சாவி கூறுகிறார்……… (பழைய கணக்கு)

1942  ஆகஸ்ட் எட்டு.  ‘வெள்ளையனே வெளியேறு’  என்று குரல் கொடுத்த காந்திஜி பம்பாயில் கைது செய்யப்பட்டு எங்கேயோ அழைத்துச் செல்லப்பட்டார்.  அவரை அடுத்து, நேருஜி, படேல், ஆசாத்,  காமாராஜ்,  சத்தியமூர்த்தி எல்லாருமே கைது செய்யப்பட்டார்கள்.   நாடு முழுவதும் ஒரே கொந்தளிப்பு!     அதே சமயம் இரண்டாம் உலகப் போரும் நடந்து கொண்டிருந்ததால் ஊரடங்குச் சட்டம்,  இருட்டடிப்பு என்று நாடே அல்லோல கல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது.

See full size image

காந்திஜி கைதானதும்  அங்கங்கே தலைமறைவாயிருந்த காங்கிரஸ்காரர்கள்,  ‘மகாத்மா இதைச் செய்யச் சொன்னார்.  அதைச் செய்யச் சொன்னார்’  என்று எதையாவது சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

நான் அப்போது வேலை வெட்டி ஏதுமின்றி ஊர் சுற்றிக் கொண்டிருந்தேன்.   நாட்டுப் பற்று மட்டுமே நெஞ்சில் நிறைந்திருந்தது.    ‘காந்திஜி தண்டவாளத்தைப் பெயர்க்கச் சொன்னார்.   தந்திக் கம்பிகளை வெட்டச் சொன்னார்.  தபாலாபீசைக் கொளுத்தச் சொன்னார்’   என்று ரகசியமாக வெளியாகிக் கொண்டிருந்தன.    பாரத தேவி ராமரத்னம்   ரகசியமாக எனாக்குச் சில துண்டுப் பிரசுரங்களை அனுப்பி  அவற்றை மற்றவர்களுக்கு விநியோகிக்கும்படிச் சொல்லி அனுப்பினார்.

ஏற்கனவே உணர்ச்சி வசப்பட்டிருந்த எனக்கு இது மேலும் வெறியூட்டியது.   தேச விடுதலைக்கு எதையாவது செய்தாக வேண்டும்.  விடுதலைப் போரில் குதித்தாக வேண்டும் என்ற தீவிரம் ரத்தத்தைச் சூடாக்கியது.   தந்திக்கம்பி அறுப்பது,  தண்டவாளம் பெயர்ப்பது,  இதெல்லாம் நான் மட்டும் தனியாகச் செய்யக் கூடிய காரியமாய்த் தோன்றவில்லை.   எனவே,  பக்கத்தில் உள்ள மண்ணடி  போஸ்ட் ஆபீசைக் கொளுத்தி விடுவது என்று முடிவு செய்தேன்.   ஒரு தீப்பெட்டியுடன் அங்கு போனேன்.   பெட்டியுள்ள எல்லாத் தீக்குச்சிகளையும் ஒன்று சேர்த்துப் பற்ற வைத்தேன்.   டக்கென்று தபால் பெட்டியினுள் அவ்வளவையும் போட்டதும் மார்பு படபடவென்று அடித்துக் கொண்டது.    உள்ளே இருக்கும் கடிதங்கள் பற்றிக் கொண்டு பெரிதாகி எரிந்து அந்த போஸ்ட் ஆபீசே தீக்கிரையாகப்  போகிறது.  நான் பெரிய ஹீரோவாகப் போகிறேன் என்று எனக்குள்ளாகவே கற்பனை செய்து கொண்டேன்.    சில நிமிடங்களுக்குப் பிறகு,   தபால் பெட்டிக்குள்ளிருந்து வெறும் புகை மட்டுமே வந்தபோது பெரும் ஏமாற்றமாயிருந்தது.    இருந்தாலும் என் வீரத்தை வெளியுலகுக்குப் பிரகடனப் படுத்திவிட வேண்டும் என்ற ஆவலில் அருகாமையிலுள்ள செக்குமேடு போலீஸ் ஸ்டேஷனுக்கு நானே போன் செய்தேன்.

“போலீஸ் ஸ்டேஷனா ?  இங்கே மண்ணடி போஸ்ட் ஆபீசுக்குத் தீ வைத்துவிட்டேன்.   உடனே வாருங்கள்”  என்றேன்.

“யார் நீ ?”   என்று கேட்டது செக்குமேடு.

“நான் ஒரு காங்கிரஸ்காரன்.  தபாலாபீஸுக்கு எதிரிலேயே காத்திருக்கிறேன்.   உடனே வாருங்கள்.  கதர்ச்சட்டை அணிந்திருப்பேன்”   என்றேன்.

