எம்.எஸ். பற்றி டி.ஜே.எஸ். ஜார்ஜ் ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார் – “MS – A Life in Music”. ஜெயமோகன் இதைப் பற்றி எழுதிய பதிவிலிருந்துதான் தெரிய வந்தது.

எம்.எஸ்.

“எம்.எஸ்ஸின் முகம்தான் ஒரு மங்கலமான பிராமண குடும்பத் தலைவியின் முகம்” என்று ஜெயமோகனின் நண்பர் சொன்னாராம். என் சிறு வயதில் எனக்கும் அப்படித்தான் தோன்றியது. இன்னும் அப்படித்தான் தோன்றுகிறது. அவரது வகிட்டுக்கு அருகே கொஞ்சமாக பறக்கும் முடியைப் பார்க்கும்போது மனதில் சின்ன சந்தோசம் பிறக்கும். காலில் விழுந்து நமஸ்கரிக்க வேண்டும் என்று தோன்ற வைத்த முகம்.

எனக்கு ஒரு பதிமூன்று பதினான்கு வயது இருக்கும்போது என் பெரியம்மாதான் எம்.எஸ். தேவதாசி குடும்பத்தில் பிறந்தவர், இன்று பிராமணத்தி என்று எல்லாரும் நினைக்கிறார்கள் என்று சொன்னார். அதற்கப்புறம் “Who cares?” என்று கேள்வியும் கேட்டார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதற்கு முன் பிராமணர்களை என்னால் முகத்தை வைத்து கண்டுபிடித்துவிட முடியும் என்று எனக்கு ஒரு நினைப்பு இருந்தது. அதற்கப்புறம் பார்ப்பவர்கள், பழகுபவர்கள் என்ன ஜாதி என்று எப்போதாவது தோன்றுவது கூட அழிந்தே போய்விட்டது. தெரிந்துகொண்டு என்ன பண்ணப் போகிறேன்? Who cares?

முதல் அதிர்ச்சி மறைந்த பிறகு எம்.எஸ். மீது மரியாதை அதிகரித்தது. 1916இல் பிறந்த பெண்களில் பிராமணத்திகளுக்காவது சாதனை செய்ய கொஞ்சூண்டு சான்ஸ் உண்டு. ஒரு தேவதாசியின் மகளுக்கு என்ன சான்ஸ் இருக்கிறது? அவரை என்றாவது பார்த்தால் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியே ஆக வேண்டும் என்று தோன்றியது. அவரது வெற்றிக்கு பின்னால் இருக்கும் சதாசிவத்தின் மீதும் மரியாதை உண்டாகியது.

GNB, MS in Sakunthalaiஜெயமோகன் அவரது பதிவில் குறிப்பிடும் சில விஷயங்கள் எம்.எஸ். மீது இருக்கும் பிம்பத்தை கொஞ்சம் தாக்குகின்றன. சதாசிவத்துடன் 4 வருஷம் மணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்திருக்கிறாராம். அப்போது சதாசிவத்தின் முதல் மனைவி உயிரோடு இருந்திருக்கிறார். நடுவில் ஜி.என்.பி.யோடு கொஞ்ச காலம் தொடர்பு இருந்திருக்கிறதாம். தொடர்பு உடல் ரீதியானதுதானா என்று தெளிவாக தெரியவில்லை. சமூகத்தில் தான் தேவதாசியாக கருதப்படக்கூடாது, ஒரு குடும்பப் பெண்ணாக இருக்க வேண்டும் என்ற உறுதி அவரை வழி நடத்தி இருக்கிறது.

சதாசிவத்தின் மனைவி ஆன பிறகு அவருக்கு இன்று சமூகத்தில் இருக்கும் பிம்பம் உருவாக ஆரம்பித்திருக்கிறது. இந்த பிம்பத்துக்கும் உண்மைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. குடும்பத்தலைவி. முதல் தாரத்தின் பெண்களை தன் பெண்களாகத்தான் வளர்த்தார். பிராமண ஜாதிக்குள் தன்னை பர்ஃபெக்டாக பொருத்திக்கொண்டார். அவரது இசைத் திறன், சதாசிவத்தின் மார்க்கெட்டிங், திரைப்படங்கள் எல்லாம் அவரை கர்நாடக சங்கீதத்தின் ராணியாக மாற்றின.

எம்.எஸ்சை விட வசந்தகுமாரிக்கும் பட்டம்மாளுக்கும் நல்ல குரல் என்று சொல்பவர்கள் உண்டு. எனக்கும் எம்.எல்.விக்கு எம்.எஸ்சை விட நல்ல குரல் என்றுதான் தோன்றுகிறது. ஆனால் எம்.எஸ்ஸின் குரலில் இருக்கும் simplicity வேறு குரல்களில் இல்லை.

MS, Sathasivamபொய்யான பிம்பங்கள் எப்போதுமே மறுக்கப்படவேண்டியவை. சதாசிவத்தின் மனைவி ஆன பிறகு அவரது பிம்பத்துக்கும் உண்மைக்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை. அவர் ஒரு uber-பிராமணத்தியாக மாறிவிட்டார். (இங்கே நான் பிராமணத்தி என்று சொல்வது வெறும் சடங்கு, சம்பிரதாயம், சமூகத்தில் இருக்கும் மதிப்பு மட்டுமே. அவர் ஜாதி பார்த்தாரா இல்லையா என்றெல்லாம் எனக்கு தெரியாது. சதாசிவம் பிராமணர்களுக்கு மட்டும் உதவி செய்தார் என்று ஜார்ஜ் சொல்கிறாராம்.) திருமணத்துக்கு முன் அவரது வாழ்க்கை ஒரு “மங்களகரமான” வாழ்க்கை இல்லை, ஆனால் ஆசைகளும், நிராகரிப்புகளும், அவமானங்களும், இசையும் நிறைந்த ஒரு வாழ்க்கை.

அவர் மேல் இருக்கும் மரியாதை எனக்கு இன்னும் அதிகம் ஆகி இருக்கிறது. எத்தனை கஷ்டங்களை, அவமானங்களை, அன்றைய சமூக அநீதிகளை, அவலங்களைத் தாண்டி, தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்டிருக்கிறார்! எம்.எஸ். மீது ஒரே ஒரு குறைதான் சொல்ல முடியும். அவர் தன் பிறப்பு, காதல்கள் ஆகியவற்றை புதைத்திருக்க வேண்டியதில்லை. அதையும் தைரியமாக வெளியே சொல்லி இருக்கலாம். ஆனால் இது இன்றைய விழுமியங்களை வைத்து சொல்லப்படும் குறை. மேலும் சதாசிவத்தின் மாரக்கெட்டிங்குக்கு இந்த உண்மைகள் இடைஞ்சலாக இருந்திருக்கும்.

எம்.எஸ். பதிவுக்கு வந்த பல கடிதங்களில் திரும்பி திரும்பி ஒன்றே ஒன்றுதான் சொல்லப்படுகிறது. இந்த விஷயத்தை இப்போது வெளியே சொல்லி அவரது பிம்பத்தை உடைப்பானேன் என்று. என் கண்ணில் பிம்பம் உடையவில்லை, இன்னும் மகத்தானதாகத்தான் ஆகி இருக்கிறது. பெரியோரைப் போற்றுவோம்!

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

தொடர்புடைய பதிவுகள்:
ஜெயமோகன் பதிவு – MS: A Life in Music