ஆலயப் பிரவேசப் புகழ் வைத்யநாத ஐயர் பற்றி முன்னாள் அமைச்சர் கக்கன் எழுதியதை எங்கே பார்த்தேன் என்று கூட நினைவில்லை. ஆனால் படிக்கும்போது நெகிழ்ச்சியாக இருக்கிறது.

வைத்யநாத ஐயர் அந்தக் கால காங்கிரஸ்காரர். 1939-இல் அவர் ஆறு “தாழ்ந்த” ஜாதிக்காரர்களை அழைத்துக்கொண்டு போய் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆலயப் பிரவேசம் செய்தார். அந்த ஆறு பேரில் கக்கனும் ஒருவர். ஆறு பேரில் ஐந்து பேர் தலித்கள், ஒருவர் சாணார். (சாணாரும் நாடாரும் ஒன்றுதானா?) வைத்யநாத ஐயருக்கு இதனால் கடும் எதிர்ப்பு. அடி உதை கூட விழுந்ததோ என்னவோ தெரியவில்லை. ஆனால் சண்டாளர்களை கோவிலுக்கு கூட்டிப் போய் கோவிலின் புனிததத்தை கெடுத்தானே பாவி என்று கும்மிப்பாட்டு எல்லாம் எழுதி அமோகமாக விற்றிருக்கிறதாம். இன்றைக்கு ஃப்ளெக்ஸ் போர்டு மாதிரி அன்றைக்கு கும்மிப்பாட்டு போலிருக்கிறது!

ஐயர் 1890-இல் பிறந்தவர். உப்பு சத்யாகிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் எல்லாவற்றிலும் கலந்துகொண்டு ஜெயிலுக்கு போனவர். உப்பு சத்தியாகிரகத்தில் வேதாரண்யத்தில் போலீஸ் அவரை அடித்து துவைத்துவிட்டார்களாம். குடுமி, பூணூல், பஞ்சகச்சம் என்று இருப்பாராம். காமராஜ்-ராஜாஜி கோஷ்டிகள் என்று தமிழக காங்கிரஸ் இருந்தபோது இவர் ராஜாஜி கோஷ்டி. காங்கிரசிலிருந்து விலகி இருந்த ராஜாஜி மீண்டும் காங்கிரசுக்குள் வர விரும்பியபோது அதற்காக தீவிரமாக பாடுபட்டு காமராஜோடு சண்டை போட்டு இதை சாதித்தவர்களில் இவரும் ம.பொ.சி.யும் முக்கியமானவர்கள்.

எந்தப் பதவியும் – எம்.எல்.ஏ., எம்.பி. என்று – வகித்த மாதிரி தெரியவில்லை. கிடைத்திருக்கக் கூடிய வாய்ப்புகளை கக்கனுக்கு விட்டுக் கொடுத்தாரோ என்னவோ. கக்கனுக்கும் இவருக்கும் அப்பா-பிள்ளை போன்ற உறவு இருந்திருக்கிறது. ஹரிஜன ஜாதியில் பிறந்த கக்கன்தான் இவருக்கு இறுதி சடங்குகளையே செய்தாராம்!

உண்மையிலேயே ஜாதி பார்க்காதவர் போலிருக்கிறது. முப்பதுகளிலேயே வீட்டு சமையல் அறையில் ஹரிஜன்கள் சாதாரணமாக புழங்கினார்கள் என்று கக்கன் சொல்கிறார். ஆச்சரியமான விஷயம். எழுபதுகளில் கூட சமையல் அறை மடி ஆசாரம், அங்கே பிற ஜாதியினர் வரக்கூடாது என்று சொல்லும் பிராமணக் குடும்பங்களை பார்த்திருக்கிறேன்.

ஓவர் டு கக்கன்!

அரிஜனங்களின் தந்தை

பி.கக்கன்

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அரிஜன ஆலயப் பிரவேசம். பெரியவர்கள் பலர் அதற்கு எதிர்ப்பாக இருந்தார்கள். மதுரையின் வீதிதோறும் கூட்டம் போட்டு, அரிஜன ஆலயப் பிரவேசத்தைப் பற்றிக் கண்டித்துப் பேசினார்கள். ”அரிஜனங்கள் ஆலயத்துக்குள் நுழைந்துவிட்டால் இந்து மத தர்மமே சீர்குலைந்து போய்விடும்; அதனால் அவர்களை ஆலயப் பிரவேசம் செய்ய அனுமதிக்கக்கூடாது; அதுவும், வைத்தியநாதய்யர் போன்ற ஒரு ஜாதி இந்துவின் தலைமையில் அந்தக் காரியம் நடக்க அனுமதிக்கவே கூடாது” என்றெல்லாம் ஆவேசமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

எங்களுக்கெல்லாம் உள்ளூர சிறிது தயக்கமாகவே இருந்தது. ஆலயப் பிரவேச தினத்தன்று எங்கே பெரிய சச்சரவும், தகராறும் ஏற்பட்டுவிடுமோ என்று நினைத் துக்கொண்டிருந்தோம். ஆனால் வைத்தியநாதய்யரோ, அதைப் பற்றியெல்லாம் சிறிதும் கவலைப் படாமல், அதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தார்.