அடுத்த சில நிமிடங்களில் போலீஸ் வான் ஒன்று வந்து நின்றது.   அதிலிருந்து பரபரப்போடு இறங்கிய போலீசார்  இரண்டு பேர்  சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு நேராக என்னிடம் வந்து,  “நீதான் போன் செய்தாயா ? ”  என்று கேட்டார்கள்.   “ஆமாம்”  என்றேன்.   என்னை அப்போதே கைது செய்து அந்த வேனிலேயே ஏற்றிச் சென்றார்கள்.    ஸ்டேஷனுக்கு அழைத்துப் போய் கேஸ் எழுதிக் கொண்டார்கள்.    அதில் நான் கையெழுத்துப் போட்டதும்  மசால் தோசை வாங்கிக் கொடுத்தார்கள்.

சரி,  இப்போது நாம் மசால் தோசை மற்றும் அதன் பக்க வாத்தியங்களான  கொத்தமல்லிச் சட்னிதக்காளிச் சட்னிபுதினாச் சட்னி மற்றும்  உருளைக் கிழங்கு மசாலா செய்வது எப்படி என்பது பற்றி நமது ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்….   தாளிக்கும் ஓசை  (http://mykitchenpitch.wordpress.com/)
மசால் தோசை
தேவையான பொருள்கள்:

புழுங்கல் அரிசி – 3 கப்
பச்சரிசி – 1 கப்
உளுத்தம் பருப்பு – 1 கப்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணை – தேவையான அளவு

கொத்தமல்லிச் சட்னி அல்லது தக்காளிச் சட்னி அல்லது புதினாச் சட்னி
உருளைக் கிழங்கு மசாலா.

masala-dosai1.JPG

செய்முறை:

 • அரிசிகளைத் தண்ணீரில் ஊறவைக்கவும். உளுத்தம் பருப்புடன் வெந்தயத்தைத் தனியாக ஊறவைக்கவும்.
 • நான்கு மணி நேரம் ஊறியபின் அரிசி பருப்புகளை தனித் தனியாக மிக மென்மையாக நுரை ததும்ப அரைத்து எடுக்கவும்.
 • ஒரு பெரிய பாத்திரத்தில் எடுத்துவைத்து, முழு இரவும் பொங்க விடவும்.
 • தோசைக்கல்லைச் சூடாக்கி, மாவை நடுவில் ஊற்றி, மெல்லிதாக வட்டமாகப் பரத்தவும்.
 • தோசையைச் சுற்றியும் நடுவிலும் எண்ணை விட்டு நிதானமான தீயில் வேகவைக்கவும்.
 • நன்றாக முறுகலாக வெந்ததும், திருப்பிப் போடவும்.
 • இந்தப் பக்கத்தை சில நொடிகள் மட்டும் வேகவைத்து மீண்டும் திருப்பிவிடவும்.
 • நடுவில் மேலே குறிப்பிட்டுள்ள சட்னிகளில் ஏதாவது ஒன்றை ஒரு டீஸ்பூன் எடுத்து வட்டமாகப் தேய்த்து,
 • அதன்மேல் உருளைக் கிழங்கு மசாலா ஒரு கரண்டி வைத்து மூடிப் பரிமாறவும்.

masala-dosai2.JPG

* சப்பாத்தி, பூரி, தோசைக்கு தனியாகத் தொட்டுக் கொள்ள உருளைக்கிழங்கு மசாலா செய்யும் போது சற்று தளர்வாக இருக்கவேண்டும்.

இந்தக் குறிப்பில் சொல்லியிருப்பதுபோல் தோசையின் உள்ளே வைப்பதென்றால் மிகவும் இறுக்கமாக, தண்ணீர்ப் பசை இல்லாதவாறு மசாலா இருக்குமாறு தயாரித்துக் கொள்ள வேண்டும்.

கொத்தமல்லிச் சட்னி

தேவையான பொருள்கள்:

கொத்தமல்லி – ஒரு கட்டு
தேங்காய்த் துருவல் – 1 டேபிள் ஸ்பூன்
பொட்டுக்கடலை –  1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 4
புளி – நெல்லிக்காய் அளவு
இஞ்சி – சிறு துண்டு
காய்ந்த மிளகாய் – 1
உளுத்தம் பருப்பு –  1 டீஸ்பூன்
பெருங்காயம் – 1/2 டீஸ்பூன்
தாளிக்க –  எண்ணை, கடுகு,

செய்முறை:

 • கொத்தமல்லியை ஆய்ந்து, நன்கு கழுவி, நறுக்கிக் கொள்ளவும்.
 • காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தை சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
 • நறுக்கிய கொத்தமல்லியோடு, எல்லாப் பொருட்களையும் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
 • எண்ணையைச் சூடாக்கி கடுகு தாளித்து, சட்னியில் சேர்த்துக் கலக்கவும்.

