ருத்ரன் வரைந்த நிர்வாண சரஸ்வதி

இந்த பதிவை எழுத மூன்று காரணங்கள். ஒன்று கிரி என்பவர் எழுதிய ஒரு பதிவு, இரண்டு திருச்சிக்காரன் என் முந்தைய பதிவில் எழுதிய சில பின்னூட்டங்கள், மூன்று டோண்டுவின் ஒரு பதிவு.

ஹுசேன் பற்றி என் நிலை – ஹுசேனுக்கு ஹிந்து கடவுள்களை அவர் இஷ்டப்படி வரைய எல்லா உரிமையும் உண்டு – தெரிந்ததே. டாக்டர் ருத்ரன், ஜெயமோகன் போன்றவர்கள் ஏறக்குறைய இதே நிலை எடுப்பவர்கள். டாக்டர் ருத்ரன் ஓவியர். அவர் ஹுசேனின் ஓவியங்களை ஒரு நிபுணருக்கு மட்டுமே கை வரும் ஆர்வத்துடன் ரசிக்கிறார், எழுதுகிறார். ஜெயமோகன் ஹிந்து மதத்தின் பன்முகத் தன்மையில் இவையும் அடங்கும் என்பதை வற்புறுத்துகிறார்.

பதிவுலகத்தில் இந்த நிலை எடுப்பவர்கள் மைனாரிடிதான். பல தளங்களில் உறுமல்தான் கேட்கிறது. நான் அவ்வப்போது பார்க்கும் தளங்களில் தமிழ் ஹிந்து தளம், டோண்டு, திருச்சிக்காரன் என்று பலரும் எதிர்வினை புரிகிறார்கள். என்ன கொழுப்பு இந்த ஹுசேனுக்கு, முகமதை இப்படி வரைவானா என்று பலரும் குமுறுகிறார்கள். என்ன வரையப்பட்டிருக்கிறது என்பதை விட பலருக்கு வரைந்தது ஒரு முஸ்லிம் ஆயிற்றே என்பதுதான் முக்கியம். ஒரு ஹிந்து வரைந்திருந்தால் என்ன சொல்வார்கள்? டாக்டர் ருத்ரன் இப்படி சில படங்கள் வரைந்திருக்கிறார், அதை என் ஒரிஜினல் பதிவில் பதிக்க அனுமதியும் கொடுத்தார். அதைப் பற்றி ஒரு குரல் – ஒரே ஒரு குரல் – கூட வரவில்லை. அவர்கள் ரேடாரில் இது வரவே இல்லையா, இல்லை ஹிந்து வரைந்தால் அது அவர்கள் மனதை புண்படுத்தாதா என்று தெரியவில்லை. இங்கே அவரது ஓவியங்களை மீள்பதிவு செய்திருக்கிறேன். (டாக்டர் ருத்ரன் பேரை இப்படி firing lineஇல் இழுப்பதற்கு அவர் என்னை மன்னிப்பாராக!)

