இன்றைக்கு ஆனந்துக்கு கறுப்பு. செஸ் விளையாட்டில் கறுப்பு கலர் சின்ன disadvantage. புள்ளிவிவரங்களைப் பார்த்தால் வெள்ளைக் கலர்தான் நிறைய ஆட்டங்களில் ஜெயிக்கிறது. முக்கால்வாசி கிராண்ட்மாஸ்டர்கள் கறுப்பு கலர் வந்தால் டிரா செய்யத்தான் விளையாடுவார்கள். ஆனந்தும் சில வருஷங்களாக அப்படித்தான். டொபலோவ் கறுப்பு கலர் வந்தாலே ஜெயிக்கத்தான் விளையாடுவார். இன்றைக்கு வெள்ளை. இந்தப் போட்டியில் momentum வேறு டொபலோவ் பக்கம் போய்விட்டது. இன்று ஆட்டம் டிரா ஆனால் அடுத்தபடி டைப்ரேக்கர். அதில் மிக வேகமாக விளையாட வேண்டும். முன்பிருந்த வேகம் குறைந்துவிட்டாலும் ஆனந்த் வேகமாக விளையாடுவதில் கில்லாடி. இன்னும் இளைஞராக இருந்தபோது lightning kid என்ற அடைமொழி அவருக்கு நிஜமாகவே பொருத்தமானதுதான். ஆனந்த் டைப்ரேக்கருக்கு போவதற்குத்தான் பார்ப்பார், அதனால் இன்று ஒரு பாதுகாப்பான drawish கேம்தான் விளையாடுவார் என்று எதிர்பார்த்தேன்.

ஆனந்த் super-solid Lasker defense விளையாடினார். முடிந்தால் ஜெயித்துக்கொள் என்று டொபலோவை கொஞ்சம் சீண்டுவது போல இருந்தது. கிடுகிடுவென்று விளையாடினார். Foreplay எல்லாம் முடிந்து பார்த்தால் ஆனந்துக்கு c pawn isolated pawn. (isolated pawn – இரு புறமும் வேறு சிப்பாய்கள் கிடையாது) ஆனால் அவரது காய்களுக்கு நகர இடம், டொபலோவ் ஏதாவது தவறு செய்தால் உடனே அதை ஊதி ஊதி பெரிதாக்கும் வாய்ப்பு இருந்தது. அவரது isolated pawn-க்கு இரு புறமும் – b மற்றும் d ஃபைல்களில் – நல்ல ஸ்கோப் இருந்தது. அவரது பிஷப் நல்ல active ஆக இருந்தது. நீண்ட h1-a8 diagonal-இல் டோபலோவின் ராஜா மேல் கண் வைத்துக்கொண்டிருந்தது.

இருவருக்கும் ப்ளான் தெளிவு. டொபலோவுக்கு அந்த isolated pawn ஒரு நல்ல target.தன் காய்கள் எல்லாவற்றையும் கொண்டு அதை எவ்வளவு முடியுமோ அவ்வளவு தாக்கலாம். இரு புறமும் வேறு சிப்பாய்கள் இல்லாததால் ஆனந்த் தன் மற்ற வலுவான காய்களைத்தான் இதை பாதுகாக்க பயன்படுத்தி ஆக வேண்டும். ஆனந்த் தன் பிஷப்பை, பாதி திறந்திருக்கும் b மற்றும் d ஃபைல்களை பயன்படுத்தி தன் காய்களை நல்ல இடத்தில் வைக்க வேண்டும். வாய்ப்பு கிடைத்தால் டோபலோவின் ராஜாவை தாக்க வேண்டும் – அதற்கு அந்த பிஷப் உதவியாக இருக்கும். ஆட்டம் சரிசமமான நிலையில் இருந்தது, ஆனால் நல்ல டென்ஷன்.

