கோபாலின் நாஸ்டால்ஜியா பதிவுகள் – டாங்கர் பச்சடி பதிவு, ரெகார்ட் டான்ஸ் பதிவு எல்லாம் மிகவும் பாப்புலரானவை. அந்த வரிசையில் இன்னும் ஒன்று.

பள்ளிக்கூடத்திற்கு போக வேண்டுமென்றாலே கசப்பு மருந்து குடிப்பது போல்தான். எப்பொழுதும் விளையாட்டு மேல்தான் எண்ணம். அப்போதெல்லாம், “எலிமெண்ட்ரி” எனப்படும் ஐந்தாம் வகுப்பு வரை ஒரு பள்ளியும், “மிடில் ஸ்கூல்” எனப்படும் ஒண்ணிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஒன்றும், பின் “ஹை ஸ்கூல்” எனப்படும் 9ம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரையும் தனித்தனியாக நிர்வாகம் செய்யும் பள்ளிகளும் உண்டு. இதில் 1-8 வரை படித்துவிட்டு, 9லிருந்து மேற்படிப்பிற்கு அரசாங்கப் பள்ளிக்கூடத்திற்கு தாவி படிக்க வேண்டும்.

ஒண்ணாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பில் படிக்கும் போது “சிலேட்” எனப்படும் குட்டி கரும்பலகைதான் கொண்டு போக வேண்டும். அது முக்கால்வாசி கல்லில்தான் இருக்கும். அதை மிகவும் ஜாக்கிரதையாக கையாள வேண்டும், நல்ல கனமாக இருக்கும், உடைந்துவிட்டால் வேறுதான் வாங்கவேண்டும். ஒரு ஜென்மத்திற்க்கு ஒன்றுதான் வாங்கித் தருவார்கள். அதில் ‘சிலேட் குச்சி’ எனப்படும் விறைப்பான “சாக்” கொண்டு எழுத வேண்டும். 40 பீஸ் 5 ரூபாய். 10 பைசா கொடுத்து ஒரு குச்சி வாங்கிக் கொடுப்பார்கள். முழுப் பரிட்சை எனப்படும் (ஒண்ணாம் வகுப்பு/இரண்டாம் வகுப்பு final exam) போது, பலப்பத்தில் பெரிய கோழிமுட்டை போட்டு விகடன் சினிமா விமர்சனம் மாதிரி மதிப்பெண் போடுவார்கள் – அதை அழிக்காமல் வீட்டில் கொண்டு போய் காட்டவேண்டும். எல்கேஜி/யூகேஜி எல்லாம் கிடையாது. வரும் வழியிலேயே நான் ஒரு பலப்பத்தை எடுத்து 33 என்பதை 88 ஆக்கி பின்னாளில் நான் பெரிய ‘கே.டி’-யாக வரப்போகிறேன் என்று நங்கூரமிட்டேன். என் நண்பன், “டேய் இதெல்லாம் வேண்டாம், உங்கய்யா ஆசிரியிரிடம் விஜாரித்தால் உன் முதுகுத்தோல் உரிந்துவிடும்” என்பான். “போடா, அவர் என்ன இதெல்லாம் தாளில் எழுதியா வைத்திருக்கிறார்?” என்பேன். முக்கால்வாசி வாத்தியார்கள் அந்தத் தெருவிலேயே வசித்து வந்ததால், சந்திக்கும் போது என்ன பையன் எப்படி படிக்கிறான் என்று கேட்டு வைப்பார்கள். “படிப்பே வரல, இன்னும் கொஞ்சம் முனைப்பு வேண்டும்” என்று கூறினால் அந்த ஆசிரியருக்கு முன்னாலேயே ஒரு ‘பதம்’ நடக்கும். இப்படி 88 போட்டுவிட்டு, அப்பா காய்கறி வாங்க என்னை அழைத்துக் கொண்டு போனார். காய்கறி வாங்க போனால் நாம்தான் ஒரு பையை தூக்கிக் கொண்டு பின்னால் ஓடவேண்டும். அப்பொழுது எதிர்ப்பட்டார் அந்த 33. ஆஹா, மாட்டிக்கொண்டோமே, தப்பிக்கவும் முடியாதே ஆண்டவா என்று மனம் வெதும்பியது.