கிரியின் முக்கியமான கேள்வி # 1 – ஹுசேனை விமர்சிப்பவர்கள் ஹிந்து வெறியர்களா?
இல்லை, இல்லவே இல்லை என்று நான் உறுதியாக கருதுகிறேன். ஹுசேன் படம் என் மனதை புண்படுத்துகிறது என்று சொன்னால் ஹிந்துத்வா என்று யாராவது சொன்னால் “போய்ட்டு வா” என்று அனுப்பி விடுங்கள். (ஹிந்துத்வா என்பது எப்படி “கெட்ட” வார்த்தை ஆகிறது? இஸ்லாமியம், கிறிஸ்துவம், பவுத்தம் எல்லாம் கெட்ட வார்த்தையா?)
உங்கள் அபார்ட்மெண்டில் நீங்கள் உங்கள் சந்தோஷத்தை கொண்டாட மிக அதிக வால்யூமில் பாட்டு வைத்து ஆடிக் கொண்டிருக்கிறீர்கள். இது உங்கள் அபார்ட்மென்ட், உங்களுக்கு கொண்டாட எல்லா உரிமையும் உண்டுதான். ஆனால் ஏதோ ஒரு புள்ளியில் அது அடுத்தவர்களை பாதிக்கத்தான் செய்கிறது. அப்படி பாதிக்கும் புள்ளி என்ன என்பதில் பலருக்கும் கருத்து வேறுபாடு இருக்கலாம், ஆனால் அப்படி ஒரு புள்ளி இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. என்னைப் பொறுத்த வரையில் இந்த விஷயத்தில் அந்தப் புள்ளி ஹுசேனைத் தாண்டி வெகு தூரத்தில் இருக்கிறது. அதனால்தான் இப்படி வரைவது தவறு என்று சட்டம் இருந்தால் அது மாற்றப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அதற்காக உங்களுக்கு அந்த புள்ளி பக்கத்தில் இருக்கக் கூடாதா என்ன? எனக்கு காது டமாரம், பாட்டு எவ்வளவு சத்தமாக வைத்தாலும் கேட்பதில்லை என்றால் நீங்களும் செவிடாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.
எனக்கு தெய்வங்கள் உண்மையிலேயே மனித சக்திக்கு அப்பாற்பட்டவை. போயும் போயும் ஒரு மனிதன் தெய்வங்களை அவமானப்படுத்த முடியும் என்று நினைக்கக் கூட முடியவில்லை. பெரியார் பிள்ளையாருக்கு செருப்பு மாலை போட்டு பிள்ளையாரை அவமானப்படுத்துவதோ இல்லை ஹுசேன் சரஸ்வதியை நிர்வாணமாக வரைந்து சரஸ்வதியை அவமானப்படுத்துவதோ எப்படி முடியும்? நீங்கள் தெய்வங்கள் மனிதர்களால் அவமானப்படுத்தக் கூடியவை என்று நினைக்கலாம். அப்படி நினைப்பதும், அதனால் ஹுசேனை விமர்சிப்பதும் உங்கள் உரிமை. ஆனால் அவர் மீது வன்முறை என்ற பேச்சே கூடாது, அது சட்ட, நியாய விரோதம். சட்டம் இருக்கிறதாம், அதன்படி நடவடிக்கை எடுங்கள்! (நான் அந்த சட்டம் மாற்றப்பட வேண்டும் என்று நினைப்பவன். ஏனென்றால் கருத்து சுதந்திரம் எனக்கு மிக முக்கியம்.)
பொதுவாக இந்திய அரசுக்கு இந்த புள்ளி மிக பக்கத்தில் இருக்கிறது. அதனால்தான் இந்த மாதிரி விஷயத்தில் மிக ஜாக்கிரதையாக – முட்டாள்தனமாக, கோழைத்தனமாக – நடந்து கொள்கிறது. அதனால்தான் சல்மான் ரஷ்டியின் புத்தகம் தடை செய்யப்படுகிறது, டாவின்சி கோட் திரைப்படம் தடை செய்யப்படுகிறது. இன்றைக்கு ஹுசேன் செய்ததும் தவறு என்று சட்டமே இருப்பது போல தெரிகிறது. (சும்மா டம்மி கேசா, இல்லை நிஜமாகவே சட்டப்படி ஹுசேன் தண்டனைக்குரியவரா என்று எனக்கு சந்தேகம் உண்டு.)
இப்படி வரைந்திருப்பது என் மனதை புண்படுத்துகிறது என்று சொல்ல – உங்கள் உணர்வுகளைப் பற்றி நீங்கள் சொல்ல – உங்களுக்கு இல்லாத உரிமையா? தாராளமாக சொல்லுங்கள். அந்த புள்ளி எங்கே இருக்கிறது என்று விவாதியுங்கள். ஆனால் சத்தமாக பாட்டு வைத்திருப்பவரிடம் யப்பா சாமி, கொஞ்சம் வால்யூமை குறைப்பா என்று வேண்டுகோள் விடலாம்; சமூக நிர்பந்தம் மூலம் (கள்ளுக்கடைகளுக்கு எதிராக காந்தி மறியல் செய்யச் சொன்ன மாதிரி) அவரை வீட்டை காலி செய்ய வைக்கலாம். என்ன நீ வீட்டுக்கு திரும்பி வந்தால் ஜெயில், அடிப்போம் என்று பயமுறுத்துவீர்களா? அப்படி செய்வது சரி என்று நினைப்பவர்கள் யாராவது உண்டா? அந்த மாதிரி தண்டனைகள் “குற்றத்துக்கு” appropriateதானா? இப்போது ஹுசேன் கட்டார் குடிமகனாகி இருப்பது ஜெயில், அடி என்ற பயத்தினால்தானே? இவரை பயமுறுத்துவது மட்டும் சரி என்று எப்படி நினைக்கிறீர்கள்? அப்படி செய்பவர்களுக்கும் கட்டைப் பஞ்சாயத்துக்காரர்களுக்கும் என்ன வித்தியாசம்?

