நித்யானந்தர் பற்றி எழுதாவிட்டால் தமிழில் ப்ளாக் எழுத முடியாது என்று சட்டமே போட்டுவிடுவார்கள் போலிருக்கிறது. சரி, நாமும் ஜோதியில் ஐக்கியமாகிவிடுவோம் என்றுதான் இதை எழுதுகிறேன்.

முதலில் டிஸ்கி: எனக்கு நித்யானந்தா பற்றி ஆனா ஆவன்னா தெரியாது. இந்த செய்தி எல்லாம் வருவதற்கு முன் அவர் பேர் மூளையில் ஒரு மூலையில் கூட ரெஜிஸ்டர் ஆனதில்லை. கதவைத் திறந்து வை (அல்லது கதவை மூடிட்டு வாடி) எதையும் நான் கேள்விப்பட்டது கூட இல்லை. அவர் என்ன சொல்லி இருக்கிறார் என்றெல்லாம் எனக்கு சுத்தமாக ஐடியா இல்லை.

அவர் தான் பிரம்மச்சாரி, செக்ஸ் தவறு என்றெல்லாம் சொன்னாரா? அப்படி எதுவும் சொல்லவில்லை என்றால் கேஸ் டிஸ்மிஸ்ட். அவரும் 15 வயது பாலகன் இல்லை, ரஞ்சிதாவும் 16 வயது பருவச் சிட்டு இல்லை. ஒரு ஆணும் பெண்ணும் விரும்பி உறவு வைத்துக் கொண்டால் என்னய்யா தப்பு? காஞ்சி சங்கர மடத்தின் தலைவர் பிரமச்சாரியாக இருக்க வேண்டும் என்று மடத்தின் விதி இருக்கிறது. மடத் தலைவர் விதிகளை அனுசரித்து நடக்க வேண்டும் இல்லை என்றால் விதியை நான் மதிக்கவில்லை என்று வெளிப்படையாக சொல்லிவிட வேண்டும்.ஜெயேந்திரர் மீறினார் என்று நிரூபிக்கப்படாவிட்டாலும் அது உண்மை என்றுதான் தோன்றுகிறது. அப்படி மீறுவது ஏமாற்று, பித்தலாட்டம். நித்யானந்தா புலனடக்கம் என்றெல்லாம் பேசாத வரையில் ஒரு புண்ணாக்கும் இல்லை. அப்போது அவரது படுக்கை அறைக்குள் நுழைந்து வீடியோ எடுத்தவர்கள், அதை போட்டு காசு பார்க்கும் சன் டிவி, நக்கீரன் எல்லாரும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

கேஸ் டிஸ்மிஸ் ஆகவில்லை என்றால்:
அவர் புலனடக்கம், புண்ணாக்கு எல்லாம் சொல்லி இருக்கலாம். நம் ஊரில் காவித்துணி போட்டால் பெண் வாசனை படக்கூடாது என்று ஒரு எதிர்ப்பார்ப்பு இருப்பது உண்மைதான். இவரும் அதை பெரிதாக ஊதி இருக்கலாம். அப்போது ஏமாற்று, பித்தலாட்டம்தான். அதை மக்களுக்கு சொல்ல சன் டிவிக்கும், நக்கீரனுக்கும் எல்லா உரிமையும் உண்டு.

ஆனால் இது சட்டப்படி குற்றம் இல்லை என்று நினைக்கிறேன். அரேபியாவில் ஒட்டகம் மேய்ப்பவன் பணத்தோடு கிராமம் வந்து வடிவேலு பாணியில் நான்தான் ராஜா என்று உதார் விடுவது மாதிரி. ஒன்றும் செய்ய முடியாது.

ஆனால் சன் டிவி எல்லை மீறிவிட்டார்கள். சென்சேஷனுக்காக மலையாள பிட்டு படம் ரேஞ்சுக்கு இறங்கிவிட்டார்கள். அவர்களையும் முழுதாக குற்றம் சொல்ல முடியாது – தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா, அம்மாடி ஆத்தாடி உன்னை எனக்கு தரயாடி, கட்டை கட்டை கட்டை கட்டை நாட்டுக்கட்டை, நா பேரு மீனாகுமாரி இந்த மாதிரி பாட்டுகளை எல்லாம் தினமும் டிவியில் பார்த்து பார்த்து நமக்கெல்லாம் மரத்துவிட்டது. இதுதானே அடுத்த லெவல்?

