சமீபத்தில் வந்த படங்களில் யாவரும் நலம் வெற்றி பெற்ற படம்.  இப்படம் இந்தியில் 13 B என்ற பெயரில் வந்தது.மாதவன் நடித்திருந்தார்.

சுஜாதாவின்..தர்மு மாமா..என்ற  சிறுகதை,  சுஜாதாவின் ‘விஞ்ஞானச் சிறுகதைகள்’ தொகுப்பில் 41 வது கதையாக இடம் பெற்றுள்ளது.

நம் கதையின் நாயகன் ராஜாங்கத்தின் வீட்டு டி.வி.,யில். ஊரெல்லாம் வயலும் வாழ்வும் நிகழ்ச்சி ஓடும்போது ..வேறு நிகழ்ச்சி தெரியும்..  அதில்  ஒரு மாமா தோன்றி..’மெடிக்கல் ஷாப்பிற்கு வா’ என்பார்.  ராஜாங்கம்..பக்கத்து வீட்டிற்கு சென்று பார்ப்பான்.  அவர்கள் டி.வி.யில்..வயலும் வாழ்வும் தான் ஓடிக்கொண்டிருக்கும்.

கடைசியில்.. சுஜாதாவின்  வழக்கமான  ஸ்டைலில்,   ஒரு எதிர்பாரா  திருப்பத்துடன் கதை முடியும்..
Yaavarum NalamYaavarum Nalam

யாவரும் நலம் படத்தில்..ஒரு குறிப்பிட்ட நேரத்தில்..கதாநாயகன் வீட்டில் மட்டும்..வேறு ஒரு மெகா சீரியல் ஓடும்..       சுஜாதா..அன்றே..எழுதியதை..  இப்படத்தின் கதாசிரியர்..மையக் கருவாக எடுத்து..சற்று வித்தியாசமாகக் கொடுத்துள்ளார்.
இனி இந்த ‘யாவரும் நலம்’ படத்தைப் பற்றி திரு. சரவணகார்த்திகேயன் அவர்களின் விமர்சனத்தைப் பார்ப்போம் ….
தொலைக்காட்சிப் பேய்

