24 ரூபாய் தீவு  |  
நன்றி –  மகேஸ்வரன் http://www.maheshwaran.com

சுஜாதாவின் ’24 ரூபாய் தீவு’ – ஒரு த்ரில்லர் / துப்பறியும் / தனி மனித துயரம் என்று எந்த வகையிலும் ‘categorise’ செய்ய முடியாத அற்புதமான நாவல். இது குமுததில் தொடர்கதையாக வெளிவந்த போதே கன்னடத்திலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றதாம். அதை தொடர்ந்து கன்னடத்தில் ‘ஒண்டித்வனி’ என்ற பெயரில் ஏகப்பட்ட வணிகரீதியான மாற்றங்களுக்கு உட்பட்டு திரைப்படமாக எடுக்கப்பட்டு தோல்வியடைந்ததாம். இந்த நாவலை ‘அப்படியே’ எடுத்தால் நன்றாக இருக்கும் என்று கமல்ஹாஸன் அடிக்கடி சொல்வார் என்று சுஜாதா தன் நாவலின் முன்னுரையில் எழுதியிருக்கிறார். 120 பக்கங்களில் ஒரு நிருபரின் அபாயகரமான வாழ்க்கையை அச்சு அசலாக நம் கண் முன்னாடி கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார் சுஜாதா. நம்புங்கள்… இந்த நாவலை படிப்பது ஒரு roller-coaster ride-க்கு சமானம்.

தின ஒளியில் நிருபராக வேலை பார்க்கும் விஸ்வநாதனுக்கு ஒரு பெண்ணிடம் இருந்து ஃபோன் கால் வருகிறது. குறித்த நேரத்துக்கு விஸ்வநாதன் அங்கு போகும்போது அந்தப் பெண் கொலை செய்யப்பட்டு இருக்கிறாள். போலீஸுக்கு தகவல் தெரிவித்துவிட்டு வீட்டுக்கு திரும்பி வரும் விஸ்வநாதன், அந்த ஃபோன் கால் தன் வாழ்க்கையை எப்படியெல்லாம் புரட்டி போடபோகிறது என்று எதிபார்க்கவில்லை. அந்த கொலை பற்றி அவன் எழுதும் செய்திகளால் அவன் ஓவர்நைட்டில் புகழடைகிறான். அரசியல் ரீதியான மாற்றங்கள் ஏற்படுகின்றன. கூடவே எதிரிகளும் முளைக்கிறார்கள்.

இது தெலுங்கு டப்பிங் தனமான பூனை புலியாகி திருப்பி தாக்கும் கதை அல்ல. விதி வசத்தால் ஓட ஓட விரட்டியடிக்கப்படும் ஒரு சாதாரண மனிதனின் அல்லல். அரசியல்வாதிகளின் கைப்பாவையாய் செயல்படும் அரசு இயந்திரங்களும், அரசியல் திரையில் பொம்மலாட்டம் காட்டும் ராஜதந்திரிகளும், சந்தர்ப்பம் கிடைத்தால் யார் முதுகிலும் ஏறி மேடை போடும் தொழிலாளர் இயக்கங்கள், இவர்களுக்கிடையே சிக்கிக் கொண்டு போராடும் ஒரு சாமானியனின் விதி. இந்த நாவலின் சிறப்பு என்று சொன்னால், கடைசிவரை எதிரி கண்ணுக்கு தெரியாமல் இருப்பது தான். ஒரு கட்டத்தில் நமக்கே விஸ்வநாதன் மீது ‘இவனுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை?’ என்று ஒரு கையாலாகாத கோபம் வருகிறது.

கடைசி 20 பக்கங்களில் கணேஷும் – வசந்தும் வருகிறார்கள். ஒரே பாராவில் வசந்த் மொத்த புதிரையும் அவிழ்த்துவிடுகிறான். முடிவு யாரும் எதிர்பாராதது என்றபோதும் விஸ்வநாதன் அந்த மனநிலைக்கு வருவான் என்பதும், அவன் வாழ்க்கையில் விளையாடும் சூத்ரதாரி யார் என்பதும் இந்த நாவலை படிக்கும் யாருமே யூகிக்ககூடியது என்பதால் பெரிய ஆச்சரியம் இல்லை. ஆனால் விஸ்வநாதனின் பத்து வயது தங்கை பலாத்காரம் செய்யப்படுவதும், அதை தொடர்ந்து வரும் காட்சிகளும் உண்மையிலேயே தூக்கத்தை கொள்ளையடிக்கக் கூடிய சம்பவங்கள்.

சுஜாதாவே சொல்வது போல இது சினிமாவாக ‘அப்படியே’ எடுக்க மிகவும் தோதான கதை. சமயத்தில் பேனாவை அமிலத்தில் தோய்த்து எடுத்தது போல படு காட்டமாக எழுதியிருக்கிறார். சில சமயங்களில் எனக்கு புத்தகத்தை மூடி வைத்து விடலாமா என்று கூட தோன்றியது. ஆனால் அது தான் சுஜாதாவின் ஸ்டைல் – சுற்றி சுற்றி வளைக்காமல் நேரடியாக விஷயத்துக்கு வருவது. இரண்டாவது பாதியில் நடப்பவை பலமுறை படித்துவிட்ட புளித்துபோன ‘cliched’ சம்பவங்கள். ஆனால் கிளைமேக்ஸில் ஜிவ்வென்று விட்டதை பிடித்து விடுகின்றார். அது மட்டும் தான் இந்த நாவலின் பலவீனம்.

சுஜாதாவுக்கு பெயரையும் புகழையும் தேடித்தந்த & வாசகர்களால் மிகவும் விரும்பப்படும் படைப்புக்களில் ஒன்று இந்த ’24 ரூபாய் தீவு’. ஒரு முறை தாராளமாக படிக்கலாம். அவரின் ‘பிரிவோம் சந்திப்போம்’ படமாவதை போல, இதையும் ‘அப்படியே’ யாராச்சும் படமாக எடுப்பார்கள் என்று நம்பலாம்.

நன்றி –  மகேஸ்வரன் http://www.maheshwaran.com

தொடர்புடைய பதிவுகள்:

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “24 ரூபாய் தீவு”