“என்ன சௌகர்யமா?” என்று கேட்டதோடு முடித்துக் கொண்டு, அவசரமாகப் போவதால் பின்னொரு முறை சந்திப்பதாகக் கூறி விடை பெற்றார். ஒரு வழியாய் கரணம் தப்பி மரணத்திலிருந்தும் தப்பினேன். இதன் பின்னால் யாரோ போட்டுக்கொடுக்க, வாத்தியார் “மதிப்பெண் போடும்போது யாரோ மாற்றுகிறார்கள் என்று தகவல் கிடைத்தது, யார் அப்படிச் செய்தார்கள் என்று எனக்குத் தெரியும், அவர்களாகவே கையைத் தூக்கி விடுங்கள்” என்றார். நான் கையை தூக்கவே இல்லை. இதன் பின் அவர் ஒரு உத்தியைக் கையாண்டார், மதிப்பெண் போடும்போது இரண்டு கோடுகளை -3- பக்கவாட்டில் போட்டார் – மாற்ற முடியாமல். இப்படி போட்டபோது நானும் இரண்டு பக்கவாட்டு கோடுகளை முடிவிலிருந்து பாதியாக அழித்துவிட்டு என் சித்து விளையாட்டை காட்டினேன். இப்படியாக நாளொரு “கோல்டும்” பொழுதொரு “மெடலுமாக” படிப்பில் முன்னேறினேன். இந்த “சிலேட்டை ஒருநாள் என் நண்பன் சண்டை போடும்போது நடுவில் மின்னல் வெட்டியதுபோல் உடைத்து விட்டான். அந்த பாதி “சிலேட்டை” வைத்து அந்த வருடத்தை ஓட்டினேன்.

மழைக்காலம் வந்தால் ஒரு ‘பீரீட்’ முன்னாலேயே யாராவது வந்து பசங்களை அழைத்து போய் விடுவார்கள். நமக்கு யாரும் வரமாட்டார்களா என்று மனம் ஏங்கும். காலை 9.30க்கு ஆரம்பம், பின் 11 மணிக்கு ஒரு சிறிய இடைவேளை, பின் 12.30லிருந்து 2 மணிவரை மதிய உணவு, பின் 4.20க்கு முடிந்துவிடும். பின் சனி, ஞாயர், சப்பு, சவரு எல்லாவற்றிற்கும் விடுப்புதான். இடைவேளையின் போது, பஞ்சு மிட்டாய், புளி இஞ்சி, இனிப்பு மிட்டாய், கைகடியார மிட்டாய் எல்லாம் வாங்கி சாப்பிடுவோம். பள்ளிக்கு எதிரே ஒரு மண் சுவர் இருக்கும் அதன் மேல் தான் 1 அடிக்கவேண்டும். அதில் வரிசையாக நின்று எவ்வளவு ஆழ் துளை போடுகிறோம் என்று போட்டி நடக்கும். காலையில் assembly நடக்கும், அதில் அறிவுரையெல்லாம் கூறுவார்கள் – முக்கால்வாசி நாள் எங்களுக்குள்ளே சிரித்துக் கொள்வோம். அதில் பிடிபட்டு அடி வாங்கியிருக்கிறோம்.

இப்படியாக ஐந்து/ஆறாவது வந்துவிட்டேன். ஒவ்வொரு வகுப்பிலும் பெரிய கரும்பலகை ஒன்று இருக்கும், நாளாக நாளாக அது பொலிவிழக்கும், அப்போது ஆசிரியர் அதற்கு பூச்சு கொடுக்கச்சொல்லுவார். அதாவது ஊமத்தை இலை, கத்தாழை இவற்றை தண்ணீர்விட்டு பாலக்கல்லில் உட்கார்ந்து கல்லை வைத்து மசித்து, கரும் மையாக ஆக்கி அந்த பலகை முழுவதும் அப்ப வேண்டும். இதற்கு கடைசி பீரியட் முழுவதும் நமக்கு இலவசம், படிக்கவும் வேண்டாம். ஆர்வத்துடன், சட்டையெல்லாம் கழட்டி, எல்லா கரும்பலகைக்கும் அடிப்போம்.