கிரியின் முக்கியமான கேள்வி # 2 – ஹுசேன் படங்கள் கலைக்கண்ணோடு மட்டும் பார்க்க வேண்டியவையா?
இந்த கலைக்கண், மாலைக்கண்ணோடு எல்லாம் எப்படி பார்ப்பது என்று எனக்கு தெரியாது. ஓவியத்தை பிரஷ் வொர்க், பேப்பர் வழவழ என்று இருக்கிறதா இல்லையா, அது இம்ப்ரஷனிஸ்ட் ஓவியமா இல்லை க்யூபிஸ்ட் ஓவியமா என்று ஒரு expert பார்க்கலாம். எனக்கு அந்த ஓவியம் என்னுள் என்ன உணர்ச்சிகளை எழுப்புகிறது என்பதுதான் முக்கியம். எல்லாரும் அப்படித்தான் பார்க்க வேண்டும் என்று எதிர்பார்த்தால், you will be disappointed.

திருச்சிக்காரனின் முக்கியமான கேள்வி – பெரும்பாலான மக்கள் மனம் புண்படும் என்று தெரிந்தும் ஏன் ஹுசேன் இப்படி செய்ய வேண்டும்? அவருக்கும் ஒரு சமூகப் பொறுப்பு வேண்டாமா? (அதாவது அபார்ட்மெண்டில் பாட்டு கொஞ்சம் கம்மி வால்யூமில் கேட்க வேண்டும் என்று அவருக்கு தெரிய வேண்டாமா?) அதற்கு காரணம் மத வெறிதானே?
திருச்சிக்காரன் சொல்வது ஓரளவு நியாயமானதே. நாலு பேர் வாழும் அபார்ட்மென்ட் காம்ப்ளெக்சில் எவனும் இரவு பாட்டை சத்தமாக வைத்துவிட்டு தோம் தோம் என்று ஆடக் கூடாது என்று எதிர்பார்ப்பதில் என்ன தவறு? ஆனால் ஹுசேன் விஷயத்தில் பாதிப்பு tangible இல்லை. மனம் புண்படுகிறது என்பதை காரணமாக வைத்து ஒரு விஷயத்தை தடை செய்தால் அப்புறம் எதையும் யாரும் செய்ய முடியாது. பாமியன் புத்தர் சிலைகள் தாலிபன்காரர்களின் மனதை புண்படுத்தியது, அதனால்தான் அந்த அரிய கலைச் செல்வத்தை உடைத்து எறிந்தார்கள். நாளை ஒரு அறிவுக் கொழுந்து வந்து அஜந்தா ஓவியங்களுக்கு மேலாடை வரையச் சொல்வார். இன்று ஹுசேனை தண்டித்தால் அதுதான் நாளை அவர்களுக்கு precedent ஆக மாறும்.
ஹுசேன் இந்த படங்களை வரைந்து ஒரு நாற்பது வருஷம் இருக்கும் போலத் தெரிகிறது. இரண்டு மூன்று வருஷமாகத்தான் பலரும் சவுண்ட் விடுகிறார்கள். முப்பது முப்பத்தைந்து வருஷம் பெரும்பாலான மக்கள் ஒன்றும் சொல்லவில்லை என்றால் அவர் என்ன நினைத்திருப்பார்? பெரும்பாலான மக்கள் மனம் நம் ஓவியங்களால் புண்படுகிறது என்றா? இது சும்மா சென்சேஷனுக்காக ஹிந்துக்களை மத அடிப்படையில் ஒன்றாக திரட்ட விரும்பும் அமைப்புகளும், ஊடகங்களும் செயற்கையாக ஊதி பெரிதாக்கி இருக்கும் பிரச்சினை.
அப்புறம் அவர் என்ன வீடு வீடாகப் போய் தன் படங்களை காட்டிக் கொண்டிருக்கிறாரா? அவர் இருப்பது ஒரு elite உலகம். அங்கே அம்பானிகளும் பச்சன்களும் சோனியாக்களும்தான் வாழ்கிறார்கள். அவர் படம் வரைந்து அது ஒரு புண்ணாக்கு பாதிப்பையும் நம் சாதாரணர் சமூகத்தில் ஏற்படுத்தப் போவதில்லை. கான் திரைப்பட விழா, வெனிஸ் திரைப்பட விழாவில் மட்டுமே திரையிடப்படும் ஆர்ட் ஃபில்ம் மாதிரிதான் அவரது ஓவியங்களும். மிஞ்சி மிஞ்சிப் போனால் ஏதாவது ஒரு புத்தகத்தில் பதித்திருப்பார்கள்.
நாற்பது வருஷம் முன்னால் வரைந்த படத்துக்கும் அவர் வருத்தம் தெரிவித்திருப்பதாக கேள்விப்பட்டேன். (என் கண்ணில் அவர் அப்படி செய்திருக்கக் கூடாது.) இன்னும் அவரிடமிருந்து நீங்கள் என்னதான் எதிர்பார்க்கிறீர்கள்? அவர் வேறு என்னதான் செய்ய வேண்டும்?
மேலும் நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும் பெரும்பாலான மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டியதாகத்தான் இருக்க வேண்டும் என்ற வாதம் சரி இல்லை. ஒரு நூறு வருஷத்துக்கு முன்னால் ஜாதி தவறு என்று ஆயிரத்தில் ஒருவர் நினைத்திருந்தால் சொல்லி இருந்தால் அதிகம். அவர்களும் இப்படி நம் கருத்து பெரும்பாலான மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், அதனால் நாம் சொல்லக் கூடாது, எழுதக் கூடாது, என்று நினைத்திருந்தால் இன்று நம் கதி என்ன?