குறிப்பிட்ட தினத்தன்று ஆலயப் பிரவேசம் நடந்து முடிந்தது.

தெய்வாதீனமாக எவ்விதமான குழப்பமும் ஏற்படவில்லை. ஆலயப் பிரவேசம் முடிந்து அனைவரும் திரும்பி வந்துகொண்டிருந்தோம். அப்போது, வழியில் நின்றிருந்த ஒரு பெரியவர் வைத்தியநாதய்யரைப் பார்த்து, ”நீர்தான் அரிஜனாகிவிட்டீரே! உமக்குப் பூணூல் எதற்கு?” என்று சத்தம் போட்டுக் கோபமாகக் கூறினார்.

ஐயர் அவர்கள் ஒன்றுமே பேசாமல் சிரித்துக்கொண்டார்.

முப்பது, முப்பத்தைந்து வருஷங்களுக்கு முன்பு, ஜாதிக் கொடுமை தீவிரமாக இருந்த நிலைமை எப்படி இருந்திருக்கும் என்று சொல்லவேண்டியதில்லை. ஆனால், அந்தக் காலத்திலேயே வைத்தியநாதய்யர் வீட்டுக்குள் அரிஜனங்கள் சர்வ சுதந்திரமாகப் போய் வரமுடியும். வீட்டுச் சமையலறை வரையில் கூட சென்று ஏதேனும் சாப்பிட்டுவிட்டு வருவார்கள்.

அவரைப் போல்தான் அவரது மனைவியாரும், அரிஜன மக்களின் நன்மைக்காக உழைத்தவர்.

அய்யரிடம் பண உதவியும், மற்ற உதவிகளும் பெற்றுப் படித்த அரிஜன மக்களில் பலர் இன்று பெரிய பெரிய நிலையில் இருக்கிறார்கள். நான் பொதுப் பணியில் ஈடுபட்டு, பிற்பாடு அரசியல் உலகத்துக்கு வருவதற்குப் பிள்ளையார் சுழி போட்டவரே வைத்தியநாதய்யர் அவர்கள்தான்.

அரிஜன சேவையை விட வைத்தியநாதய்யருக்குப் பிடித்த பொதுச் சேவை வேறு எதுவும் இல்லை. அதனால்தான் அவரை ‘அரிஜனங்களின் தந்தை’ என்று போற்றுகிறார் கள்.

அவர் மறைந்த பிறகு, அவரது இறுதிச் சடங்குக்கு நான் சென்றிருந்தேன். ஒரு தந்தைக்கு ஒரு மகன் செய்யக்கூடிய இறுதிச் சடங்குகள் அனைத்தையும் செய்யும் பாக்கியம் எனக்குக் கிட்டியது.

கக்கன் இன்றும் நேர்மையான அரசியல்வாதிக்கு உதாரணமாகச் சொல்லப்படுபவர். காங்கிரஸ் காலத்தில் மந்திரியாக இருந்தவர். இறக்கும்போது வசதிக் குறைவினால் அரசு மருத்துவமனையில்தான் அட்மிட் செய்தார்கள். எம்.பி., மந்திரி, எதிர்கட்சித் தலைவர், எம்.எல்.ஏ. என்று பல பதவிகள் வகித்த பின்னும் இந்த நிலை!

இது கக்கனின் நூற்றாண்டு. இவர், ஐயர் போன்றவர்களுக்கு ஒரு unbiased biography வந்தால் நன்றாக இருக்கும். unbiased ஆக இருப்பது முக்கியம். உதாரணமாக கக்கன் நேர்மையான அரசியல்வாதி, சரி. நல்ல நிர்வாகியா? அவரை ஒரு டோக்கன் ஹரிஜனாக காங்கிரசில் வைத்திருந்தார்களா? இதற்கெல்லாம் உண்மையான பதில் அதில் இருப்பது அவசியம். நம்மூரில் biography என்றால் புகழ்ந்து எழுத வேண்டும் என்று ஒரு விதி இருக்கிறது!

கக்கன், ஐயர் இருவருக்கும் அரசு தபால் தலை வெளியிட்டிருக்கிறது.

பிற்சேர்க்கை: எழுத்தாளர் இரா. முருகன் தந்த தகவல் – திரு வைத்தியநாதய்யரின் மகளும் மருமகன் திரு ஸ்தாணுநாதனும் சென்னை தி.நகர் மோதிலால் தெருவில் எங்கள் பலமாடிக் குடியிருப்பில் இருந்தார்கள். எளிமையான நல்ல மனதுக்காரர்கள். திரு.ஸ்தாணுநாதன் ரயில்வே போர்ட் அங்கத்தினராகவும் அதற்கு முன் மத்திய ரயில்வேயில் உயர்ந்த பதவியிலும் இருந்து ஓய்வு பெற்றவர். தற்சமயம் இவர்கள் சென்னை தி.நகர் தக்கர் பாபா வித்தியாலத்தை நிர்வகித்து வருகிறார்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

தொடர்புடைய சுட்டிகள்:
வைத்யநாத ஐயர் பற்றிய விக்கி குறிப்பு
கக்கன் பற்றிய விக்கி குறிப்பு

Advertisements