தேனீர் விருந்து:

ஒரு வகுப்பிலிருந்து இன்னொரு வகுப்பிற்கு போகும்போது “தேனீர் விருந்து” என்று மாணவர்களின் செலவில் வைப்பார்கள். வருடம் முழுவதும் பணத்தை சேர்த்து வைத்து ஒரு 5 ருபாய் வரை தேறும். ஆனால் நாங்களோ 15 ரூபாய் சேர்த்து IPL ‘மோதி’ போல் பண மமதை கொண்டோம். அதை வைத்து அனைத்து ஆசிரியர்களுக்கும் ஒரு 100 கிராம் அல்வா, கொஞ்சம் காராச்சேவு, ஒரு பழம், ஒரு குளிர்பானம். இதை ஒவ்வொரு வகுப்பிலும் போய் கொடுக்கவேண்டும். கடைசியில் நம்ம பங்கை சாப்பிடும்போது என்ன ஆனந்தம்! இதே போல் ஏழாம் வகுப்பில் நமச்சிவாயம் என்று ஒரு வாத்தியார் இருந்தார். மிகவும் அற்புதமான கலா ரசனை உள்ளவர். அவர் முதுகில் அடிக்கும் போது கூட மேலிருந்து கீழாக தடவுவார். ஆட்டுக்கடா மீசையை வருடும்போது ரசனையோடு பண்ணுவார். வீதியில் நடக்கும் போது வேட்டியின் ஒரு முனையை கையால் பிடித்துக்கொண்டு நடப்பார். தூய வெள்ளை ஆடையே உடுத்துவார். அவர் தோட்டத்தில் விளைந்த பழக்குலையை எங்களிடம் கொடுத்துவிடுவதாகவும், கடையில் என்ன கொடுப்போமோ அதை கொடுத்தால் போதும் என்றார். நாங்களோ பழம் எவ்வளவு நீளம் என்று கேட்க, அவரோ “இம்மாந்தடி இம்மான் நீளம்” என்று மல்யுத்த வீரர் போல் முழங்கையிலிருந்து அளவைக் காட்டினார். வாழைப்பழம் அவ்வளவு பெரியதா, நம்மமுடியவில்லையே என்றோம். அவரோ, “ஏலே, இது புது வகைல, இதைச் சாப்பிட்டா இரண்டு நா சாப்பிடவேண்டாம்ல” என்று கூறியபோது எங்கள் வாய் காண்டாமிருகமாகியது. ஆனால் அப்பழத்தை காண்பிக்க மறுத்துவிட்டார். கடைசியாக 9 ரூபாய்க்கு ஒத்துக்கொண்டு, ‘பார்ட்டி’ நடக்கும் நாளில் அறுத்துக் கொடுத்தார். மதுரையம்பதியிலிருந்து துரத்தப்பட்ட ஹேமநாத பாகவதர் போல் அப்பழத்தின் பருமன் எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பழம் கட்டைவிரல் அளவுக்கே இருந்தது. எங்களால் வேறு பழமும் தருவிக்க முடியாத நிலை. ‘என்ன சார்வாள் (அங்கு, ஆண்பால், பெண்பால் – எல்லா ஆசிரியரையும் இப்படித்தான் விளிப்பார்கள்) எங்களை இப்படி ஏமாற்றி விட்டீர்களே என்றபோது” அவரோ, மிருதுவாக “எலே 15 நாள் முன்னாடி பழுத்தபோது அப்படித்தாம்ல இருந்தது, இப்போ பறிக்கும்போது இப்படி ஆயிரிச்சில. போய் வேலைய பாருங்கலே” என்று விரட்டிவிட்டார். வேறு வழியில்லாமல், கண்ணில் கண்ணீரையும் தொண்டையில் குளிர்பானத்தையும் பாய்ச்சி ஆறுதல் அடைந்தோம். பார்ட்டி கனவு அதோடு தவிடுபொடியாகியது. அவர் நமக்கு வாத்தியாராக இருப்பதால் யாரிடமும் போய் அவதூறு கூறவும் முடியாமல் போனது.