“யாவரும் நலம்” திரைப்படம் ஆவி போன்ற அமானுஷ்ய சமாச்சாரங்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்ட ஒரு கதை. யோசித்துப்பார்த்தால் இது போன்ற விஷயங்களில் நம்பிக்கையில்லாதவனான எனக்கு இப்படம் பிடித்திருக்கக் கூடாது. ஆனால் முரண்பாடாய் இப்படம் எனக்கு மிகப் பிடித்திருக்கிறது. அது தான் கலையின் வெற்றி – கொள்கைகளைத் தாண்டிய சங்கதி அது என்பது மீண்டும் நிரூபணம் ஆகியிருக்கிறது.
டைட்டில் கார்டில் தொலைக்காட்சியின் உதிரி பாகங்கள் தயாரிக்கப்படும் காட்சிகளைக் காட்டும் போதே டிவி தான் படத்தின் பிராதான பாத்திரம் என்பதை உணர்த்தி விடுகிரார்கள். முப்பது வருடங்களுக்கு முன் அகாலமாய் இறந்தவர்களின் ஆவி தொலைக்காட்சிக்குள் நுழைந்து, தம் சாவுக்கு காரணமானவனைப் பழி தீர்ப்பது என்று எழுதினால் முழுக்கதையையும் சொன்னது போலாகி விடும். அதனால் வேண்டாம்.எட்டு பேர் கொண்ட மாதவனின் கூட்டுக்குடும்பம் ஒரு அப்பார்ட்மெண்ட்டுக்கு குடிபெயர்கிறது. அந்த அப்பார்ட்மெண்ட்டின் 13வது மாடியிலுள்ள 13 எண் கொண்ட அவர்கள் வீட்டில் மட்டும் 13:00 மணிக்கு தொலைக்காட்சியின் 13வது சேனலில் “யாவரும் நலம்” என்கிற நாடகம் ஒளிபரப்பாகிறது. அதில் வரும் சம்பவங்கள் அனைத்தும் இவர்கள் குடும்பத்திலும் நடக்க ஆரம்பிக்கிறது என்பது படத்தின் சுவாரசியமான ஆதார முடிச்சு.மிக அழகாக திரைக்கதையை நகர்த்தி நம்மையும் இருக்கை நுனியில் அமர்ந்து பயப்பட வைக்கிறார்கள். பல இடங்களில் “அட!” (மாதவன் மாடி ஏற ஏற இரண்டாவது தளமே வந்து கொண்டிருப்பது, நாடகத்தின் டைட்டில் கார்ட் – கதை: ஈஸ்வரன், திரைக்கதை: காலதேவன், வசனம்: எ.ம.தர்மன், ஒளிப்பதிவு: கதிரவன் இயக்கம்: ஆத்மன், மாதவன் தன் அண்ணன் குழந்தைகளை துணைக்கு அழைத்துக் கொண்டு லிஃப்டில் செல்வது).மாதவன் தான் இது போன்ற படங்களில் (அதாவது ஹீரோயிசமற்ற) நடிக்கத் தமிழில் தோதான ஒரே ஆள் என்பது ‍போல் ஆகிவிட்டார். நிறைய இடங்களில் வெளுத்துக் கட்டுகிறார் – அதுவும் அவர் பயப்படும் காட்சிகளில் (உதாரணம்: வீட்டுக்கு வெளியேயும், உள்ளேயும் நின்று தன்னைத் தானே செல்ஃபோனில் படமெடுத்து அதிரும் காட்சி, தான் தான் கொலையாளி என நினைத்து தன்னை வீட்டுக்குள் வைத்து பூட்டுமாறு கதறும் காட்சி).அவர் மனைவியாய் வரும் நீத்து சந்திரா காமசூத்ரா படித்து அற்புதமாய் சிக்கன் தந்தூரி செய்கிறார் (இது புரிய வேண்டுமெனில் படத்தைப் பாருங்கள்). சரண்யா வழக்கம் போல். ப‌டத்தில் வரும் முதன்மைக் கதாபாத்திரங்களைக் காட்டிலும் அந்த டிவி நாடகத்தில் வருபவர்கள் தான் அதிகம் மனதில் நிற்கிறார்கள். மற்றப‌டி படம் முழுக்க முழுக்க மாதவன் ராஜ்யம். ஆனால் அது உறுத்தவேயில்லை என்பது தான் பெரிய‌ ஆச்சரியம்.ஒளிப்பதிவு P.C.ஸ்ரீராம் என்று போடுகிறார்கள். நிஜமா? பாடல்களே தேவையில்லாத படத்துக்கு ஷங்கர்-இஷான்-லாய்க்கு எதற்கு சம்பளம் கொடுத்து வீணடித்திருக்கிறார்கள் எனப்புரியவில்லை. பின்னணி இசை மட்டும் பரவாயில்லை. ஒரு வீட்டுகுள்ளேயே முழுப்படத்தையும் எடுத்து விட்டதால் சமீர் சந்தாவுக்கு அதிகம் வேலையில்லை. படத்துக்கு முக்கிய பலம் ஸ்ரீகர்பிரசாத்தின் எடிட்டிங்கும் லக்ஷ்மி நாராயணனின் ஒலிப்பதிவும்.நிறைய இடங்களில் டிவி சீரியல் அல்லது தொலைக்காட்சி நெடுந்தொடர் பார்ப்பது போலிருந்தாலும், படத்தின் ஒட்டுமொத்த உணர்வு திருப்திகரமாகவே இருக்கிறது. படத்தின் இறுதி முடிச்சு அவிழ்க்கப்படும் கணங்களில் திரையரங்க இருட்டில் பயத்துடன் என் மனைவி என் கைகளை இறுகப் பிடித்துக் கொண்டாள். அது தான் ஒரு இயக்குநராய் விக்ரம் K. குமாரின் வெற்றி. இதை தமிழின் சிறந்த‌ பேய்ப்படம் என தைரியமாய் அறிவிப்பேன்.

என் மனைவியிடமே பயங்காட்டியிருக்கிறார்களே!

நன்றி — திரு. சி. சரவணகார்த்திகேயன்  —  http://www.writercsk.com/2009/04/blog-post_985.html

சுஜாதா பதில்கள்
உஷா.
ஸ்பீல்பெர்க்கின் ‘Artificial Intelligence ‘ படம் பார்த்தேன்.  உங்களுடைய மீண்டும் ஜீனோ கதையை நினைவு படுத்துகிறது.  நீங்கள் படம் பார்த்தீர்களா ?
இல்லை.  நல்ல வேளை.  ‘மீண்டும் ஜீனோ’ வை பதினைந்து வருஷம் முன்னாலேயே எழுதிவிட்டேன்.
விவேக்.
உங்களின் ‘காயத்ரி’ டாக்டர் பிரகாஷையும்,  ‘இன்னொரு பெண்’ சரவணபவன்  அண்ணாச்சியையும் நினைவுபடுத்துகிறதே.  அது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
அவர்கள் என் கதைகளைப் படித்திருப்பார்கள் என்று தோன்றவில்லை.
உண்மைக்கு மிக அருகில் (சுஜாதாவின் ‘கற்றதும் பெற்றதும்’ கட்டுரையில் இருந்து…..
“முழுவதும் கற்பனையில் ஒரு கதையை தப்பித்தவறி எழுத முடிந்தால்,  அந்தக் கதை சீக்கிரமே நிஜமாகிவிடும் ” என்று சொல்லியிருக்கிறார்கள்.  என் எழுத்தாள வாழ்க்கையில் இது அடிக்கடி நிகழ்ந்திருக்கிறது.
வானமெனும் வீதியினிலே‘ எழுதியபின், பாகிஸ்தானுக்கு ஓர் இந்திய விமானம் கடத்தப்பட்டது.
N-VAANAM ENNUM VIITHIYILA

