பல மாதங்களுக்கு முன்னால் சுப்ரமணிய சாமி மீது நீதிமன்றத்தில் முட்டை வீசப்பட்டது ஒரே பரபரப்பாக இருந்தது. முட்டை வீச்சுக்கு காரணம் ம.க.இ.க.வினர் என்றுதான் நினைக்கிறேன். நடந்து பல நாளாகிவிட்டது, என் நினைவு தவறாக இருக்கலாம். நீதிமன்றத்தில் வழக்கு பதிய வந்தவர் மேல் நீதிபதிகளுக்கு முன்னாலேயே தாக்குதலா என்று பலரும் வெறுத்துப் போனோம். ம.க.இ.க.வின் இணைய வடிவமான வினவு குழுவினர் அப்படி முட்டை வீசுவது தங்கள் ஜனநாயக உரிமை என்று கேனத்தனமாக வாதித்தனர். அதன் பின் விளைவாக நீதிமன்றத்திலேயே போலீஸ்-வக்கீல் தகராறு, வக்கீல்களுக்கு அடி, போலீஸ் ஸ்டேஷன் எரிப்பு என்று பலவும் நடந்தன. அதற்குப் பிறகு ஒரு விசாரணை நடந்தது, அதன் முடிவுகள் எனக்கு இப்போது நினைவில்லை. சில போலீஸ்காரர்களை தண்டிக்க வேண்டும் என்று சொன்னது போலத் தெரிகிறது.

ஒரு வாரம் முன்னால் அதே நீதிமன்றத்தில் கலைஞர் தனக்கு பிடித்த பொழுதுபோக்கான சிலை திறப்பு விழா நடத்தி இருக்கிறார். அங்கே ம.க.இ.க.வினர் கறுப்புக் கொடி காட்டி இருக்கிறார்கள். அதற்காக அவர்களுக்கு கலைஞர் முன்னாலேயே அடி விழுந்திருக்கிறது. அடித்தவர்கள் போலீஸ்காரர்கள் இல்லை என்று நிச்சயமாகத் தெரிகிறது. போலீஸ் பார்த்துக் கொண்டிருந்ததாம். பத்திரிகையாளர்களுக்கும் அடி விழுந்திருக்கிறது. (படித்தது ஜூவியா இல்லை வேறு ஏதாவது ரிப்போர்ட்டா என்று ஞாபகம் வரவில்லை.)

அதே நீதிமன்றம்; முட்டை வீசுவதை விட மோசமான வன்முறை; போன முறை நீதிபதிகள் கண்ணெதிரில், இந்த முறை முதல்வர்/போலீஸ் கண்ணெதிரில். இணையத்தில் பதிவர்கள் யாரும் இப்படி செய்யலாமா என்று சொன்ன மாதிரி தெரியவில்லையே! இல்லை நான் இணையத்தில் மேய்வது மிகவும் குறைந்து போனதால் என் கண்ணில்தான் படவில்லையா? இதைப் பற்றி டோண்டு ஒருவர்தான் குறிப்பிட்டிருக்கிறார். அவர் “தப்புதான், ஆனால் வேணுங்கட்டிக்கு வேணும்” என்ற மாதிரி எழுதி இருக்கிறார். அவருடைய கடுப்பை புரிந்து கொள்ள முடிந்தாலும் (டோண்டுவை வினவு தளத்தில் கண்டபடி திட்டுவார்கள்) இது கண்டிக்க வேண்டிய விஷயம்தான். நிச்சயமாக வினவு குழுவினர் எழுதி இருப்பார்கள், ஆனால் அவர்கள் அணுகுமுறை நன்றாகத் தெரிந்துவிட்டதால் இதைப் பற்றி அங்கே போய் படிக்கவும் வேண்டுமா என்று அலுப்பாக இருக்கிறது.

வினவு குழுவினர் மேல் எனக்கு நிறைய கடுப்பு உண்டு. இரட்டை நிலை உடையவர்கள். எல்லாவற்றையும் நம்மவர்/மற்றவர் என்று ஃபில்டர் வைத்துப் பார்ப்பவர்கள். ஆனால் குற்றவாளிகளுக்கே உரிமை உள்ள இந்த உலகத்தில் இவர்களுக்கு கறுப்புக் கொடி காட்ட, கோஷம் எழுப்பக் கூட உரிமை இல்லையா? இது ஜனநாயக முறை எதிர்ப்புதானே? இதை கண்டிக்க வேண்டாமா? அதுவும் போலீஸ் அடித்திருந்தாலாவது சட்டம் ஒழுங்கு பிரச்சினை, கலவரம் என்று ஏதாவது சப்பைக்கட்டு கட்டலாம். அடித்தவர்களை போலீஸ் பார்த்துக் கொண்டிருக்கிறது! முதல்வர் ஒன்றுமே நடக்காதது மாதிரி பேசிக் கொண்டே போகிறார்! அவர் கண்ணசைத்தால் அடிதடி நின்றிருக்கும். போலீஸ் முறைத்திருந்தால் வந்திருந்த ரவுடி கும்பல் அடங்கி இருக்கும்.

நமக்கெல்லாம் அநியாயங்கள் இத்தனை மரத்துப் போகக் கூடாது.

தொகுக்கப்பட்ட பக்கம்: நாட்டு நடப்பு

தொடர்புடைய பதிவுகள்:
வினவு தளத்துடன் தகராறு
வினவு தளத்துக்கு வாழ்த்துக்கள்