டோண்டுவின் கேள்வி # 1 – ஹிட்லரை நிர்வாணமாக வரைந்தது அவனை அவமானப்படுத்தவே என திருவாய் மலர்ந்தருளியுள்ள ஹுசைன் சரஸ்வதி, சீதை, பார்வதி ஆகிய பெண் கடவுளரை வரைந்தது எதில் சேர்த்தி?
புண்படுத்தும் எண்ணத்தில் வரையவில்லை என்று ஹுசேன் சொல்லி இருக்கிறார். சரஸ்வதியை “அவமானப்படுத்தவும்” அவருக்கு சுதந்திரம் உண்டு. நான் வணங்கும் சரஸ்வதி தெய்வம். தெய்வத்தை மனிதன் அவமானப்படுத்த முடியும் என்று டோண்டு நினைப்பது தெய்வத்தை குறைத்து மதிப்பிடுவது. அவர் சரஸ்வதியை குறைத்து மதிப்பிட்டு என் போன்ற கடவுள் நம்பிக்கை உள்ள ஹிந்துக்களின் மனதை புண்படுத்துகிறார். உண்மையில் அதுதான் சரஸ்வதிக்கு “அவமானம்!”

டோண்டுவின் கேள்வி # 2 – நிர்வாணமாகக் கூட வேண்டாம், முகம்மதுவின் படத்தை துணியுடன் வரையத் துணிவானா அவன்?
சம்பந்தமே இல்லாத கேள்வி. முகமதுவை வரைந்தால்தான் சரஸ்வதியை வரைய வேண்டும் என்று டோண்டு புதிய கோட்டா சிஸ்டம் கொண்டு வருகிறார்! அவருக்கு துணிவில்லை என்றே வைத்துக் கொள்வோம். வீரர்களுக்கு மட்டும்தான் கருத்து சுதந்திரம் என்று சொல்ல வருகிறாரா?

டோண்டுவின் கேள்வி # 3 – முகம்மது பற்றிய ரெஃபரன்ஸ் வந்ததற்கே இஸ்லாமிய ஜிகாதி அமைப்புகள் கலவரம் செய்ய, துண்டைக் காணோம், துணியைக் காணோம் என ஓடி ஒளிந்து அதை நீக்கியவன் இங்கு மட்டும் ஏன் மொண்டித்தனம் செய்ய வேண்டும்?
இது என்ன என்று தெரியவில்லை. ஹுசேன் ஏதோ முகமதுவின் படத்தை வரைந்து பின்னால் நீக்கி இருக்கிறாரோ என்னவோ. சரி பேட்டை ரவுடிக்கு மாமூல் கொடுத்தாயே எனக்கு ஏன் கொடுக்கவில்லை என்று கேட்கலாமா? அந்த இஸ்லாமிய அமைப்புகளை அடக்குங்கள் என்று டோண்டு பொங்கி இருந்தால் புரிந்து கொள்ளலாம். அவனை மட்டும் அயோக்கியத்தனம் பண்ண விடுகிறாயே, என்னை ஏன் விடுவதில்லை என்று கேட்பது போல அல்லவா இருக்கிறது?