வானமென்னும் வீதியிலே…’ 1971ல் எழுதப்பட்டபோது விமான நிலையங்களில் எக்ஸ்ரே, மெட்டல் டிடெக்டர் போன்ற சாதனங்கள் இருக்கவில்லை. இன்று இந்த நாவல் எழுதப்பட்டால் இரண்டாம் அத்தியாயத்தைப் பெரும்பாலும் மாற்றி எழுதவேண்டும்.

சுஜாதா மேலும் கூறுகிறார்…..

பதவிக்காக‘ எழுதியபின் சமகால அரசியல் நிகழ்வுகள் அதைப் போல நடந்தன.
பதவிக்காக  |  
இந்திய ஜனநாயகம் என்பது எவ்வளவு குரூரமான போலி நாடகம் என்பதைக் கடந்தகால, நிகழ்கால சரித்திரம் திரும்பத் திரும்ப நிரூபித்துக் கொண்டிருக்கிறது. சுஜாதாவின் இந்த நாவல் குற்றமும் துரோகமும் எவ்வாறு மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் சக்திகளாக மாறுகின்றன என்பதை விறுவிறுப்புடன் சித்தரிக்கிறது. அரசியல் சூதாட்டம் பற்றித் தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த நாவல் இது.

சுஜாதா மேலும் கூறுகிறார்…..

மூன்று வருஷத்துக்கு முன் நான் விகடனில் எழுதிய ‘கறுப்புக் குதிரை‘  என்னும் சிறுகதை (மேட்ச்ஃ  பிக்ஸிங்)  ஏறக்குறைய அப்படியே ஹான்சி குரோனியே விவகாரத்தில் நடந்திருக்கிறது.
கறுப்புக் குதிரை  |  
இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் ‘புதிய தூண்டில் கதைகள் ‘ என்ற பொதுத்தலைப்பில் ஆனந்த விகடன் பத்திரிகையில் வந்தவை. இதில் கறுப்புக் குதிரை என்கிற கிரிக்கெட் சார்ந்த கதை.மேட்ச்ஃ  பிக்ஸிங் என்றால் என்ன என்று தெரிந்திராத காலத்தில் எழுதப்படட்து என்று இந்த கதை உண்மைக்கு மிக அருகில் வந்து விட்டது. சுஜாதாவிற்கே ஆச்சர்யம் அளித்ததாக எழுதியிருக்கிறார்


இதனால் நான் ஒரு தீர்க்கதரிசி என்று சொல்லிக் கொண்டு டாக் ஷோ (Talk Show ) ஆரம்பிக்க மாட்டேன்.  உண்மைக்கு மிக அருகில் கதைகளை அமைப்பதால் வரும் இயற்கையான விளைவு இது.  கேயாஸ் தியரிப்படி என்றாவது ஒரு நாள் அது நடந்தே தீரும்.  இதில் எனக்கு ஒன்று தான் பயமாக இருக்கிறது. பன்னிரண்டு வருடத்துக்கு முன் ‘ஜில்லு என்று ஒரு கதை எழுதியிருக்கிறேன் – இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் அணு ஆயுதப் போருக்குப் பின் நிகழ்வது பற்றி.
இந்த ‘ஜில்லு’ சிறுகதை,  சுஜாதாவின் ‘விஞ்ஞானச் சிறுகதைகள்’ தொகுப்பில் 26 வது கதையாக இடம் பெற்றுள்ளது.
இந்தக் கதையில் இருந்து சில வரிகள் …..
ஆத்மா திரும்பினான்.
நித்யா பெட்டியில் துணிகளை அடைத்துக் கொண்டிருந்தாள்.
“சீக்கிரம் நித்யா !”
“எதை எடுக்கறது, எதை விடறது ?”
“மொத்தமே மூணு பேருக்கும் எட்டு கிலோதான்.   ரொம்ப அவசியமானதை மட்டும் எடுத்துக்க. “

“அவசியமானதுங்கறது  எது ? ”

அந்தக் கேள்விக்கு இந்தச் சந்தர்ப்பத்தில் ‘மூச்சு’ என்பதைத் தவிர ஆத்மாவிடம் எதும் பதில் இல்லை.  தோருவின் வால்டன் ஞாபகம் வந்தது.  ஒன்றுமே தேவையில்லைதான்.  எல்லாமே புதுசாக அமைத்துக் கொள்ளலாம்.