டொபலோவ் கோட்டை விட்டார். அவரது 31 மற்றும் 32-ஆவது மூவ்கள் இரண்டும் தவறு. திடீரென்று ஆனந்தின் ராணி, ரூக், பிஷப் எல்லாம் டோபலோவின் ராஜாவை குறி வைக்கின்றன. அந்த ராஜாவை சுற்றி இருக்க வேண்டிய சிப்பாய்கள் எல்லாம் வெட்டுப் போய்விட்டன, நகர்ந்துபோய்விட்டன. என் லெவலில் கூட இந்த மாதிரி மூவ் தவறு என்று தெரியும். ஆனால் டொபலோவ் லெவலில் ஆடுபவர்கள், அதுவும் டொபலோவ் போல காம்ப்ளிகேஷன் என்றால் அல்வா என்பவர்கள், தப்பிக்க வழி, இல்லாவிட்டால் தோற்கடிக்கவே வழி கண்டுபிடித்திருக்கலாம். அதனால் என் மாதிரி ஆட்களுக்குத்தான் டென்ஷன். ஒன்பதாவது கேமில் பாருங்கள், டொபலோவ் திடீரென்று தன் குதிரையை வெட்டுக் கொடுத்தார், தோற்கப் போகிறார் என்று நினைத்த கேம் டிரா ஆகிவிட்டது. இத்தனைக்கும் எல்லாரும் டொபலோவுக்கு ஆப்பு என்கிறார்கள், இருந்தாலும் சின்ன பயம். அதுவும் நமக்கு ஜெயிக்க நேர் வழி தெரிந்தால் ஆனந்துக்கு அதை விட சிறந்த, சிம்பிளான வழிகள் எல்லாம் தெரிகிறது. நான் நினைத்த மூவ்களை ஆனந்த் தள்ளிப்போட்டுக் கொண்டே போனார். என்னாகுமோ ஏதாகுமோ என்று பார்த்துக் கொண்டிருந்தேன்.

வான வேடிக்கை எல்லாம் முடிந்த பிறகு ஆனந்துக்கு ராணி; டொபலோவுக்கு ஒரு ரூக், ஒரு குதிரை. அந்த நிலையில் எனக்கே கூட டொபலோவை தோற்கடிக்க சான்ஸ் உண்டு. டொபலோவ் ஆனால் ஏதோ நப்பாசையில் விளையாடிக் கொண்டே இருந்தார். கடைசியில் அவர் கை கொடுத்தபோது திருப்தியாக இருந்தது.

ஆனந்துக்கு அதிர்ஷ்டம்தான். இந்த ஆட்டத்தில் ஆனந்த் ஜெயிக்கவில்லை, டொபலோவ் தோற்றார். ஆனால் செஸ்ஸில் இதெல்லாம் சகஜமப்பா! பாருங்கள், முதல் கேமிலும், எட்டாவது கேமிலும் டொபலோவ் ஜெயிக்கவில்லை, ஆனந்த் தோற்றார்.

Viswanathan Anandஆனந்துக்கு வாழ்த்துக்கள்!

இன்னும் கொஞ்சம்:

இட்லிவடை தளத்தில் லலிதாராம் என்பவரும் தமிழில் இந்த ஆட்டங்களை பற்றி எழுதுகிறார். அதையும் படித்துப் பாருங்கள். இந்த ஆட்டத்தைப் பற்றி இங்கே.

இந்த போட்டி பற்றி overall எழுத வேண்டும் என்றும் விட்டுப்போன ஆட்டம் # 8,9,10,11 பற்றி ஒரு பதிவு எழுத வேண்டும் என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆட்டம் #9 இந்த போட்டியின் மிகச் சிறந்த ஆட்டம். பார்ப்போம்.

