ஹுசேன் இப்போது கட்டார் குடிமகன் ஆகிவிட்டாராம். இதைப் பற்றி யோசித்தால்:

ஹுசேனுக்கு அவர் நினைத்ததை வரைய முழு உரிமையும் உண்டு என்ற நிலை எடுப்பவன் நான். அவர் சரஸ்வதியை நிர்வாணமாக வரையலாம், முகமதை ஓரினச்சேர்க்கையாளராக வரையலாம், அவர் இஷ்டம் அவர் சவுகரியம். அது bad taste என்று நானும் நீங்களும் நினைக்கலாம். But bad taste is not a crime.

அது உங்கள் மனதை புண்படுத்தினால் நீங்களும் தாராளமாக இப்படி வரையாதீர்கள் என்று வேண்டுகோள் விடுக்கலாம். அவர் வீட்டின் முன்னால் சத்யாகிரகம் கூட செய்யலாம். சட்டம் இடம் கொடுத்தால் அவர் மேல் கேஸ் கூட போடலாம். ஆனால் இறுதி முடிவு அவருடையது என்பதை உணர வேண்டும். அவரை இப்படித்தான் வரைய வேண்டும், இப்படி எல்லாம் வரையக் கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை.

சட்டம் இடம் கொடுத்தால் கேஸ் போடலாம். ஆனால் அப்படிப்பட்ட சட்டங்கள் தவறானவை. மாற்றப்பட வேண்டியவை. இதை இப்படியே விட்டால் நாளை BT கத்திரிக்காயைப் பற்றி யாரும் பேசக் கூடாது என்று கூட சட்டம் போடுவார்கள். ஓ இன்றைக்கே போட்டுவிட்டார்களோ!

அவர் மேல் கேஸ் போடப்பட்டால் அதை அவர் எதிர்கொள்ளத்தான் வேண்டும். சட்டம் தவறானது என்று போராடத்தான் வேண்டும். அவருக்காக சட்டம் வளையமுடியாது. ஆனால் அவர் இப்படி பயப்படும் வகையில் ஒரு சட்டம் இருப்பது வருத்தமாகத்தான் இருக்கிறது.

போராட மனதிலும் உடலிலும் வலிமை இல்லை என்றால் கட்டாருக்கு போக வேண்டியதுதான். இது அனேகமாக அவரது சொந்த விஷயம். அவருக்கு இருக்கும் பயங்களும் நிர்ப்பந்தங்களும் என்ன என்று அவருக்குத்தான் தெரியும். அவருக்கு தன சொந்த வாழ்க்கையை நிம்மதியாக வாழ கட்டார்தான் சிறந்த இடம் என்று தோன்றினால் அதை கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை.

ஆனால் ஒரு விஷயம் உதைக்கிறது. அவர் சொல்கிறாராம் – “I enjoy complete freedom in Qatar. Now Qatar is my place. Here no one controls my freedom of expression. I am very happy here” கட்டாரில் என்ன சுதந்திரம் கிடைத்துவிடும் இவருக்கு? அங்கே போய் முகமதின் உருவத்தை வரைந்தால் artistic self-expression என்று இவரை விட்டுவிடுவார்களா? கட்டாரில் சுதந்திரமாக சரஸ்வதியை வரையலாம், அவ்வளவுதான். ஒரு வேளை ஏசுவையும் வரையலாமோ என்னவோ. இந்தியாவில் சுதந்திரம் இல்லை, கட்டாரில் இருக்கிறது என்று இவர் சொல்லும்போது கேக்கறவன் கேனையனாக இருந்தால் என்ற பழமொழிதான் ஞாபகம் வருகிறது.

டாக்டர் ருத்ரனும் நானும் ஹுசேன் விஷயத்தில் ஏறக்குறைய இசைந்த கருத்துடையவர்கள். அவரது சில ஹுசேன் பதிவுகளுக்கு என் ஆளுமைகள் பக்கத்திலேயே சுட்டி கொடுத்திருக்கிறேன்.அவர் இதைப் பற்றி என்ன நினைக்கிறார் என்று தெரிந்து கொள்ள ஆவல்! அவர் பொங்கி எழுந்திருக்கிறார். அது ஒரு கலைஞனின் நியாயமான ஆக்ரோஷமே. ஆனால் கட்டார் சுதந்திரம் உள்ள நாடு என்று சொல்லமாட்டார் என்று நினைக்கிறேன். 🙂

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

சுட்டிகள்:
ஹுசேன் கட்டார் குடிமகன் ஆகிறார்.
புது சட்டம் – யாரும் BT கத்தரிக்காயைப் பற்றி பேசக் கூடாது.
ஹுசேனின் “சர்ச்சைக்குரிய” ஓவியங்கள் பற்றி என் முந்தைய பதிவு
ஹுசேனின் கட்டார் முடிவு பற்றி டாக்டர் ருத்ரன்
ஹுசேனின் “சர்ச்சைக்குரிய” ஓவியங்கள் பற்றி டாக்டர் ருத்ரன்

Advertisements