(A ray of hope to “Rejuvenate India” என்ற இடுகையை தமிழாக்கம் செய்ய வேண்டுமே (பிரசாத் கேட்டுக்கொண்டதற்க்காக) என்ற சுமை அழுத்திக் கொண்டிருந்தது. நண்பர் ராஜன் அவர்கள் ஜேபியுடன் அவருக்கு உண்டான தொடர்பை பின்னூட்டமாக எழுதியிருந்தார். அதையே இங்கே ஒரு இடுகையாக ப்ரொமோட் செய்து நான் தமிழாக்கம் செய்வதை கால தாமதம் செய்வதற்கு தகுந்த காரணமாக கொண்டுவிட்டேன். ஓவர் டூ ராஜன்…)

இவர் பீஹார் ஜெ பி அல்ல ஆந்திராவின் ஜெ பி. இவர் அடிப்படையில் ஒரு மருத்துவர். மருத்துவம் படித்தால் மக்களுக்கு நேரடியாகச் சேவை செய்யலாம் என்று நினைத்து டாக்டரானவர். பின்னர் அதுவும் போதாமல் ஐ ஏ எஸ் ஆனால் இன்னும் நிறைய பேர்களுக்கு உதவி செய்யலலாம் என்று நினைத்து ஐ ஏ எஸ் ஆகி, பிரகாசம் மாவட்டக் கலெக்டராக இருந்து பின்னர் என் டி ஆரின் செயலாளராக இருந்து, அரசியல்வாதிகளுக்கு அடிமைகளாக இருந்து கொண்டு எந்த சேவையையும் உருப்படியாகச் செய்ய முடியாது என்பதை உணர்ந்து, சக்திவாய்ந்த ஐ ஏ எஸ் பதவி, செக்ரடரி பதவி, டாக்டர் வேலை எல்லாம் உதறி விட்டு இந்திய அரசியல் அமைப்பை அடிப்படையில் மாற்றும் முயற்சியில் ஊழல் அற்ற இந்தியாவை மக்களிடம் அதிகாரத்தை அளிக்கும் இந்தியாவை உருவாக்கும் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். லோக் சத்தா என்ற அரசியலில் ஈடுபடாத அரசியல் அமைப்பு மாற்றத்தைக் கொணரும் இயக்கத்தை ஆரம்பித்து இன்று 14 வருடங்கள் ஆகின்றன. இப்பொழுது தன் இயக்கத்தை ஒரு அரசியல் இயக்கமாகவும் மாற்றி ஆந்திராவில் எம் எல் ஏ எலக்‌ஷனில் போட்டியிட்டு பத்து சதவிகித வாக்குகள் பெற்று இவர் மட்டும் எம் எல் ஏவாகவும் ஆகியிருக்கிறார். இவரது இயக்கத்தை அகில இந்திய அளவில் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இவர் இந்த இயக்கத்தை ஆரம்பித்த புதிதில் இவரைச் சந்தித்து 2000ம் ஆண்டு பேசியிருக்கிறேன். அப்பொழுது இவரைச் சந்திக்க நாங்கள் ஒரு பத்திருபது பேர்கள் சென்றிருந்தோம். தெளிவான நோக்கம், சிறப்பான பேச்சாற்றல், ஊழலற்ற தூய்மை, இந்தியாவின் பலம் பலவீனம் குறித்த தெளிந்த பார்வை, எதிர்காலம் குறித்த நோக்கு எல்லாம் படைத்த இந்தியாவை ஆளும் அனைத்து நேர்மையான தகுதிகளும் திறமையும் பெற்ற ஒரு தலைவர். மெதுவாக நம்பிக்கையுடன் முன்னேறி வருகிறார். நேற்று இவர் சன்னிவேல் நகரில் ஒரு பொதுக்கூட்டம் நடத்தி தனது முயற்சிகளையும் முன்னேற்றங்களையும் விவரித்தார்.

