துரோணர் அவரது வாழ்நாளில் பல காலகட்டங்களில் பிராமண நியதிகளுக்குப் புறம்பாக வாழ்ந்திருப்பதாக படுகிறது. இதற்கு சான்றுகள் பல இருக்கிறது. இதை பற்றின ஆராய்ச்சி இது வரை நடந்திருக்கிறதா? நடந்திருக்காமல் இருக்காது என்று நம்புகிறேன். என்னால் அந்த தகவல்களை சேகரிக்க முடியவில்லை. யாருக்காவது தெரிந்திருந்தால் தெரிவிக்கவும். எனக்கு தோன்றியது கீழே.

முதலில் மீண்டும் ஒரு முறை பிராமணர் என்பவர் எப்படி வரையறுக்கப் படுகிறார் என்று எளிய வார்த்தைகளில் பார்ப்போம். மனு ஸ்மிருதி பிராமணர் என்பவர் யாசித்தே உண்ணவேண்டும் என்றும், நாட்டின் நலனுக்காக மன்னர்களுக்கும் மற்றவர்களுக்கும் வேதங்களையும் பிற கல்வி அமசங்களையும் பயிற்றுவிக்க வேண்டுமென்றும்  கூறுகிறது. மேலும் பிராமணர் எனபவர் அமைதி, சுய கட்டுப்பாடு, பொறுமை, நேர்மை, அறிவு, விவேகம், சுத்தம், புனிதம் போன்ற தன்மைகளும் நிறைந்திருக்க வேண்டும்.

ஸமோ தமஸ் தப சௌகம்
க்சந்திர் அர்ஜவம் இவா கா
ஜ்னனம் விஜ்னனம் அஸ்திக்யம்
பிரஹ்ம கர்மா ஸ்வபவ ஜம்

(பகவத் கீதை – 18:42)

சரி. துராணாச்சாரியருக்கு வருவோம். எதனாலெல்லாம் இவர் பிராமணர் இல்லை என்று ஆகிறார்?
1) பாஞ்சால மன்னன் திரௌபதனிடம் ஏற்பட்ட அவமானங்களை அவரால் ஏற்றுக் கொள்ள முடியாமல் அவனிடம் கடைசி வரை பகை பாராட்டுகிறார். அதன் மூலம் ஒரு உளக் கொந்தளிப்பை கொண்டிருக்கிறார். இது அமைதி என்ற ஒரு பிராமணக் குணத்தை இழந்ததற்கு சாட்சி
2) அர்ஜுணனுக்கு தன்னை விட ஏகலைவன் வில் வித்தையில் திறமைசாலியாக வருவது வருத்தத்தை கொடுத்ததனால் துரோணர் அவனுடைய திறமையை இல்லாமல் ஆக்க சூழ்ச்சி செய்கிறார். இதன் மூலம் நேர்மையை இழக்கிறார்.
3) மேலும் தன்னை விடவே ஏகலைவன் சிறந்து விளங்கி விடுவானோ என்ற கவலை அவரிடம் இருந்தது. அதற்க்கும் சேர்த்தே சூழச்சி செய்கிறார். கட்டை விரலை குரு தட்சனையாக கேட்டு வாங்கிவிடுகிறார்.
4) பாண்டவர்களை வைத்து  திரௌபதனை சங்கிலியால் கட்டி இழுத்து வந்து பழி தீர்த்துக் கொண்டார். மேலும் அவனிடம் பாதி ராஜ்யத்தை பிடுங்கிக் கொண்டு தான் (திரௌபதன் கொடுக்கவில்லை என்பதை நினவில் கொள்ளவும்)  திரௌபத மன்னனுக்கு சமம் என்று நிருபித்தார். பழிவாங்குதல், அபகரித்தல், காழ்ப்புணர்ச்சி என்ற குணங்களை இதன் மூலம் வெளிப்படுத்துகிறார் துரோணர்.
5) குருஷேத்திரப் போரில கௌரவர்கள் பக்கம் சேர்ந்து இறுதி வரை போரிடுகிறார். போரிடுவது ஷத்திரிய தர்மமே ஒழிய பிராமண தர்மமில்லை.
6) அபிமன்யுவை போர் விதி முறைகளுக்கு புறம்பாக பலர் சேர்ந்து கொல்ல வைக்கிறார். மீண்டும் சூழ்ச்சி.

இதை எல்லாம் வைத்துப் பார்க்கும் பொழுது துரோணாச்சாரியர் பிராமணனாக வாழ்ந்ததை விட ஷத்ரியனாகவே அதிகம் வாழ்ந்திருக்கிறார்.  துரோணரருக்கு சாதகமாக பல நியாங்கள் இருந்திருக்கின்றன்.  இருந்தாலும் துரோணர் பிராமணர் என்று வகைப்படுத்தபட வேண்டுமென்றால் அவற்றையெல்லாம் மீறி பிராமண வாழ்க்கையை கடை பிடித்திருக்க வேண்டுமல்லவா?

பிற்சேர்க்கை – நான் இங்கே, ஷத்ரியர்களின் தர்மத்தை குறைத்து மதிப்பிடவில்லை.  அவர்களைப் போலவே போர் போர் என்று காலத்தை செலுத்தியதால் ”துரோணாச்சாரியர் பிராமணனாக வாழ்ந்ததை விட ஷத்ரியனாகவே அதிகம் வாழ்ந்திருக்கிறார்” என்று கூறினேன்

பிற்சேர்கையின் பின் பிற்சேர்க்கை – சிலர் குழப்பமடைந்ததால் இது :

“Brahmins” – i.e. Within Quotes  – Not Brahmins
Brahmins – i.e without quotes –  Brahmins/ Real Brahmins/Vedic Brahmins/Brahmin Varnam