இன்றைக்கு நண்பர் ராஜகோபால் அனுப்பிய ஒரு writeup, அவரது நண்பர் கோபால் எழுதியது – டாங்கர் பச்சடி பற்றி. டாங்கர் பச்சடி எல்லாம் மறந்தே போயாச்சு. கோபால் எழுதியதைப் பார்த்ததும் பழைய ஞாபகம் எல்லாம் வருகிறது.

கோபால் கிணற்றில் குளிப்பதைப் பற்றி எல்லாம் எழுதி இருக்கிறார். அவருக்கு பெரிய கிணறு என்றால் எங்களுக்கு கோவில் கிணறு. என்ன நெல்லி மரம் எல்லாம் கிடையாது, அதிருஷ்டம் இருந்தால் நுங்கு மட்டும் சில சமயம் கிடைக்கும். அனேகமாக எல்லா நாட்களுமே அங்கேதான் குளிப்போம், ஆனால் ஸ்கூல் நாட்களில் அவசர அவசரமாக வீட்டுக்கு வர வேண்டி இருக்கும். விடுமுறை நாட்களில்தான் மத்தியானம் போனால் மணிகணக்கில் கிணற்றிலேயே கிடக்க முடியும். ஈரமான டவுசருடன் வீட்டுக்கு வந்தால் அடி விழும், அதனால் டவுசர் காயும் வரை தண்ணீரே இல்லாத ஏரியின் கரையில் விளையாட வேண்டி இருக்கும் (அல்லது டவுசரையும் அவிழ்த்து வைத்துவிட்டு ஃப்ரீயாக நீந்த வேண்டி இருக்கும்.) அல்லி ஜம்ப் என்று குதிக்கும்போது காலை உயர்த்தி முட்டியை கட்டிக் கொண்டு குதித்தால் தண்ணீர் அப்படியே சிதறும்! (இப்போது தொப்பை இடிக்கும்!) எனக்கு கடைசி வரையில் டைவ் அடிக்க வரவே இல்லை, அதுதான் குறை!

ஓவர் டு கோபால்:

நெல்லிக்காயை டாங்கர் பச்சடி பண்ணுவார்கள், தயிரில், ஒரு கரண்டி உளுத்தம் பொடியை போட்டு, மிகச்சுவையாக இருக்கும். இது மங்கள நாளில் மட்டுமே கிடைக்கும். மற்ற நாட்களில் நெல்லிக்காயை எப்படி சுவைப்பது?

நெல்லிக்காய் சாப்பிட வேண்டும் என்று அடிக்கடி தோன்றும் -சின்ன வயதில் (மசக்கையெல்லாம் இல்லை). இதில் பிரச்சனை என்னவென்றால் இந்த நெல்லிக்காய் மரம் முட்களால் ஆனது, அதில் ஏறி அதை பறிக்கவும் முடியாது. அதனை பறித்து சாப்பிடவும் வேண்டும், என்ன செய்ய. அதற்க்கு உதவுவதுதான் இந்த நண்பன் நீளமான “துரட்டி”..

“மாமி, உங்காத்தில் நெல்லிக்காய் துரட்டி இருக்கா?” என்று கேட்டு வீடு வீடாக படையெடுத்து, ஒரு வீட்டில் கிடைக்கும். இந்த நெல்லிக்காய் மரமமொரு விசித்திரமானது. அது நம் சேட்டைகைளை சுண்டப் போடவோ என்னவோ, மரம் மிக உயரமாகவும், முட்களால் ஆங்காங்கே ஆயுதங்களை தாங்கியும் இருக்கும். அதனால் இதில் ஏறி பறிக்கமுடியாது. மரம் எல்லார் வீட்டிலுமிருக்காது. அந்த கிராமத்திலேயே ஒரு மஹா கஞ்சன் வீட்டில் இருந்தால் நம் பாடு அதோகதிதான். இந்த இரண்டு நெல்லிக்காய்களில் மாணாக்கர்கள் விரும்புவது அறநெல்லிக்காய் எனப்படும் சிறு நெல்லிக்காயையே. பலர் வீடுகளில் இந்த துரட்டி சின்னதாகவே இருக்கும், எட்டவும் செய்யாது. துரட்டியின் முனை மிகச் சிறிய “கேள்விக் குறி” போல் இரும்புக் கொண்டியினால் பொருத்தப்பட்டிருக்கும்.

