கணையாழியின் கடைசிப் பக்கங்களிலிருந்து  (பிப்ரவரி – 1991 )

கிளம்பும்போதே வேன் மக்கர் செய்தது.  இந்த தடங்கலுக்கு ஏதாவது தெய்வக் குற்றம் சம்பந்தப்பட்ட காரணம் சொல்வதற்குள் மற்றொரு வாகனம் வந்து விட்டதால் தடங்கலை மறந்து விட்டோம்.  காலை ஒன்பதரை மணிக்கு காஞ்சிபுரம் சென்றோம்.  நான்காம் நூற்றாண்டிலிருந்து குறிப்பிடப்பட்ட நகரம் இன்று ஒலிபெருக்கிகள் மூலம் ரம் பம் பம் என்று அலறிக் கொண்டிருந்தது.  ராஜீவ் வருகிறார் என்று சவுக்குக் கம்பங்கள் நட்டுக் கொண்டிருந்தார்கள்.  அழகிரி பஸ்கள் இரைச்சலாகத் தெருவை ஆக்ரமித்துக்கொண்டு  செல்ல முனிசிபாலிடிக்காரர்கள் தெருவை சுத்தம் செய்கிறேன் என்று புழுதி கிளப்பிக்கொண்டிருந்தார்கள்.

சங்கர மடத்தில் புதுப் பெரியவாள் பாதபூஜை செய்து கொண்டிருக்க,  பரமாச்சாரியார் தரிசனத்துக்கு, முன் மண்டபத்தில் வெள்ளைக்காரிகள் காத்துக் கொண்டிருந்தனர்.  பூஜை முடிந்ததும் அவரைப் பார்க்கலாம் என்றால் ‘ஸ்பீக்கர் ரபிராய் வந்துட்டான்’.   அவர் போன கார்களின் புழுதி அடங்கினதும்தான் போது மக்களை அனுமதித்தார்கள்.  பரமாச்சாரியாள்  அவர்களை நான் முன்பு மெகபூப் நகரில் தரிசித்திருக்கிறேன்.  இப்போது நூறு வயசுக்கருகில் அவர் தம் ஞானயாத்திரையின் இறுதியில் இருக்கிறார்.  ஈஸிசேரில்  சாய்ந்திருக்க காதருகில் இரைந்து  இன்னார் வந்திருக்கா  என்று வந்தவர்களை சுருக்கமாக அறிமுகப்படுத்தி,  எப்போதாவது ஆசிர்வாதம் செய்கிறார்.  அத்தனை ஞானம் கண்டு,  அத்தனை தூரம் நடந்து,  அத்தனை போதித்து,  அத்தனை எழுதி,  அத்தனை தலைவர்களும்,  நீதிபதிகளும்,  ராஜாக்களும்,  ஆர்தர் கோஸ்டலர்களும் வந்து வந்து பார்த்துப் பேசி ஓய்ந்துபோன அந்த மனதில்,  இப்போது என்ன எண்ணங்கள் ஓடும் என்று வியப்படைகிறேன்.  பட்டாபிராமன் என்னைப் பற்றிச் சொல்லி “இவர் சுஜாதான்னு கதை எழுதறவர்.  குவளகுடி சிங்கமையங்கார்னு  சீரங்கத்துல வேத பாடசாலை ஸ்தாபிச்சவர்.  அவருடைய பேரன்….”  இதெல்லாம் காதில் சொனனபோது  சலனமே இல்லை.  “ஒரு ஏழைப் பெண்ணுக்கு ஹார்ட் ஆபரேஷன் பண்ண ஒத்தாசை செய்யறதா சொல்லியிருக்கார்”  என்று கேட்ட மாத்திரத்தில் இரண்டு கைகளையும் உயர்த்தி வாழ்த்தினார்.  காமகோடி மடம் சிருங்கேரி போல அத்தனை செல்வாக்கு இல்லை.  பெருந்தலைவர்கள் வந்து பார்த்தாலும் காசுக்கு பிரயோசனமில்லை.  புதுப் பெரியவாள் என்று சொல்லப்படும் தேஜஸ்வியான  முகம் கொண்ட அந்த இளைஞரிடம் மடத்தில் இருக்கும் ஆப்பிள் பழங்களை விட ஆப்பிள் கம்ப்யூட்டர் உபயோகமானது.  அதைப் பயன்படுத்தி ரிகார்டுகளை வேணுமெனில் சம்ஸ்க்ருதத்தில்கூட எழுதி வைத்துக் கொள்ளலாம்.  நல்ல புத்தகங்கள் பதிப்பிக்கலாம்.  உதாரணமாக ஹிந்து என்பது யார் என்பது பற்றியே பல்லாயிரம் குழப்பங்கள் உள்ளன,  அதுபற்றி எழுதலாம்.  வருமானக் கணக்கை துல்லியமாக வைத்துக் கொண்டு அனாவசிய செலவைக் கட்டுப்படுத்தலாம்  என்று சொன்ன போது ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார்.  நாளந்தா போல ஒரு பல்கலைக் கழகம் காஞ்சிபுரத்தில் ‘கடிகாஸ்தானம்’ என்ற பெயருடன் முன்பு இருந்திருக்கிறது.  அதைத் திரும்ப அமைக்கத் திட்டமிட்டு நிலம் கூட வாங்கியிருக்கிறார்கள்.  1993 -ல் முடிக்க மூன்று கோடி ரூபாய் தேவைப்படும்.  அதற்கு உதவி செய்ய பெரிய மனிதர்களைக் கேட்பதில் தப்பில்லை என்றேன்.  சாந்தமாகப் புன்னகைத்தார்.

Advertisements