பரீட்சைக்கு படித்தல்:
அப்போதெல்லாம் 8-ஆம் வகுப்பிற்கு மினி-பொதுத்தேர்வு உண்டு(ESLC). அதை உயர்நிலைப் பள்ளியில் போய் எழுதவேண்டும். ஆனால் வெற்றி, தோல்விக்கான முடிவுகள் நடுநிலைப்பள்ளியிலேயே அறிவிக்கப்படும். இதில் 9ம் வகுப்பு மிகவும் சுவாரசியமாக போகும். பத்து வந்தால் பொதுத்தேர்வுக்கான மன உளச்சல் அதிகம், ஆனால் இப்போது போல் அழுத்தம் இல்லை. 9-ல் வகுப்பு ஆங்கிலத்திற்க்கு சுப்பையா பிள்ளை என்று ஒரு வாத்தியார் வந்தார். பூசணிக்காயை நசுக்கியது போல் முகம், மாநிறம், வெள்ளைவெளேர் என்று சட்டை. பல்செட் பற்கள் வரிசையாக மின்னும். அடித்தால் அளவுகோலை எடுத்து அடிப்பார். அவருக்கு எல்லாமே அளவுகோல்தான் எங்களின் அடுத்தவயது பெரிய பசங்கள் ஒரு துப்புக் கொடுத்தார்கள். அதாவது பரீட்சையில் இவரிடம் மதிப்பெண் பெற வேண்டுமென்றால், இவர் ஏதாவது வீட்டு வேலை சொல்லச்சொன்னால் செய்யவேண்டும். கேள்விக்கு பதில் எழுதும்போது முதல் இரண்டு வரியும், கடைசி இரண்டு வரியும் சரியாக எழுதி நடுவில் நம் சொந்த கதை எழுதினாலும் பரவாயில்லை என்றார்கள். ஏனென்றால், அவர் ஒரு அளவுகோலை வைத்து அளந்து பார்த்தே மதிப்பெண்போடுவார் அதனால் இந்த எண்ணம். ஆங்கில அறிவு எப்படியும் தேர்வில் 40-ஐ தொடும் அளவிற்க்கு இருந்ததால், இவரை ஒரே அமுக்கா அமுக்குவதுதான் நல்லது என்று பட்டது. இந்த இரண்டு துப்பையும் துடுப்பாக்கிக்கொண்டு, அவர் சொல்வதை கேட்பதாக பாவ்லா செய்து கொண்டிருந்தேன். ஒரு நாள் அவர் வீட்டிற்கு வெளியில் விறகு காய்வதாகவும், அதை தூக்கி உள்ளே போடவேண்டுமென்றும் பணித்தார். நான் முந்தி நீ முந்தி என்று போட்டி வேறு! மதிப்பெண் வேண்டுமே. நாங்கள் ஒரு நால்வர் படை பறந்து சென்று விறகை அப்புறப்படுத்தியது. அதற்க்கு பின் வந்த பரீட்சையில் மதிப்பெண்போடவில்லை. அவரிடம் சென்று, “சார், என்ன இது அநியாயம், உரிய மதிப்பெண் வரவில்லையே என்றோம்” அதற்கு அவர், மிகவும் அமைதியாக “நீங்கள் குறைந்த அளவே விறகை அப்புறப்படுத்தினீர்கள் – அதற்குரிய மதிப்பெண்ணைக் கூட்டித்தான் போட்டுள்ளேன்” என்றார். மறுபடியும் ஏமாற்றமடைந்து, வேறு வழியைத் தேடினோம்.

