கோயில் திருவிழாக்களில், அக்கம் பக்கத்து ஊர்களில் இருந்தெல்லாம் மக்கள், கூட்டம் கூட்டமாகப் பங்கேற்கிறார் கள். பத்து நாட்கள் நடைபெறும் உத்ஸவங்களின்போது, உண்ண உணவும் தங்குவதற்கு வசதியான இடமும் ஏற்பாடு செய்து கொள்ளும் அளவுக்கு வசதி இல்லாத வர்களும்கூட, கவலைப்படாமல் வந்து குவிகிறார்கள்!   ஆங்காங்கே தண்ணீர்ப் பந்தல்கள் வைத்து நீர்மோர், பானகம், உணவுப் பொட்டலங்கள் என்று விநியோகம் தொடர்ந்து கொண்டிருக்கும்.   மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி உத்ஸவத்தின்போது, காலத்தின் மாற்றத்திற்கு ஏற்றவாறு, இப்போது பாதாம் பால், ரோஸ் மில்க் என்று ஏகதடபுடல்.   ஆங்காங்கே அன்னதானம் வேறு!   இதற்கெல்லாம் முன் னோடியாய் இருந்த ஒருவரை இந்த வேளையில் நாம் நினைத்துப் பார்க்க வேண்டாமா?கும்பகோணத்தை அடுத்துள்ள தேப்பெருமாநல்லூரில் (சென்ற சிவராத்திரியின் போது பாம்பு ஒன்று வந்து பூஜை செய்ததாக அமர்க்களப் பட்டதே, அதே தேப்பெருமாநல்லூர்தான்!)   19-ம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் தோன்றியவர் இராமசுவாமி.   இவர் நடத்திய அன்ன தானங்களினாலேயே இவருக்கு `அன்னதான சிவன்‘ என்னும் புகழ்ப் பெயர் உண்டாயிற்று!

https://i0.wp.com/4.bp.blogspot.com/_BctxN4mWlEs/S0RA63weIfI/AAAAAAAAAQQ/Y-xUfr9qB3Y/s400/maha_periyava_10.jpg

காஞ்சி மடம் கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டிருந்த நாட்களில்,  மகாஸ்வாமிகளிடம் அன்புடனும், நெருக்கத்துடனும், ஏன்?  உரிமையுடனும் பழகிய பெருமகனார், அன்னதான சிவன்!   தமது வாழ்க்கையை  காஞ்சி மடத்துடன் பிணைத்துக் கொண்டவர்.

தஞ்சாவூரைச் சேர்ந்த மிராசுதார் கயத்தூர் சீனிவாச ஐயர்தான் அன்னதான சிவனுக்கு இன்ஸ்பிரேஷன். தஞ்சை மாவட்டத்தில் உள்ள பிரபலமான கோயில் களில் நடைபெறும் உத்ஸவங்களில் எல்லாம், சீனிவாசய்யர் செய்த அன்னதான வைபவங்களில் அவருக்கு உதவியாக, தம் சிறு வயதில் ஓடியாடி வேலை செய்தார் சிவன்.   பின்னாளில் தம் சொத்து, சுகம் அனைத்தையும் இதற்காகவே அர்ப்பணித்து விட்டார். பிரபலமான திருவிழாக்களுக்காகக் கூடும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அறுசுவை உணவு படைப்பதைத் தம் வாழ்க்கையின் `மிஷன்’ என்று ஆக்கிக் கொண்டார் சிவன்.

திருச்செங்காட்டங்குடியின் அமுதுபடித் திருவிழா, அம்பர் மாகாணத்தின் சோமயாக விழா, காரைக்கால் மாம்பழத் திருவிழா, காவிரிப்பட்டணத்து ஆடி அமாவாசை, மாயூரம் துலா (ஐப்பசி) மாத உத்ஸவம், திருநாகேஸ்வரம் கார்த்திகை சோமவார விழா, நாச்சியார் கோயில் தெப்பம், திருவிடை மருதூர் தைப்பூசம், கும்பகோணத்து மாசி மகம், எட்டுக் குடி பங்குனி உத்திரம் என்று பெருந்திரளான மக்கள் கூடும் உத்ஸவங்களில் எல்லாம் அன்னதான சிவன் தன் தொண்டர் படையோடு களமிறங்கி விடுவார்!

பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி உணவருந்தும் இடம் என்றாலும், சமைக்கும் இடம், சாப்பிடும் இடம் எல்லாம் படுசுத்தமாக இருக்குமாம்! ஏழைகள் தானே அன்னதானத்திற்கு மொய்க்கிறார்கள் என்கிற அலட்சிய பாவத்தில் சுத்தமும், சுகாதாரமும் இரண்டாம்பட்சமாகி விடும் இந்த நாட்களில், பலதரப்பட்ட மக்களும் வந்து உணவருந்திச் சென்ற அந்த நாளில் சிரத்தையோடு செயல்பட்டார் சிவன்!

இலை போட்டுப் பரிமாறும் இடத்தைச் சுத்தம் செய்வதற்காகவே துடைப்பம் வண்டி வண்டியாக வந்து இறங்கும் என்றால், உணவுப் பண்டங்களுக்குக் கேட்கவா வேண்டும்?   ஆயிரக்கணக்கில் அரிசி,  பருப்பு மூட்டைகள்,  மளிகைச் சாமான்கள், வண்டி வண்டியாகக் காய்கறிகள், இலைக்கட்டுகள்;  அடுப்பு எரிக்க விறகு நூறு வண்டிகளில்,  ஊறுகாய்க்கான நெல்லிக்காய் மட்டும் இரண்டு மூன்று வண்டிகளில்!   மலைப்பாக இருக்கிறதல்லவா?

அத்தனை பேருக்கு வேண்டிய தயி ருக்கு என்ன செய்தார்களாம் தெரியுமா? அன்னதானம் நடைபெறும் ஊரில் சில வாரங்களுக்கு முன்னதாகவே தயிரை சேகரிக்கத் தொடங்கி, கிடைக்கும் தயிரை எல்லாம் மரப் பீப்பாய்களில் நிரப்பி மூடி, மெழுகினால் அடைத்து சீல் வைத்து, அந்த ஊர்க் குளத்தில் உருட்டி விடுவார்களாம்!   அன்னதானம் நடைபெறும் நாளில் பீப்பாய்களைத் திறந்தால் நேற்றுதான் தோய்த்த தயிர் போல், புளிப்பில்லாமல் சுவையாக இருக்குமாம்! ஆமாம்! திருக்குளங்கள்தான் அந்த நாளின் `கோல்ட் ஸ்டோரேஜ்.’

ஒரு ஊரில் அன்னதானம் என்றால், அதற்கு முன் நாள் இரவு வரை அதற்கான சுவடே தெரியாதாம். இரவோடு இரவாகப் பண்டங்கள் வந்து இறங்கி, பங்கீடு ஆகி, அதிகாலையில் அடுப்பு மூட்டி உலையேற்றினால், பசி வேளைக்கு அறுசுவை உணவு தயார். ஆளுயர அண்டாக்களில் சாம்பார், ரசம், பாயசம்! கொதிக்கும் போது உண்டாகும் வாசனையை வைத்தே உப்பு, புளி, காரம், வியஞ்சனங்கள் போதுமா போதாதா என்று தீர்மானம் செய்வார்களாம்.   முறத்தில் உப்பை வைத்துக் கொண்டு சிப்பந்தி ஒருவன் நிற்க,  ருசிக்கேற்ற வாசனை வரும் வரை உப்பைப் போடுவது வழக்கமாம்.  முறம் கணக்கில் கொத்துமல்லி விதையை அரைத்து ரசத்தில் சேர்ப்பார்களாம்!

மூங்கில் பரண் கட்டி,  ஏணி வைத்து ஏறி,  மரச்சட்டத்தில் ராட்டினம் கட்டி, சிறு வாளிகளில் கிணற்றில் இருந்து தண்ணீர் இறைப்பது போலக் கொதிக்கும் குழம்பு,  ரசத்தை மொண்டு பரிமாறுவார்களாம்.   ஆறிப் போன சாதமாக இல்லாமல்,  அதே சமயத்தில் இலை போட்டு விட்டு மக்களைக் காக்க வைக்காமல், சுடச்சுட அரிசிச் சாதம் வடித்துப் போடத் தனி டெக்னிக் வைத்திருந்தாராம் அன்னதான சிவன்!

அன்னதானம் முடிந்ததும், “இந்த இடத்திலா அத்தனையும் நடந்தது!” என்று மூக்கில் விரலை வைத்து ஆச்சரியப்படும் வகையில் இடத்தைச் சுத்தம் செய்யும் அள வுக்கு பெர்ஃபெக்ட் எக்ஸிகியூஷன்!    இத்தனையிலும் அன்னதான சிவனது ஆகாரம் என்னவோ நாலு கவளம் பழையதுதான்!.

த.கி. நீலகண்டன்  (நன்றி – கல்கி வார இதழ்)