தக்காளிச் சட்னி
தேவையான பொருள்கள்:

தக்காளி – 5
தேங்காய்த் துருவல் –  3 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 5
உளுத்தம் பருப்பு –  1 டேபிள்ஸ்பூன்
புளி –  சிறிதளவு
பூண்டு –  4 பல்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித் தழை –  சிறிது (நறுக்கியது)
தாளிக்க – எண்ணை, கடுகு, 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு

செய்முறை:

 • சிறிது எண்ணையில் பருப்பு, மிளகாய் இரண்டையும் நன்கு வறுத்துக் கொள்ளவும்.
 • அத்துடன் தக்காளியையும் சேர்த்து மிதமான தீயில் வதக்கிக் கொள்ளவும்.
 • தக்காளி நன்கு வதங்கியபின் புளி, பூண்டு, தேங்காய்த் துருவல் சேர்த்து வதக்கி இறக்கி ஆற விடவும்.
 • வதக்கியவற்றை தேவையான உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்.
 • எண்ணையில் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, கொத்தமல்லித் தழை சேர்த்துக் கலக்கவும்.

புதினாச் சட்னி

தேவையான பொருள்கள்:

புதினா – 1 கட்டு
சின்ன வெங்காயம் – 4 (விரும்பினால்)
கொத்தமல்லி – சிறிது (விரும்பினால்)
இஞ்சி – சிறு துண்டு
பச்சை மிளகாய் – 3
காய்ந்த மிளகாய் – 1
புளி – நெல்லிக்காய் அளவு
எண்ணை – 2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் – 1 சிட்டிகை
உப்பு –  தேவையான அளவு

செய்முறை:

 • புதினாவை, இலைகளை மட்டும் ஆய்ந்து, கழுவிக் கொள்ளவும்.
 • வாணலியில் எண்ணையைச் சூடாக்கி, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, வெந்தயம், பெருங்காயம் தாளிக்கவும்.
 • இஞ்சி, புதினாவைச் சேர்த்து லேசாக வதக்கவும்.
 • மிக்ஸியில் வதக்கிய கலவை, உப்பு, புளி, உரிந்த சின்ன வெங்காயம், கொத்தமல்லித் தழை சேர்த்து கெட்டியாக அரைத்து உபயோகிக்கவும்.

உருளைக் கிழங்கு மசாலா.

தேவையான பொருள்கள்:

உருளைக் கிழங்கு – 1/2 கிலோ
வெங்காயம் (பெரியது) – 4
பச்சைப் பட்டாணி – 100 கிராம் (விரும்பினால்)
பச்சை மிளகாய் – 6
இஞ்சி – சிறு துண்டு
பூண்டு – 4 பல்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித் தழை – சிறிது

தாளிக்க – எண்ணை, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை

செய்முறை:

 • உருளைக் கிழங்கை வேகவைத்து, உரித்து, உதிர்த்தோ, சிறு துண்டுகளாக நறுக்கியோ வைத்துக் கொள்ளவும்.
 • இஞ்சி, பூண்டை பொடியாகவும் பச்சை மிளகாயை குறுக்கே நீளவாக்கிலும் அரிந்துகொள்ளவும்.
 • வெங்காயத்தைப் பொடியாக, ஆனால் நீளவாக்கில் அரிந்துகொள்ளவும்.
 • வாணலியில் எண்ணையைச் சூடாக்கி, கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
 • தொடர்ந்து, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், பச்சைப் பட்டாணி, வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் லேசாக வதங்கினாலே போதும்.
 • நிறம் மாறக் கூடாது.
 • வேக வைத்த உருளைக்கிழங்கு, உப்பு, மஞ்சள் தூள், சிறிது தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
 • கொஞ்சம் தளர்வான கூட்டாக, சேர்ந்தாற்போல் வந்ததும் இறக்கி, கொத்தமல்லித் தழை தூவிப் பரிமாறலாம்.

* ஒட்டாமல் தண்ணீர் அதிகமாகி விட்டால், சிலர் கடலைமாவு கரைத்து விடுவார்கள். சுவையைக் கெடுக்கும்.

கொஞ்சம் அதிலிருக்கும் உருளைக் கிழங்கையே எடுத்து மசித்து விட்டுக் கொதிக்க விடலாம்.

சூடாக இருப்பதை விடவும், ஆறியதும் கூட்டு அதிகமாக இறுகும் என்பதை நினைவில் வைக்கவும்.

Advertisements