் ரவீந்த்ரநாத் தாகூர் என்று எல்லாருக்கும் தெரியும். பாட்டிற்கு மெட்டு போட்டது யார்?

காப்டன் ராம்சிங் தாகூர். கேள்விப்பட்டதே இல்லை இல்லையா?

காப்டன் ராம்சிங் சுபாஷ் சந்திர போஸ் தலைமை தாங்கிய இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியவர். 1943-இல் நேதாஜி இந்திய தேசிய ராணுவத்தின் ரேடியோ ஸ்டேஷனுக்கு வந்தாராம். தாகூரின் பாட்டிற்கு மொழிபெயர்ப்பு ஒன்று இருந்ததாம். அதற்கு தூன்குபவர்களையும் எழுப்பக் கூடிய martial tune ஒன்று போட வேண்டும் என்று இவரிடம் சொன்னாராம். இவர் போட்ட மெட்டுதான் இன்றும் பாடப்படுகிறது. சுதந்திர தினத்தன்று – 1947-இல் – நேரு ஆங்கிலேயக் கொடியை இறக்கி இந்தியக் கொடியை ஏற்றும்போது இவரேதான் இந்த மெட்டை வாசித்தாராம். (ஜன கண மனவா, இல்லை மொழிபெயர்ப்பா என்று தெரியவில்லை.)

மொழிபெயர்ப்பு ஷுப் சுக் செய்ன் கி பர்கா பர்சே பாரத் பாக்ய ஹை ஜாகா என்று தொடங்குகிறது. மொழிபெயர்ப்பாளர்களில் நேதாஜியும் ஒருவராம். டெல்லி சலோ என்று ஒரு கிராமஃபோன் ரெகார்ட் நேதாஜிக்கு பிடித்த பாட்டுகளோடு – இந்த பாட்டு உட்பட – வந்திருக்கிறதாம். யாரிடமாவது இருந்தால் பாட்டுகளை அப்லோட் செய்யுங்கள்!

வழக்கம் போல காப்டன் ராம்சிங்கை எல்லாரும் மறந்துவிட்டார்கள். 1997-இல் வந்த கட்டுரையில் அவருக்கு கிடைக்க வேண்டிய பென்ஷன் கூட வரவில்லை என்று எழுதி இருக்கிறார்கள். என்ன ஆனாரோ? 2002-இல் இறந்திருக்கிறார். செத்த பிறகு சிலை வைப்பார்கள்!

காப்டன் ராம்சிங் மெட்டமைத்த இன்னொரு புகழ் பெற்ற பாட்டு – கதம் கதம் படாயே ஜா. இதுதான் இந்திய தேசிய ராணுவத்தின் marching song! பாட்டை கீழே கேட்கலாம்.

இதுதான் ஒரிஜினல் பாட்டா இல்லை சினிமாவுக்கு மாற்றிவிட்டார்களா என்று சந்தேகமாக இருக்கிறது. எப்படி இருந்தாலும் கேட்கும்போது உற்சாகம் வரவழைக்கும் பாட்டு!

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

தொடர்புடைய சுட்டிகள்:
காப்டன் ராம்சிங் தாகூர் – விக்கி குறிப்பு
காப்டன் ராம்சிங்கைப் பற்றிய ரீடிஃப் சுட்டி
ட்ரிப்யூன் பத்திரிகையின் ஆபிச்சுவரி
ஷுப் சுக் செய்ன் கி பர்கா பர்சே – முழு மொழிபெயர்ப்பு (ஹிந்தி வார்த்தைகள், ஆங்கில எழுத்துகளில்)

Advertisements