சாதாரணமாக ஒரு அரசியல்வாதி வந்தால் அதிக பட்சம் ஒரு சின்ன ஹோட்டலில் ஒரு ஐம்பது பேர்கள் கூடுவார்கள். அமெரிக்காவில் இது நாள் வரை அதிக கூட்டத்தை ஈர்த்தவர் வாஜ்பாயி ஒருவர் மட்டுமே. ஒரு நடிகர் வந்தால் அவரைப் பார்க்க நூறு பேர்கள் கூடுவார்கள். ஆனால் ஒரு இந்திய அமைப்பில் புரையோடிப் போயிருக்கும் ஊழலை மாற்ற, இந்திய அமைப்பின் அடித்தளத்தை மாற்ற முனைந்த இந்த டாக்டர் ஜெயப்ரகாஷ் நாராயணனுக்கு நேற்று வந்திருந்த கூட்டம் அமெரிக்க இந்திய வரலாறு காணாதது. கிட்டத்தட்ட ஒரு 1500 பேர்கள் கூடியிருந்து அமைதியாக அவரது பேச்சைக் கேட்டது எனக்கு பெரும் பிரமிப்பை அளித்தது. இந்த வரவேற்பு அவருக்கு இந்தியாவில் கிட்டியிருக்குமானால் இந்தியப் பிரதமராகவே ஆகியிருந்திருப்பார். தமிழ் நாட்டிலும் இவரது அமைப்பு மக்கள் சக்தி இயக்கம் என்ற பெயரில் விஜய் ஆனந்த் என்பவரால் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. விஜய ஆனந்த் வாஷிங்டன் டி சி யில் இருந்து தமிழ் நாடு திரும்பி லஞ்சம் கொடாதோர் இயக்கத்தை ஆரம்பித்து இப்பொழுது டாக்டர் ஜெ பியுடன் இணைந்துள்ளார். 2020ல் தமிழ் நாட்டில் ஆட்சியைப் பிடிக்கும் திட்டத்துடன் இருக்கிறார்.

ஜெ பி மாற்ற விரும்புவது அரசியல்வாதிகளை அல்ல, சிஸ்டத்தை மட்டுமே. கிராம அளவில் ஆட்சி அதிகாரத்தை மாற்றுவது மூலமாக மட்டுமே ஊழலை ஒழிக்க முடியும் என்கிறார். இவரைப் போன்றவர்கள் எந்தவித மாயாஜாலத்தையும் நிறைவேற்றி விட முடியாது என்றாலும் கூட இவரைப் போன்றவர்கள் உருவாகியிருப்பதும் இந்த அளவு கவனிப்பைப் பெற்றிருப்பதும் கூட ஒரு சிறிய நம்பிக்கையை அளிக்கின்றது. இந்திய ஜனநாயகத்தில் அடிப்படை சீர்த்திருத்தங்களை செயல்படுத்துவதே இந்தியாவின் பெரும்பான்மையான ஊழல்களுக்குத் தீர்வு என்கிறார் ஜெ பி. ஆந்திராவை ஆட்டி வரும் தெலுங்கானா, ஆந்திரா பிரிவு அரசியல் இவரையும் துரத்தி வருகிறது. பேச்சு நடைபெற்ற சன்னிவேல் இந்துக் கோவில் அரங்கு முன் ஏராளமான தெலுங்கானா ஆதரவாளர்கள் ஜெ பி யைக் கண்டித்து பேனர் ஏன்றி நின்று கொண்டிருந்தனர். அதனால் பலத்த தனியார் செக்யூரிட்டி பாதுகாப்பும் ஹாலுக்குள் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இரவு பத்து மணி வரை கலந்து கொண்டவர்களின் சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் கண்டனங்களுக்கும் பொறுமையாகப் பதிலளித்தார். வந்திருந்தவர்களில் 98% ஆந்திராகாரர்கள் என்றாலும் பேச்சை அற்புதமான ஆங்கிலத்தில் மட்டுமே நிகழ்த்தினார். தமிழ் நாட்டில் இருந்து ரஜினிகாந்தே வந்திருந்தாலும் கூட இவ்வளவு பெரிய ஆர்வம் உள்ள கூட்டம் நிச்சயம் கூடியிருக்காது. அந்த வகையில் ஆந்திரா மக்களின் சினிமா மோகத்தின் மீதும் இந்தியாவின் மீதான அக்கறையின்மை மீதும் நான் கொண்டிருந்த அபிப்ராயத்தை பெரிதும் மாற்றி விட்டது இந்தக் கூட்டம். அவ்வளவு பெரிய அந்த அரங்கம் இவ்வளவு தூரம் முழுக்க நிரம்பி நான் கண்டதேயில்லை. தமிழக அரசியல்வாதிகள் போல இல்லாமல் முழுக்க முழுக்க ஒன்று பட்ட இந்தியாவின் மீதான அக்கறையுடனான ஒரு முழுமையான இந்தியனாக இருக்கிறார் ஜெ பி. இந்தியாவின் எதிர்காலம் குறித்த பெரும் நம்பிக்கையுடன் பேசுகிறார்.

தொகுக்கப்பட்ட பக்கம்: அரசியல்

தொடர்புடைய இடுகைகள்:
ஜேபி பற்றிய பக்ஸின் இடுகை

Advertisements