என்டிடிவியில் ஆனந்தை நாலு கேள்வி கேட்கிறார்கள். அந்த கேள்வி கேட்பவனைப் போல கேனையனை நான் பார்த்ததில்லை. மயிரிழையில் ஆனந்த் வென்றிருக்கிறார். கடைசி கேம் வரைக்கும் விளையாடி were you toying with Topalov என்று கேட்கிறான். கறுப்பு காய்களோடு வென்றிருக்கிறார்; பிளாக் மாஜிக் என்று சொல்ல வேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டு அதையே சொல்லுகிறார்கள். மாஜிக்கும் இல்லை மண்ணாங்கட்டியும் இல்லை, டொபலோவ் சொதப்பிவிட்டார். இந்த அடிப்படை விஷயம் கூட தெரியாமல் பேட்டி எடுத்து, உயிரை வாங்குகிறார்கள். ஆனந்துக்கு எரிச்சல் வருவதும், அதை அடக்கிக் கொள்வதும் தெளிவாகத் தெரிகிறது. பிரஸ் கான்ஃபரன்ஸ் வீடியோவை இன்னும் காணோம், அதனால் இதைத்தான் தர வேண்டி இருக்கிறது.

லலிதாராம் ஒரு நல்ல வீடியோ சுட்டியை கொடுத்திருக்கிறார்.

ஆட்டம் pgn நொடேஷனில்:
[WhiteElo “2805”] [BlackElo “2787”] [PlyCount “112”] [EventDate “2010.04.24”] [EventType “match”] [EventRounds “12”] [EventCountry “BUL”]

1. d4 d5 2. c4 e6 3. Nf3 Nf6 4. Nc3 Be7 5. Bg5 h6 6. Bh4 O-O 7. e3 Ne4 8. Bxe7Qxe7 9. Rc1 c6 10. Be2 Nxc3 11. Rxc3 dxc4 12. Bxc4 Nd7 13. O-O b6 14. Bd3 c5 15. Be4 Rb8 16. Qc2 Nf6 17. dxc5 Nxe4 18. Qxe4 bxc5 19. Qc2 Bb7 20. Nd2 Rfd8 21. f3 Ba6 22. Rf2 Rd7 23. g3 Rbd8 24. Kg2 Bd3 25. Qc1 Ba6 26. Ra3 Bb7 27. Nb3 Rc7 28. Na5 Ba8 29. Nc4 e5 30. e4 f5 31. exf5 e4 32. fxe4 Qxe4+ 33. Kh3 Rd4 34.Ne3 Qe8 35. g4 h5 36. Kh4 g5+ 37. fxg6 Qxg6 38. Qf1 Rxg4+ 39. Kh3 Re7 40. Rf8+ Kg7 41. Nf5+ Kh7 42. Rg3 Rxg3+ 43. hxg3 Qg4+ 44. Kh2 Re2+ 45. Kg1 Rg2+ 46. Qxg2 Bxg2 47. Kxg2 Qe2+ 48. Kh3 c4 49. a4 a5 50. Rf6 Kg8 51. Nh6+ Kg7 52. Rb6 Qe4 53. Kh2 Kh7 54. Rd6 Qe5 55. Nf7 Qxb2+ 56. Kh3 Qg7 0-1

தொகுக்கப்பட்ட பக்கம்: செஸ்

தொடர்புடைய பதிவுகள்:
ஆனந்த் உலக சாம்பியன்!

ஆனந்த்-டொபலோவ் ஆட்டம் #8
ஆனந்த்-டொபலோவ் ஆட்டம் #7
ஆனந்த்-டொபலோவ் ஆட்டம் #6
ஆனந்த்-டொபலோவ் ஆட்டம் #5
முதல் 4 ஆட்டங்கள்

செஸ்வைப்ஸ் – ஆட்டங்கள், வீடியோக்கள்
ஆனந்த்-டொபலோவ் – லைவ், ஆடும்போது என்ன நடக்கிறது என்று பார்க்க
சூசன் போல்காரின் ரன்னிங் கமெண்டரி
லலிதாராமின் இட்லிவடை தளப் பதிவு
ஆனந்தின் பேட்டி வீடியோ
என்டிடிவி வீடியோ