டோண்டுவின் கேள்வி # 4 – சல்மான் ருஷ்டி விவகாரத்தில் அவருக்கு வந்த மரண மிரட்டலை எங்காவது இவன் எதிர்த்திருக்கிறானா? (முக்கால்வாசி அதற்கு ஆதரவு கூட தெரிவித்திருப்பான்)
டோண்டுவுக்கும் அவர் நிலை என்ன என்று தெரியாது – எனக்கும் தெரியாது. என்ன, நான் எந்த முன் முடிவுக்கும் போகவில்லை.
அப்புறம் ஹுசேன் எந்த நிலை எடுத்தால் என்ன? அவர் ரஷ்டி விஷயத்தில் தவறான நிலை எடுத்தால் ஹுசேன் விஷயத்தில் நாம் எல்லோரும் தவறான நிலை எடுக்க வேண்டுமா? ஹுசேன் ரஷ்டி வீட்டில் திருடினால் நீங்கள் ஹுசேன் வீட்டில் திருடுவீர்களா? என்ன லாஜிக் என்றே புரியவில்லையே!

டோண்டுவின் கேள்வி # 5 – தஸ்லீமா விவகாரத்தில் இவனது நிலைப்பாடு என்ன?
டோண்டுவுக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது. என்ன நிலைப்பாடாக இருந்தாலும் அது irrelevant.

டோண்டுவின் கேள்வி # 6 – மேலே உள்ள இரண்டு கேள்விகளுக்கான விடைகள் அவனுக்கு சப்பைக்கட்டு கட்டும் போலி மதச்சார்பற்றவர்களிடமாவது அவர்களை பொருத்து உள்ளனவா?
நான் மதச்சாற்பற்றவனா இல்லையா என்றெல்லாம் எனக்கு தெரியாது. என்னிடம் விடைகள் இருக்கின்றன, அதை முன்னாலும் எழுதி இருக்கிறேன். சல்மான், மற்றும் தஸ்லிமாவுக்கு, மற்றும் டாவின்சி கோட், மற்றும் முகமதை பற்றி வந்த டேனிஷ் கார்ட்டூன், நாளை யாராவது முகமதை ஓரினச் சேர்க்கையாளராக வரைவது இல்லை மேரியும் ஏசுவும் உறவு கொள்வது போல வரைவது போன்றவற்றுக்கு முழு உரிமை உண்டு. நான் அதை விமர்சிக்கலாம். (ஏசு மேரி உறவு படம் வரையப்பட்டால் நான் அதை நிச்சயமாக கண்டிப்பேன், ஆனால் அப்படி வரைய அவருக்கு முழு உரிமை உண்டு என்று வாதிடுவேன்.)
தன கேள்விகளுக்கு மாற்று கருத்து கொண்ட யாரும் பதில் சொல்லாமல் நழுவுகிறார்கள் என்று டோண்டு சொல்கிறார். For the record, நான் நிச்சயமாக சொல்லி இருக்கிறேன், டோண்டு அவற்றை படித்துவிட்டு இங்கே எதிர்வினையும் புரிந்திருக்கிறார்.

டோண்டுவுக்கும் ஒரு கேள்வி: சல்மான், தஸ்லிமா, டாவின்சி கோட் தடை, முகமதைப் பற்றி வந்த டேனிஷ் கார்ட்டூன் ஆகியவற்றில் உங்கள் நிலை என்ன?

டோண்டுவின் வாதம் மிக சிம்பிளாக: ஹுசேன் தனக்கு ஒரு நியாயம், ஊருக்கு இன்னொன்று என்று நினைக்கும் அயோக்கியன், அதனால் நாம் “நல்லவர்களுக்கு” பார்க்கும் நியாய தர்மத்தை இவருக்கு பார்க்க வேண்டியதில்லை. இந்த நிலை எனக்கு இசைவானதில்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

தொடர்புடைய பதிவுகள்:
ஹுசேனுக்கு ஹிந்து கடவுள்களை அவர் இஷ்டப்படி வரைய எல்லா உரிமையும் உண்டு – ஆர்வி, டாக்டர் ருத்ரன், ஜெயமோகன்
ஹுசேன் செய்தது தவறு – கிரி, டோண்டு, திருச்சிக்காரனின் கருத்துகள் இந்த பதிவின் பின்னூட்டத்தில் இருக்கின்றன.
ஹுசேனின் கட்டார் முடிவு பற்றி
ஆர்வி, டாக்டர் ருத்ரன், சோ ராமசாமி