மூட நம்பிக்கைகளை அறவே வெறுப்பவன் நான்.  ஆயினும் மற்றவர் உணர்ச்சிக்கு மதிப்புக் கொடுத்து அவர்கள் மனம் நோகக் கூடாது என்பதற்காகச் சில சமயங்களில் விட்டுக் கொடுப்பதும் உண்டு.  இருந்தாலும் சகுனத்தில் எனக்குள்ள நம்பிக்கையை மட்டும் என்னால் அகற்ற முடியவில்லை.  நமது வாழ்க்கையில் நேர்ந்து விடும் சிற்சில சம்பவங்கள் இப்படிப்பட்ட நம்பிக்கையில் அசையாத உறுதியை ஏற்படுத்தி விடுகின்றன.

நானும் என் மகன் பாச்சாவும் சில ஆண்டுகளுக்கு முன் லண்டன் ‘தமிழ் முரசு’ ஆசிரியர் திரு சதானந்தம் அவர்கள் வீட்டுக்கு வெகு அருகாமையில் உள்ள புகழ் பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் மைதானத்தையும் வேறு சில முக்கிய இடங்களையும் சுற்றிப் பார்த்து விட்டு  பாரிசுக்குப் புறப்பட்டுச் சென்றோம்.  பதினோரு மணிக்கு விமான நிலையத்துக்குப் புறப்படுவதாகத் திட்டம்.

“நான் என் காரிலேயே ‘ஹீத்ரு’ விமான நிலையத்தில் கொண்டு விட்டு விடுகிறேன்.  நீங்கள் புறப்படத் தயாராக இருங்கள்” என்று காலையில் எழுந்ததுமே கூறி  விட்டார்  திரு சதானந்தம்.

சரியாகப் பதினோரு மணிக்கு வீட்டை விட்டுப் புறப்பட்டு வெளியே காலடி எடுத்து வைத்தபோது என் முன்னே ஒரு பெரிய கறுப்புப் பூனை குறுக்கே ஓடியது.   அதைக் கண்டதும் எனக்குச் ‘சுரீர்’  என்றது.

“புறப்படும்போதே பூனை குறுக்கே போகிறதே,  சகுனம் சரியில்லையே!” என்று மனம் சஞ்சலப்பட்டது.

“அதெல்லாம் இந்த ஊரில் ரொம்ப சகஜம்.  பூனைகள் இப்படிதான் அடிக்கடி குறுக்கும் நெடுக்கும் ஓடிக் கொண்டிருக்கும்.  நாங்களெல்லாம் அதைப் பொருட்படுத்த மாட்டோம்.  இதையெல்லாம் மனதில் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள்”  என்று சதானந்தம் எனக்குச் சமாதானம் கூறிக்கொண்டே காரை ஸ்டார்ட் செய்து ஏறிக் கொள்ளச் சொன்னார்.

விமான நிலையம் போகும் வழி முழுவதும் அந்தப் பூனை குறுக்கே வந்தது பற்றியே எண்ணிக் கவலைப் பட்டுக் கொண்டிருந்தேன்.

‘இது வெளிநாடு.  இங்கேயெல்லாம் சகுனம் பலிக்காது’  என்று உள்ளத்தில் ஒரு வாதம் உருவாகியது.  ‘எங்கேயிருந்தால் என்ன?  பூனை பூனைதானே !” என்றது இன்னொரு வாதம்.

பாரிஸ் போய்ச் சேர்ந்தோம்.  உலகப்புகழ்  பெற்ற ‘மூலா ரூஜ்’  (Moulin  Rouge )  அரங்குக்குச் சென்று அன்று மாலை அங்கு நடைபெற்ற காட்சிகளைப்  பார்த்துக் கொண்டிருந்தோம்.  அந்தச் சூழ்நிலையிலும் அந்தப் பூனையை மட்டும் என்னால் மறக்க முடியவில்லை.  காலையிலிருந்து அலைச்சலும் பட்டினியும் வேதனையும் சேர்ந்து களைத்துப் போயிருந்தேன்.  காட்சிகளில் உள்ளம் லயிக்கவில்லை.

பாதி ‘ஷோ’ வில் சட்டென்று கண்கள் இருண்டு போய் மயங்கிக் கீழே சாய்ந்து  விட்டேன்.  உடனடியாக டாக்டர்கள்  இரண்டு பேர் வந்து பார்த்துப் பரிசோதித்தார்கள்.

“உடம்பில் சர்க்கரை குறைந்திருக்கிறது”   என்றனர்.  உடனே தனி அறைக்கு அழைத்துப் போய் க்ளுகோஸ் தண்ணீர் கொடுத்து மயக்கத்தைத் தெளிய வைத்தனர்.  சற்று நேரத்துக்கெல்லாம் புத்துணர்ச்சி பெற்று விட்ட போதிலும் ‘ஷோ’ வில் மனம் செல்லாததால் ஓட்டலுக்குத் திரும்பி விட்டோம்.

மறுநாளே பாரிசிலிருந்து நியூயார்க் போய் அங்கிருந்து நியூஜெர்ஸியை அடைந்தோம்.  பூனை குறுக்கே போனது,  ‘ப்ளாக் அவுட்’  ஆனது — இரண்டு நிகழ்ச்சிகளுமே கெட்ட சகுனங்களாக எனக்கு உள் மனதில் உறுத்திக் கொண்டிருந்தன.    “என்னவோ,  ஏதோ”  என்று ஒரு கிலி சங்கடப்படுத்திக் கொண்டே இருந்தது.    காலையில் படுக்கையை விட்டு எழுந்தவுடன் ஒரு பயங்கரச் செய்தியை டெலிபோன் அறிவித்தது.

“பம்பாயிலிருந்து சென்னை புறப்பட்ட விமானம் பயங்கர விபத்துக்குள்ளாகி அந்த விபத்தில் நூறு பேருக்கு மேல் இறந்து விட்டார்கள்.  அவர்களில் உங்கள் மாப்பிள்ளையும் ஒருவர்”  என்பதே அந்தச் செய்தி.

நான் மூட நம்பிக்கைகளை வெறுப்பவன்தான்.  ஆனாலும் சகுனத்தில் எனக்குள்ள நம்பிக்கையை இனி யாராலும் அசைக்க முடியாது.

Advertisements