பொதுத்தேர்வும், இலக்கும்:

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வந்துவிட்டாலோ ஏதோ தேர்த் திருவிழா போல் அல்லோகலப்படும். அதுவும், தேதி குறித்துவிட்டால், நமக்கு எங்கிருந்து வருமோ வீர சாகசங்கள். ஒரு இரண்டு மாதத்திற்கு முன்பிலிருந்துதான் படிப்பே நினைவுக்கு வரும். எல்லா பாடத்திற்கும் வழிகாட்டி வாங்கி, வாசல் திண்ணையில் உட்கார்ந்து கத்திப் படிப்போம். தமிழ், அறிவியல், வரலாறு, புவியியல் பிரச்சனை இல்லை, கணக்கு ஆமணக்காக மிரட்டியது. குறைந்தபட்ச மதிப்பெண் கூட தாண்டுமா, இல்லை எல்லைக்கோட்டை தாண்ட முயற்சித்த தீவிரவாதி கதை ஆகிவிடுமா என்று அச்சமாக இருந்தது. கணக்கென்றாலே உதறல்தான். நாகூர் மீரான் என்ற மிகவும் கண்டிப்பான வாத்தியார் 10-ம் வகுப்பிற்கு வந்தார். கணக்கு போடாவிட்டால் மோதிரத்தை வைத்து குட்டுவார்.

நானும் என் வகுப்புத் தோழனும் வியூகம் வகுத்தோம். ‘பிட்’ அடிக்கவோ பயம், பரீட்சையில் தோல்வியுற்றால் தோல் பிய்ந்துவிடும். பழைய வாத்தியார் என்னையும், என் நண்பனையும் பார்த்து விட்டு, “எலே பசங்களா, பொதுத்தேர்வுக்கு இன்னும் ஒரு வாரம்கூட இல்ல. ஊரை சுற்றி வந்துகிட்டிருந்தா எப்படி தேறும்? புத்தகம் என்று ஒன்று இருக்கிறது, அதை எடுத்து படிக்கவேண்டும் என்ற எண்ணமே இல்லையே” என்று கடிந்து கொண்டார். நாங்களோ பதிலுக்கு, “எல்லாம் முடிச்சாச்சு சார் – எல்லாவற்றிலும் 100/100 வாங்குவோம்” என்றபோது சிவபெருமேன் மன்மதனை எரித்த பார்வையை போர்வையாக வீசினார். “மாலை முரசு வரட்டும்ல, உங்க மானம் கப்பலேறும்” என்று துர்வாசரானார்.

பரீட்சை நாட்கள் வந்து விட்டாலே, பக்தி மணம் கமழும், எல்லா தெய்வங்களையும் காலைமுதலே வேண்டிக் கொள்வேன். படிப்பில் பெரிய நம்பிக்கையில்லாததால், தெய்வத்தில் நம்பிக்கை வைத்தேன். பெரிய ‘க்ளிப்’ பொருத்திய அட்டையில், ‘க்ளிப்’பின் மேல் ‘உ’ என்று எழுதுவேன். (பொதுத்தேர்வில் பிள்ளையார் சுழி போட்டால் தகுதி இழக்கப்படுவோம் என்று எச்சரித்தார்கள் அதனால், கண்ணுக்கு தெரியாதவாறு மெல்லிசாக போட்டேன்). தேர்வு வந்துவிட்டாலே சில எழுதப்படாத தர்மங்களை எல்லோரும் கடைபிடிப்போம்.