கலைஞர் இதற்கு மேல் ஜோக் அடிக்கிறார். இப்படி எல்லாம் போடக் கூடாது என்று அறிவுரை சொல்கிறார். இவர்தான் உள்துறை மந்திரி, நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே? விட்டால் அப்படியே பரங்கிமலை ஜோதிக்கும் போய் பிட்டு படம் பார்க்காதீர்கள் என்று நான்கு மணி நேரம் உண்ணாவிரதம் இருப்பார். கலாநிதி மாறன் உன் வேலையைப் பாத்துக்கிட்டு போ தாத்தா என்று சொல்லிவிட்டால் உடனே சவுக்கடி சந்திரகாந்தா நாடகத்தில் காளி என். ரத்னம் ஸ்திரீ பார்ட் தோளைத் தொட்டார், சந்திரலேகா படத்தில் டி.ஆர். ராஜகுமாரி தாவணி இல்லாமல் 2 நிமிஷம் 24 நொடி காட்சி தந்தார், கோவில்+கொடியவன்+கூடாரம் என்று அடுத்த அறிக்கை விட்டுவிடுவார்.

அப்புறம் ரஞ்சிதா பற்றி பலருக்கு கவலை. அது சரிதான், சாமியார் ஏமாற்றிவிட்டார் என்று அவர் பேர் நாறுகிறது, ரஞ்சிதா யாரை ஏமாற்றினார்? சன் டிவி உத்தமர் மாதிரி R என்ற ஆங்கில எழுத்தில் தொடங்கும் நாலெழுத்து நடிகை என்றெல்லாம் க்ளூ கொடுக்கிறது. ப்ரைவசியை காப்பத்தறாங்களாம், அய்யோ அய்யய்யோ!

என் கருத்தில் பெண்ணும் கொஞ்சம் பிரபல நடிகையாக இருப்பதால்தான் இந்த விவகாரம் இப்படி எரிகிறது. என்.டி. திவாரி விஷயம் இதை விட பல மடங்கு மோசம். Sexual harassment. தன் கீழ் வேலை செய்யும் பெண்களை கட்டாயப்படுத்தி இருக்கிறார். அது அவர் கவர்னர் பதவியை விட்டுவிட்டதும் அடங்கிவிட்டது. இங்கே ரஞ்சிதாடா என்று எல்லாரும் திருப்பி திருப்பி படிக்கிறார்கள். இந்த வீடியோவை தன் ப்ளாகில் போட்ட மகராஜன் சொல்கிறார் – ஒரே நாளில் ஒரு லட்சம் ஹிட்டாம்! 🙂

அது தவிர இந்த விவகாரத்தில் உள்குத்தும் இருக்கிறது போல தெரிகிறது. சன் டிவிக்கும் நித்யானந்தாவுக்கும் சொத்து தகராறாம். சன் டிவிக்காரர்களே ஆமாம் சொத்து தகராறு இருக்கிறது, ஆனால் அதற்கும் இந்த expose-க்கும் தொடர்பு இல்லை என்கிறார்கள். நம்பிட்டேன்!

ப்ளாக் உலகில் அலப்பல் தாங்க முடியவில்லை. ஒரு பெரிய கும்பல் அப்பவே சொன்னேன் பாத்தியா இந்து மதம் மோசம், ஜெயேந்திரன், பிரேமானந்தா என்று எழுதுகிறது. நான் வினவு பதிவை எல்லாம் படிப்பதை விட்டு நாளாகிறது. நிச்சயமாக இப்படி ஏதாவது எழுதி இருப்பார்கள். அதுவும் நித்யானந்தம் பிராமணராக இருந்தால் பொங்கி எழுந்திருப்பார்கள். அப்படி நித்யானந்தா பிராமணராக இல்லாவிட்டால் ஜெயேந்திரர் பற்றி பொங்குவார்கள். டிராஃபிக் கான்ஸ்டபிள் லஞ்சம் வாங்கினார் என்று போலீஸ் துறையை மூடிவிட சொல்வீர்களா? நித்யானந்தம் ஏமாற்றுபவர் என்றால் ஹிந்து மதத்தை கை கழுவ வேண்டுமா? போங்கடா போக்கத்தவங்களா!

கொஞ்சம் சின்ன கும்பல் போலி பாதிரியாரை யாரும் ஒன்றும் சொல்வதில்லை என்று அங்கலாய்க்கிறது. ஏமாற்றுபவன் ஹிந்துவாக இருந்தால் லாபமா கிருஸ்துவனாக இருந்தால் நஷ்டமா? ஏமாற்றுப் பேர்வழி மாட்டிக்கிட்டான், அவ்வளவுதான். இதில் ஹிந்து என்ன முஸ்லிம் என்ன?

சிலருக்கோ ஹிந்து மதத்தை தாக்க இன்னொரு காரணம் கிடைத்துவிட்டதே என்று தோன்றுகிறது. எப்படி என்று எனக்கு புரியவில்லை. ஒரு சாமியார் ஏமாற்றினார். அவ்வளவுதானே விஷயம்? என்ன அவரா ஹிந்து மதம்? விடுங்கப்பா! அடுத்த சாமியார் இல்லை கவர்னர் பற்றி செய்தி இன்னும் இரண்டு மாதத்தில் வரும், இதை எல்லோரும் மறந்துவிடுவோம்!

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

தொடர்புடைய பதிவுகள்:
சன் டிவி-நித்யானந்தா சொத்து தகராறு

Advertisements