சிறு பையனாக எங்கள் கிராமத்துத் தெருக்களில் சுற்றி வந்த போது நான் எந்தக் கலரில் சட்டை போட்டிருந்தேன் என்பது கூட இப்போது எனக்கு நினைவிருக்கிறது.  தினமும் எங்கள் வீட்டுப் பசு மாட்டை மேய்ச்சலுக்குக் கொண்டு போய் ‘மந்தை’யில் விட்டு வருவது என் அன்றாட வேலைகளில் ஒன்று.

ஒரு நாள் குண்டு அய்யர் என்று ஒருவர் குண்டு போட்ட மாதிரி எங்கள் கிராமத்துக்கு வந்து சேர்ந்தார்.  அந்தக் காலத்தில் கன்னையா கம்பெனி போன்ற நாடகக் கம்பெனிகளில் நடிகராக இருந்து ஓய்வு பெற்றதும் சொந்த ஊருக்கே (மாம்பாக்கம்) திரும்பி வந்து விட்டார்.  காமெடியன் என்பதால் எனக்கு அவரிடம் ஒரு தனிப் பற்றுதல் ஏற்பட்டது.  அந்தக் காலத்தில் வாரம் சாப்பிடுவது என்று ஒரு பழக்கம் உண்டு.  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டில் அவருக்குச் சாப்பாடு போட்டு அவர் கடைசிக் காலத்தைச் சிரமப்படாமல் பார்த்துக் கொள்வது என்று ஊரார் முறை வைத்துக் கொண்டார்கள்.  குண்டு அய்யர் எங்கள் வீட்டுக்கும் வாரம் சாப்பிட வருவார்.  கிராமங்களில் பகல் சாப்பாட்டுக்கு உச்சி வேளை ஆகி விடுமாதலால்,  குண்டு ஐயரால் அதுவரை பட்டினி கிடக்க முடியாது.   காலையில் டிபன் சாப்பிட்டுப் பழக்கமானவர்.  எனவே தினமும் அவர் தங்கியிருந்த வீட்டில் அவரே எதாவது டிபன் தயார் செய்து கொள்வார்.  அவர் சேமியா உப்புமா செய்தால் ஊரே மணக்கும்.

காலை வேளையில்,  ஒரு சின்ன வாணலியில் வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சேமியாவையும், முந்திரியையும் பொன் முறுகலை வறுத்து  அந்த வாசனையில் ஆளைக் கிறங்க அடித்து விடுவார்.  தினமும் காலை நேரத்தில் நான் மந்தைக்கு மாடு ஓட்டிச்  செல்லும்போது என்னைக் கூப்பிட்டு ஒரு சின்னக் கிண்ணத்தில் வைத்துத் தருவார்.  மோர் சாதமும்  நார்த்தங்காய் ஊறுகாயும் தவிர வேறெதுவும் கண்டிராத என் நாக்கு இன்னும் கொஞ்சம் தர மாட்டாரா என்று ஏங்கும்.  இன்றைக்கும் எங்காவது சேமியா உப்புமாவைக் கண்டால்  குண்டு அய்யரின் கை வண்ணம் அடி நாக்கில் ருசி தட்டும்.  கண் முன்னே ஒரு வினாடி கிராமம் தோன்றி மறையும்.

சரி,  இப்போது நாம் சேமியா உப்புமா செய்வது எப்படி என்பது பற்றி நமது ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்….தாளிக்கும் ஓசை  (http://mykitchenpitch.wordpress.com/)

தேவையான பொருள்கள்:

சேமியா – 200 கிராம் (1 பாக்கெட்)
வெங்காயம் – 1
தக்காளி – 2
குடமிளகாய் – 1
பச்சைப் பட்டாணி – 100 கிராம் (உரித்தது)
பச்சை மிளகாய் – 4
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
எண்ணை – 1 டேபிள்ஸ்பூன்
பனீர் – 150 கிராம்
உப்பு – தேவையான அளவு

தாளிக்க –  எண்ணை, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, முந்திரிப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை.

செய்முறை:

  • பாக்கெட்டில் சொல்லியிருக்கும்படி சேமியாவை வேகவிடவும் அல்லது ஒரு லிட்டர் கொதிக்கும் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் எண்ணை, சிறிது உப்பு சேர்த்து, பின் சேமியாவையும் சேர்த்து வேகவிடவும்.
  • நன்கு வெந்ததும் வடிதட்டில் வடித்து, பின் ஒரு கப் குளிர்ந்த நீர் சேர்த்து வடிய விடவேண்டும்.(*)
  • வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணையைச் சூடாக்கி, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, உடைத்த முந்திரிப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்துக் கொள்ளவும்.
  • அதனுடன் நீளவாக்கில் அரிந்த பச்சை மிளகாய், வெங்காயம், குடமிளகாய், பச்சைப் பட்டாணி சேர்த்து, வதக்கவும்.
  • நன்றாக வதங்கியதும், பொடியாக அரிந்த தக்காளியைச் சேர்த்து வதக்க வேண்டும். உதிர்த்த பனீர், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளவும்.
  • மேலே வேகவைத்தை சேமியாவைச் சேர்த்து குறைந்த தீயில் நன்றாகக் கலக்கும்வரை ஓரிரண்டு நிமிடங்கள் கிளறி இறக்கவும்.
  • எலுமிச்சைச் சாறு பிழிந்து, கொத்தமல்லித் தழை சேர்த்துப் பரிமாறவும்.

* எந்த ப்ராண்டாக இருந்தாலும் சேமியாவைத் தனியாக வேகவைத்து குளிர்ந்த நீரில் அலசி, பின் உபயோகித்தாலே சேமியா ஒன்றோடொன்று ஒட்டாமல் இருக்கும். நேரிடையாக வாணலியில் சேர்த்து வேகவைத்தால் உதிரியான உப்புமா கிடைக்காமல் களி கிண்டியதுபோல் ஆகலாம். இது மிக முக்கியம்.

* இந்த உப்புமாவை ஃபோர்க் உபயோகித்து சாப்பிடுவதே வசதியானது மற்றும் ருசியானது. :)

Advertisements