ஒன்றுக்கு இரண்டாக பென்சில், பேனா எல்லாவற்றையும் நன்றாக சோதித்து பார்த்து பையில் சொருகிக்கொள்வேன். சகுனம் பார்த்துத்தான் கிளம்புவேன். இலங்கை வானொலியில் ”நேரம் சரியாக ஒன்பது மணி” என்ற அறிவிப்பை காதில் வாங்கிக்கொண்டு கிளம்புவோம். இதில் அந்த தேர்வுக்குரிய பாடப்புத்தகத்தை எடுத்துக் கொண்டு போவேன், மணியடிக்கும் போது “எல்லோரும் புத்தகத்தை வெளியில் போட்டு வாருங்கள்” என்று அறிவுரை வரும்போது வேக வேகமாக எல்லாபக்கத்தையும் புரட்டி, விடாமல் புல்லட் ட்ரயின் போல் மனதில் பதிவு செய்ய முயற்சிப்பேன். எல்லோரும் போனவுடன் கடைசியாக தேர்வறைக்குள் போவேன். முதலில் வினாத் தாள்கள் ஒரு சிறு அடைப்பு பைக்குள் கச்சிதமாக பொருத்தி, + போல் நூலை கட்டியிருப்பார்கள். நம் முன்னால் அதை உடைத்து, பகிர்ந்தளிப்பார்கள். கைக்கு வந்தவுடன், அதை முகர்ந்து பார்ப்பேன், சாணித் தாளில் ஒருவித மணம் கமழும். வினாக்களை தீர்க்கமாக படித்துவிட்டு, அறையை ஒரு நோட்டம் விடுவேன். அப்போதெல்லாம் 20 நிமிடத்தில் ஒன்றும் தெரியவில்லையென்றால், தேர்வுத்தாளை மடித்து கொடுத்துவிட்டு வந்துவிடலாம். இப்போது குறைந்தது 1 மணித்துளிகள் இருக்கவேண்டுமாம். என்ன கொடுமை இது? முதலில் தெரிந்த விடைகளை எழுதிவிட்டு, தெரியாத வினாக்களுக்கு விடையை மூளை தயாரிக்கும், வேறு வழி? தேவையில்லாமல், “வீட்டில் அம்மா இன்று பஜ்ஜி பண்ணுவாளா மாட்டாளா?” என்றும், ‘பரீட்சை முடிந்தவுடன், குமாரின் பம்பரத்தில் ஆழமாக ஒரு ‘ஆக்கர்’ வைக்கவேண்டும்” என்றும் மனது மாத்தி யோசிக்கும்.

முதலில் கொடுக்கப்படும் விடைத்தாள் 16 பக்கம் இருக்கும், நெருக்கி நெருக்கியெழுதாமல் 2 கட்ட இடைவெளிவிட்டு எழுதி நிரப்புவேன். வக்கீல் ரிட் அடிப்பது போல், இடமிருந்து நெல் காயப்போடும் அளவிற்கு, கால்பகுதிக்கு இடம் விட்டிருப்பேன். அப்படியும் 1 பக்கம் மீதம் வரும். “சார், இன்னோரு செட் தாள்” என்று கேட்பேன். அதாவது தேர்வு தொடங்கி ஒரு மணிநேரத்தில் கூடுதல் காகிதம் கேட்டுவிட்டால், மற்ற பசங்களெல்லாம், “ஏ அப்பா, நிறைய எழுதரானே” என்று நினைப்பார்கள். ஆய்வாளரோ, என்னுடைய விடைத்தாளை வாங்கிப்பார்த்துவிட்டு, “இதில் ஒரு பக்கம் இன்னும் இருக்கு, முதலில் அதை முடி, கூடுதல் தாள் அப்புறம் கொடுக்கப்படும்” என்று கூறிவிட்டார். கொஞ்ச நேரத்தில் ஒவ்வொரு அறையாக தண்ணீர் பட்டுவாடா நடந்தது- அதை வாங்கி குடித்து நேரத்தை போக்கினேன். நூல் கொடுக்க ஒருவர் வந்தார் (பக்கங்களை இணைப்பதற்கு), ஒரு நூலை வாங்கிவிட்டு, அக்கம் பக்கம் பார்த்தேன், ஒருவர் ‘ஓட்டை’ (punching machine) போடும் கொக்கியை ஒவ்வொரு பெஞ்சாக கொண்டுவந்து விடைத்தாளை வாங்கி ஓட்டை போட்டார். எல்லோரும் போல், “நேரம் முடிந்துவிட்டது, எல்லாப்பக்கங்களையும் இணைக்கவும்” என்று கூறியவுடன், அசுர வேகம் வந்து எழுதினேன், என்ன எழுதுகிறேன் என்பது கணக்கல்ல – எப்படி எழுதுகிறேன் என்பதே கணக்கு என்று சளைக்காமல் ஓட்டினேன் வண்டியை. பின்னர் கண்காணிப்பாளர் பிடுங்கிக் கொண்டு போய்விட்டார். பல கரடுமுரடு மணித்துளிகளை கடந்து ஒரு வழியாக பரீட்சையை முடித்தேன்.

