விளையாட்டின் வழியாக கிடைத்துக் கொண்டிருந்த உடற்பயிற்ச்சிக்கு ஏற்பட்ட தடங்கலுக்கு வருந்தாமல் நன்றாக சோம்பேறி தனத்தில் திளைத்துவிட்டு திரும்பிப் பார்த்தால் 6 மாதம் முன் நகர்ந்திருந்தது. 6 பவுண்டு வயிற்றிலும்,  குற்ற உணர்ச்சி மனதிலும் ஒட்டிக் கொண்டிருந்தது.

ஒரு நாள் சுகமாக நித்திரையிலிருந்த நண்பன் ஆர்வியை  காலை 6 மணிக்கு எழுப்பிவிட்டேன். திட்டியிருப்பான். எனக்கு நிச்சயம் கேட்கவில்லை. தொலைப்பேசி. 7 மணிக்கு கிளம்பி வீட்டுக்கு போனால் சிறிய “கூஜாவில்” காஃபியுடன் வெளியே வந்தான். ”வாடா மாட்டினயா” என்றவாறு காரில் காஃபியுடன் அவனையும் திணித்தேன்.  ”மிஷன் பீக்” என்ற கூறப்படும் ஒரு மலைப்பகுதியை நோக்கி கார் பறந்தது. இருபத்தைந்து நிமிடங்களுக்குப் பிறகு நாங்களும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுடன் மலை ஏறிக்கொண்டிருந்தோம்.

அடுத்த வாரத்தில் நண்பர் ராஜனையும் போனில் எழுப்பியாகியது. அவரும் ஆர்வமாக கிளம்பினார்.  இந்தியாவிலிருந்து ஆராய்ச்சிக்காக வந்திருந்த டாக்டர். தங்கவேல் அவர்களையும் உடன் அழைத்து வந்திருந்தார்.  அடுத்த வாரம் உப்பிலி. அவரும் உற்சாகமானார்.  உற்சாகத்தில் அவர் பங்குக்கு ரவி என்ற நண்பரையும் கிளப்பிவிட்டார். இந்த ஆர்வக் கோளாறு பரவி பரவி மேலும் இருவர். நல்ல விஷயம் என்னவென்றால் எல்லோரும் உற்சாகமாக நடப்பது தான்.

குளிர் விலகாதிருந்த காலைப் பொழுது. மலை தன் மேல் பச்சை நிறத்தில் புல் கார்பெட்டைக் போர்த்தியிருந்தது. நன்றாக ஒரு கார் செல்லும் அளவிற்கு WBM பாதை போட்டிருந்தார்கள் வனப் பாதுகாவலர்கள். ஆங்காங்கே குதிரைகள். முக்கியமாக மாடுகள். எண்ணற்ற மாடுகள். ப்ரேக்ஃபாஸ்ட்டையும், காலைகடனையும்  மலை ஏறும் மக்கள் பார்க்கிறார்களே என்று கவலையே படாமல்  மல்டை டாஸ்க் செய்துக்கொண்டிருந்தன. நாங்கள் நடக்கும் சில இடங்களிலும் தங்கள் “பின்” வண்ணத்தை காட்டியிருந்தன. குதிரைகளுக்கு கொஞ்சம் மரியாதை தெரிந்திருக்க வேண்டும். லாயத்தை விட்டு வெளியே வரவில்லை. ஆனாலும் சில வாசனாதிகளை பரப்பிக்கொண்டிருந்தன.

இந்த இரண்டை மட்டும் மனத்தாலும், நடையாலும் கடந்து சென்று விட்டால் எங்கும் நிசப்தம். டிராங்குவிலிட்டி. பேசும் சப்தம் மட்டுமே. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மலை ஏறிக் கொண்டிருந்தார்கள். அனாலும் மலையின் பெரிய நில பரப்பு  அங்கொன்றும் இங்கொன்றுமாக மக்கள் நடப்பது போன்ற உணர்வை கொடுத்தது. என்னவோ தங்கள் தங்கள் அந்தரங்க இடத்தில் நடப்பது போன்ற ஒரு பிரமையை ஏற்படுத்தியது.

பேசிக் கொண்டே நடப்பது நடையில் உள்ள உடல் மற்றும் மனக் களைப்பை மூளைக்கு ஏற்றாமல் ஏமாற்றிக்கொண்டிருந்தது. பேச்சு பல இடங்களில் பாய்ந்து பாய்ந்து செல்லும். அரசியல், இலக்கியம், மதவாதம், பண்பாடு, ஜெயமோகன், சோ, ஹுசேன், வாழ்க்கை சிக்கல்கள், குடுமபம், சுற்றுலா…

அரை மணிநேரத்தில் வீடுகள் தீப்பெட்டிகளாக மாறின. பூமி பெரிதென்று நமப முடிந்தது. மனம், உலகம் நம் கைக்குள் என்று போலி நம்பிக்கையை அந்த உயரம் உற்பத்தி செய்ய தொடங்கியிருந்தது. “புதிய வானம், புதிய பூமி” என்று சந்தோஷத்தில் பாட ஏங்கியது. (கையில் சூட்கேஸ இல்லாததால் பிறர் தப்பித்தார்கள்) இன்னும் அரை மணி நேரத்தில் மேகக் கூட்டத்தின் கீழே – மேகம் கை எட்டும் தூரத்தில். அடர்த்தியான் மூடு பனி ஆங்காங்கே மிதந்துக் கொண்டிருந்தது. எதிரே மூடு பனியின் நடுவிலிருந்து குபீர் குபீர் என்று மனிதர்கள் எதிர்பாராத நேரத்தில் தோன்றிய வண்ணம் இருந்தார்கள். நாங்களும் மூடு பனியின் ஒரு பக்கத்தில் புகுந்து மறுபக்கமாக வெளியே வந்து விழுந்தோம். இன்னும் அரை மணிக்கு பின்னர் மேகக் கூட்டம் எங்கள் காலடியில்.

சிகரத்தை அடைகிறோம். இளைப்பாறி விட்டு இறங்க தொடங்குகிறோம். வேகம் அதிகரித்திருந்தது. ஏறியதைக் காட்டிலும் இறங்குவது சுலபமாகத் தோன்றியது. ஏறும்பொழுது ஏற்பட்ட இனிமையான் அதே அனுபவங்கள். மீண்டும் பேச்சுகள். ஒரு மணி நேரத்தில் அடிவாரம். ஒரு ஆரோக்கியமான கலந்துரையாடல் இந்த நடை பயணத்தை நிறைப்பது தரமாக நேரத்தை செலவிட்ட திருப்தியை கொடுத்தது.

கிட்டத்தட்ட மூன்று மணி நேர நடைக்கு பின்னர் காரில் ஏறி வீட்டிற்கு திரும்பிய பொழுது எங்கள் காதுகள் அடைத்திருந்தது. களைப்பினால் எங்கள் வாயும் அடைக்கப்பட்டிருந்தது. உற்சாகமக அடுத்த வாரத்திற்க்காக காத்து இருக்கிறோம்.

(முற்றும்)

புகைப்படங்கள் – திருமலை ராஜன்

தொடர்புடைய பிற பதிவுகள்

தீராத விளையாட்டுப் பிள்ளை – 1

ஆதலினால் நடத்தல் செய்வீர் – பகுதி 1

ஆதலினால் நடத்தல் செய்வீர் – பகுதி 2

ஆதலினால் நடத்தல் செய்வீர் – பகுதி 3

Advertisements