மனிதன் எத்தனை வருஷம் உயிர் வாழ முடியும் என்கிற கேள்வி இப்போது என்னை வசீகரிக்கிறது.  கற்காலத்தில் மனிதனின் சராசரி வாழ்நாள் பதினெட்டு வருஷமாக இருந்தது.  சோழர் காலத்தில் அது முப்பத்துமூன்று ஆண்டுகளாக இருந்தது.  இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் முன்னேற்ற நாடுகளில் நாற்பத்தொன்பதாக உயர்ந்தது.  இன்றைய தினங்களில் அது எழுபத்து ஒன்பது வயது வரை வந்திருக்கிறது.  இதற்கு காரணம் டெக்னாலஜி, சுத்தம், சுகாதாரம் போன்றவற்றில் ஏற்பட்ட முன்னேற்றம்தான்.  ‘இவ்வாறு அதிகரித்துக்கொண்டே போனால் எதிர்காலத்தில் மனிதனால் அதிகபட்சமாக எத்தனை வருஷம் வாழ முடியும் ?  அவனால் சிரஞ்சீவித்தனம் பெற முடியுமா?’  என்கிற கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்திருக்கிறது.  என்னதான் சராசரி வாழ்நாள் அதிகரித்துக்கொண்டே வந்தாலும் மனிதனின் அதிகப்படியான வயசு இதுவரை 110 -க்கு மேல் போனதில்லை.  110 –தான்  ஒரு உச்ச வரம்பாக உள்ளது.  கிராமப்புறங்களில் சுயமாக அறிவித்தபடி சில தாத்தாக்கள் 160 — வயது வரைகூட வயசு சொல்லியிருக்கிறார்கள்.  அவர்கள் கணக்கு தப்பு என்பதுதான் நிரூபிக்கப்பட்டுள்ளது.  ஈகவெடார் நாட்டில் ஒரு கிராமத்தில் இவ்வாறு அதிக நாள் வாழ்ந்தவரை ஒரு வருஷ இடைவெளியில் இருமுறை  சந்தித்தார்களாம்.  இரண்டாவது தடவை அவர் வயதைக் கேட்டபோது ஏழு வயசு கூடி விட்டதாகச் சொன்னாராம்.  110 -க்கு மேல் வயசு சொல்வதெல்லாம் நம்பிக்கையாக இல்லை.

ஜெராண்டாலஜிஸ்டுகள் (கிழவியலாளர்கள்) மனித வாழ்வை ஒரு ஓட்டப்பந்தயத்துக்கு ஒப்பிடுகிறார்கள்.  நடுவே சில தடைகள் உள்ளன.  எல்லோரும் ஒரே இடத்தில்தான் ஆரம்பிக்கிறோம்.  சிலர் பாதியில் விழுந்து விடுகிறோம்.  பலர் முக்கால்வாசி தாண்டுகிறோம்.  அதன்பின் அந்தக் கடினமான ஓட்டப்பந்தயதைக் கைவிடுகிறோம்.  தடைகள் என்ன ?    இதயநோய்,  கேன்சர்,   டயபடீஸ்,   பிக்கல் பிடுங்கல்,  துரோகம்,  சோகம்,   மன அழுத்தம்,   வேலையில் டென்ஷன் இப்படி எத்தனையோ தடைகள் உள்ளன.  இவற்றை மீறிவிட்டால்  எல்லோராலும் 110 –வரை வாழ முடியும் என்கிறார்கள்.  மனிதனுக்கு மட்டும் இல்லை.  எல்லா மிருகங்களுக்கும் வயசாகிறது.  இயற்கையைப் பொறுத்தவரையில்,  ஓர் உயிரினம் இன விருத்திக்குப்பின் பயனற்றதாகி விடுகிறது.

மற்றொரு கோஷ்டி செயற்கையாக ஒவ்வொரு அவயத்தையும் ஸ்பேர் பார்ட்போல மாற்றி மாற்றி வாழ்நாளை நீடிக்க முடியும் என்கிறது.

சரி,  நீடிப்பதில் மட்டும் என்ன பயன் ?  வாழ வேண்டும்.  போர் அடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.  தற்போது அமெரிக்கா போன்ற முன்னேற்ற நாடுகளில் முப்பது வயசுக்குள் ஒரு வாழ்நாளுக்கு உண்டான அனுபவத்தைத் தீர்த்து விடுகிறார்கள்.  கல்யாணம், குழந்தை, டிவோர்ஸ்,  விபத்து, நிறைய பணம் எல்லாமே முடிந்து விடுகிறது.  அதன்பின் தொண்ணூறு வருஷம் தொடர்வதில் அர்த்தமில்லாமல் பண்ணிவிடுகிறார்கள்.

ஹெமிங்வே  போன்றவர்கள் ‘ஆச்சு…  போதும்’  என்று சொல்லி  தற்கொலை செய்து கொள்கிறார்கள்.  சங்க காலத்து வடக்கிருத்தல் போல.

நன்றி விகடன் — கற்றதும் பெற்றதும் — பாகம் II

Advertisements