அறுசுவை அரசு நடராஜன் தொடர்கிறார் …..
இந்த மாதிரியான கலகலப்பான சூழல்களைவிட்டு என் வாழ்க்கை அப்படியும் இப்படியும் திசை மாறியது.   திருமணமாகி என் மனைவியோடு சென்னையில் வசிக்க ஆரம்பித்தபோது எனக்கு வயது இருபத்து மூன்று.    ஒரு குழந்தையும் பிறந்து விட்டது.   என் வாழ்க்கையில் அதுபோல் கடினமான ஒரு கட்டத்தை நான் அனுபவித்ததில்லை.    வறுமை எங்களைப் பிடுங்கித் தின்றது.

‘வேண்டாம்….இதற்கு மேலும் நம்மால் வாழ்வது என்பது முடியாது.   வறுமையை எதிர்த்துப் போராடுவது இனி நடக்காத காரியம்!’   என்று நானும் என் மனைவியும் முடிவெடுத்தோம்.

இடையில் இத்தனை வருஷம் ‘டச்’ விட்டுப் போயிருந்த மடத்துக்கு ஒரே ஒரு முறை போய்,  மஹா பெரியவரைப் பார்த்து விட்டு வந்துவிடலாம் என்று முடிவெடுத்தோம்.  இப்போது மடம் காஞ்சிபுரத்தில் இருந்தது.

காஞ்சிக்குப் போனேன்.   பெரியவரை தரிசனம் செய்தேன்.   என் மனசு கலக்கத்தைப் பட்டும்படாமல்  அவரிடம் சொன்னேன்.

எல்லாம் பொறுமையாகக் கேட்டுவிட்டு, ‘சரி!   இன்று நீயும் உன் மனைவியும் ஊருக்குப் போக வேண்டாம்.  இங்கேயே தூங்குங்கள்.  நாளை போய்க் கொள்ளலாம்!’   என்று என்னிடம் காஞ்சிப் பெரியவர் சொல்ல….  கட்டிக்கொள்ள மாற்றுத்துணிக்கூட  எங்களிடம் இல்லையே என்ற வேதனைக் குமுறலுடன் அன்று காஞ்சி மடத்திலேயே தூங்கினோம்.  பகவான் பாதத்தில் படுத்திருக்கிறபோது மனம் துக்கங்களை மறந்திருப்பதால்,  தூக்கம் நன்றாக வந்தது.

காலையில் எழுந்து குளித்துப் பெரியவரைத் தரிசனம் செய்யப் போய் நின்றோம்.  புது வேட்டியும்,  புதுப் புடவையும் எடுத்து வரச் சொல்லி,  அதை எங்களிடம் கொடுத்து  உடுத்திக்கொண்டு வரச் சொன்னார்.
https://i0.wp.com/3.bp.blogspot.com/_WRTfA9x_seg/StHjVredajI/AAAAAAAABYs/cbkmwJg-BFc/s320/maha_periyava_014s%5B1%5D.jpg
உடுத்திக்கொண்டு போய் நமஸ்கரித்ததும்,  எதிரில் மூங்கில் தட்டிலிருந்த பதினோரு ரூபாய் பணத்தை எடுத்து எங்களிடம் கொடுக்கச் சொன்னார்.  ‘போ!  எல்லாம் சரியாயிடும்! ‘   என்று கையை உயர்த்தி ஆசீர்வதித்தார்.   என்னுள் புது நம்பிக்கை துளிர் விட்டது.   ‘வறுமையை எதிர்த்துப் போராடலாம்.  தெய்வத்தின் அருள் நமக்கு இருக்கிறது.  வெற்றி நிச்சயம் கிடைக்கும்’  என்ற உறுதி பிறந்தது.

அன்றிலிருந்துதான் என்னைப் பற்றியிருந்த வறுமை கொஞ்சம் கொஞ்சமாக விலகிப் போக ஆரம்பித்தது.   கல்யாண வேலைக்குக் கூப்பிட்டு,  மெள்ள மெள்ள ஆள் வர ஆரம்பித்தனர்.    அன்றாட ஜீவனத்துக்குக் காசு புழங்க ஆரம்பித்தது.

அதன் பின் மாதா மாதம் முதல் தேதியன்று மடத்துக்குப் போவதை வழக்கமாக வைத்துக் கொண்டேன்.   ஒரு முதல் தேதியன்று அப்படிப்போய் நமஸ்கரித்தபோது,  ‘நீ சமையல் வேலை பார்க்கிறே இல்லையா….  இங்கே வருகிற குழந்தைகளுக்குக் கல்கண்டு கொடுத்தா திங்கரதில்லே…  முடிஞ்சா கொஞ்சம் லட்டு செஞ்சிண்டுவந்து தாயேன் !’  என்றார் பெரியவர்.

வீட்டுக்கு வந்து என்னதான் பிராய்ந்து  பார்த்தும் சல்லிக்காசு இல்லை.   என் மனைவி நாகலட்சுமியைப் பார்த்தேன்.  காதில் தோடு தெரிந்தது.   அதை விற்று லட்டு செய்து (சுமார் நூறு கூட இருக்காது)  கொண்டு போனேன்.   பெரியவர் முன் வைத்து வணங்கியதும்……

‘என்ன….  லட்டு செய்ய முடிஞ்சுதா?  ரொம்பத்தான் கஷ்டப்பட்டு செஞ்சுண்டு வந்தே போலிருக்கே!’   என்றார் மெலிதான புன்னகையுடன்.

என்னால் அப்போது எதுவும் சொல்ல முடியவில்லை.    ‘நம் கஷ்டம் தெய்வம் வரை போனதே….  அதுவே போதும்’   என்று நினைத்துக் கொண்டு வந்துவிட்டேன்.

அதன் பிறகு ஒவ்வொரு வருடமும் பெரியவரின் ஜெயந்தி (பிறந்த நாள்)  அன்று  லட்டு செய்து கொண்டு போவதை நானே வழக்கமாக்கிக் கொண்டேன்.  லட்டுகள் நூறு ஐந்நூறு ஆனது….ஐந்நூறு ஆயிரம் ஆனது…   இன்று எங்கள் குடும்பம் முழுவதும்  மே மாதத்தில் பெரியவர் ஜெயந்தி வந்தால்,  அந்தப் புனிதமான நாளில் லட்டு செய்ய காஞ்சிபுரம் கிளம்பிவிடும்.

பதினோரு ரூபாயில் புது வாழ்க்கை  — நிறைவுற்றது

தொடர்புடைய பதிவுகள்:சாம்பார் கிணறு – தயிர் குளம் “அன்னதான சிவன்”

Advertisements