பத்தாம் வகுப்பு வெற்றி/தோல்வியை நிர்ணயிக்கும் தினம் வந்து விட்டால் – படபடப்புக்கும், பரபரப்புக்கும் பஞ்சம் இருக்காது. மாலை முரசு – சிறப்பு பதிப்பு வெளிவரும். ஒரு மூன்று/நான்கு மணிக்கு (பிற்பகல்) வரும். இப்பத்திரிகையில் மட்டும்தான் தேர்வு முடிவுகள் வரும். அதை பக்கத்து ஊரிலிருந்து ஒருவன் சைக்கிளில் வாங்கிவரும்போது ஒரு கூட்டம் பின்னாலேயே ஓடும். ஒன்று அல்லது இரண்டு பிரதிகள்தான் கிடைக்கும். எல்லோரும் ஒரு கொத்தாக எண்களை வைத்திருப்பார்கள். இதில் நகைச்சுவையான விஷயம் என்னவென்றால், எல்லோரும் மத்தவர்களின் எண்கள் வந்துள்ளதா என்று முதலில் எட்டிப்பார்ப்பார்கள். யார் தோல்வியடைந்தார்களோ அவர்களை பரிகசிப்பார்கள், இதற்கு பயந்து தேர்வு எழுதிய பல பேர் வீட்டை விட்டு வெளியில் வரமாட்டார்கள். தான் வெற்றியடைந்துவிட்டோம் என்று உறுதிப்படுத்திக் கொண்டுதான் வெளிப்படுவார்கள். இந்த கூத்தில், மறுநாள் – அச்சுப்பிழை காரணமாக விடுபட்ட எண்கள் என்று ஒரு பிற்சேர்கை வரும், வடுபட்ட இதயத்திற்கு ஆறுதலாக. இதை மனதில் வைத்துதான் முன்னாள் ஆசிரியர் “மாலைமுரசு” சாபமிட்டார். இந்த தலைவலியில் இருந்து தப்பிக்க, மதுரையில் உள்ள மாமா வீட்டில் தஞ்சம் புகுந்தேன். எப்படியோ ஊடுருவிய எதிரிபோல் எல்லைக்கோட்டை தாண்டி வெற்றி பெற்றுவிட்டேன். கணக்கில் நான் வெற்றி பெற்றதை நினைத்து கால் விரலால் தரையில் கோலமிட்ட மங்கை போல் நாணமுற்றேன். என் நண்பர்களுக்கு 50 கிராம் அல்வாவும், சேவும் வாங்கி மகிழ்வித்தேன்.

பல வருடம் கழித்து, என் மனைவி என்னிடம், “நம்ம பொண்ணு கணக்கில் நூற்றுக்கு நூறு வாங்கியிருக்கிறாள், எல்லாம் பரம்பரையா வர மூளை” என்றாள். ஒரு செயற்கையான புன்னகையை முகத்தில் தவழவிட்டு, ஜன்னல் வழியே வெறித்து பார்த்து நினைத்துக் கொண்டேன், ‘உலகம் எவ்வளவு போலியானது’ என்று.

தொகுக்கப்பட்ட பக்கம்: நண்பர்கள்->கோபால் பதிவுகள்