பழங்காலத்தில் (1980 வரை கூட பழங்காலந்தான்), துணியை மடியாக உலர்த்த இரண்டு அல்லது நான்கு குறுக்குக் கம்பிகளை வீட்டின் பின் கட்டுகளில் கட்டியிறுப்பார்கள். துவைத்த துணியை உலர்த்த வேண்டுமாயின், ஒரு மூங்கில் கழியை வைத்து, மொத்தமாக சேர்த்து முனையில் குத்தி ஒரு எம்பு எம்பி கம்பியின் மேலே போட்டு, பின் அதை அனாசயமாக விரித்து விடுவார்கள். நம்மூர் பாட்டிகள் மிக அற்புதமாக இவற்றை கையாள்வார்கள். சோம்பேறித்தனத்திற்காக அதை பசங்களிடம் கொடுத்து “நீ உண(ல)ர்த்தப்பா” என்று கூற மாட்டார்கள். நீங்கள் இப்பொழுது இதைச் செய்து பாருங்கள் – உங்கள் கை வலிக்கும், தலை சுற்றும். சரி, தொடங்கிய பிரச்சனைக்கு வருவோம்.

இந்த மூங்கில் சாய்த்து வைத்திருக்கும் மூங்கிலை எடுத்துக்கொண்டு போய், இரவல் துரட்டியில் கட்டி, ஒரு பாலத்தை ஏற்படுத்தி, கிளைகளுக்குள் துழாவி, நெல்லிக்காயை சாய்த்து, பின் அதை மண் போக தட்டி, அலம்பி, பங்கு போட்டு தின்பது சுவையாக இருக்கும். இதில் துரட்டியில் மூங்கிலை சரியாக கட்டாவிட்டால் கீழ்ப்பகுதி சாய்ந்துவிடும்,

பலம் கொண்டமட்டும் இரண்டு இணைப்புகளையும் கட்டவேண்டும், ஏனென்றால் மூங்கில் பகுதி வழவழப்பாக இருக்கும்.

வீட்டில் துணி உணர்த்த மூங்கில் கம்பை காணாது தேடி, நாங்கள் அதை திருப்பிக் கொண்டு வைக்கும்போது பிடிபட்டு அந்த மூங்கிலாலேயே அடிவாங்கிய அனுபவம் உண்டு. முன்பெல்லாம் எதற்கு எடுத்தாலும் அடிதான். ஒவ்வொருவரின் முதுகும் வீட்டின் பெரியவருக்கு ஒரு சலவைக்கல்.

வருடாந்திர விடுமுறை வரும்போது வயல்களுக்கு நடுவே உள்ள பெரிய கிணறுதான் எங்களுக்கு சொர்க்கம். காலையில் ஒரு ஆறு மணிக்கு போனால், குளித்துவிட்டு வரும்போது சுமார் பத்து மணி ஆகிவிடும். இந்த கிணற்றுக்கு நெல்லிக்காய் கிணறு என்று பெயர். முக்கால் வாசி நாள் தண்ணீர் நிரம்பி இருக்கும். சலனமில்லாமல், ஒரு கண்ணாடியை விரித்தார்போல் தண்ணீர் இருக்கும். ஒரு பெரிய நெல்லிக்காய் மரம் பூத்துக்குலுங்கிக் கொண்டிருக்கும் கரையில். இதில் என்ன விசேஷம் என்றால், மரத்தின் வேர் மட்டுமே கரையில் இருக்கும். அதன் கிளை பரந்து விரிந்து கிணற்றின் மேலே படர்ந்து இருக்கும். அதில் ஏறவோ, நெல்லிக்காயை பறிக்கவோ அனுமதி கிடையாது.

இதற்கு ஒரு உபாயம் செய்வோம். நாங்கள் ஒரு 5/6 பேர் இருப்போம். ஒருவன் கல்லைக்கொண்டு கிளையில் ஓங்கி எரிந்துவிட்டு “தொப் தொப்” என்று கிணற்றில் குதிப்போம். நெல்லிக்காய் எல்லாம் கீழே தண்ணீரில் வீழ்ந்து மூழ்க ஆரம்பிக்க, நாங்களோ ராக்கட்டை கிணற்றுக்குள் செலுத்தியது போல், நெல்லிகாயை துரத்தி பிடித்து சுவைப்போம். இதில் போட்டி வேறு – யார் எவ்வளவு அதிகமாக பிடிக்கிறார்கள் என்று. சில மரங்களில் வெளிர் பச்சையில் இருக்கும் நெல்லி புளிக்கும், சில மரங்களில் சுவையாக இருக்கும். இதில் கொஞ்சம் உரப்புப் பொடி, உப்பு எல்லாம் போட்டு சுவைத்துள்ளோம். அல்வா சாப்பிடுவது போல் சாப்பிட்டுள்ளோம்.

இப்போது யாராவது “சார், நெல்லிக்காய் சாப்பிடுகிறீர்களா?” என்று கேட்டால் அவரை மேலிருந்து கீழ் வரை ஒரு வர்ணபூச்சு பார்வையோடு நிறுத்திக் கொள்கிறேன். வசந்த கால நினைவுகள் நினைவிலேயே தூங்குகிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: நண்பர்கள்->கோபால் பதிவுகள்

Advertisements