[paramacharya-021.jpg]
ஆயிரத்து இருநூறு
ஆண்டுகள் முன்னம்

ஆரியாம்பாள் ஈன்றனள்  — ஓர்
அழகு மதலை; அவள் —
அவ்வாறு ஈன்றெடுத்தது — அவ்
ஆதிமுதலை;  அதைத்தான்
ஆதிசங்கரர் ஆக்கியது — ஓர்
ஆற்று முதலை!

காலடி பிறந்தவன்
காலடி பதிந்திடாத
நாலடி — இந்த
நாட்டினில் இல்லை;  திரு —
மாலடி போற்றி — அவன்

மொழிந்த பஜகோவிந்தம் போல்
நூலடியொன்று — பிற
நூலோர் ஏட்டினில் இல்லை !

‘அவன்தான் —
இவன்;
இவன்தான்
அவன்!’

எனும்படி — இங்கு
எழுந்தருளினான்….

காஞ்சி —
காமகோடி — ஸ்ரீ
சந்திர சேகரேந்திர —
சரஸ்வதி;  அந்த
இமயநதிக்கு இணையான — ஒரு
சமய நதி!

துவராடை தரித்த
திருவாசகத்தை;  இரு
கால்கொண்டு — ஒற்றைக்
கோல்கொண்டு — இப்
படிமிசை உலவிய — அத்வைதப்
பெருவாசகத்தை;

கயிலைநீங்கி காஞ்சிவந்த — ஞான
வெயிலை;  மன்பதையின் —
அவத்தைப் போக்க
பவத்தைப் போக்க —
தவத்தைப் புரிந்த சிவத்தை;

அரிசிப் பொறி
அருந்தி —

அஞ்சு பொறி
அவித்த….

நுழைபுலம் மிக்க — ஒரு
நூற்றாண்டுக் கிழவனை;  நம்
நெஞ்சை — ஒரு
நஞ்சை நிலமாக்க  — விழி
நாஞ்சில் கொண்டு
நாளும் உழுத உழவனை;

அரசுமுதல் ஆண்டிவரை —
அறியும் ‘பெரியவாள்’  என்று;
அழுக்கு மனங்களில்
அப்பிக் கிடக்கும் —
அவலப் புதர்களை
அரியும் பெரிய வாள் என்று!

கவிஞர் வாலி (இவர்கள் இன்னமும் இருக்கின்றார்கள்)

Advertisements