நன்றி – ஜி. ஆர். சுரேந்தர்நாத் (உயிரோசை – 01-03-2010 )
முதலில் புதிதாக ஒரு சுஜாதா உருவாகவேண்டுமென்றால், அவருக்கு சுஜாதாவிடம் இருந்த என்னென்ன விஷயங்கள் இருக்கவேண்டும் என்று பார்ப்போம்.

சுஜாதாவின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம், அவரது பிரத்யேகமான, மெலிதான நகைச்சுவை ததும்பும், அபாரமான மொழி நடை. பெரிய எழுத்தாளர்கள் முதல் வாசகர்கள் வரை அனைவரையும் அவரது எழுத்துகளில் கட்டிப் போடும் வசீகரம் மிக்க, மாய நடை அது. அடுத்து அவருக்கு இருந்த பல்துறை அறிவு. இவை பற்றி நம் எல்லோருக்கும் தெரியும் என்பதால், அதைப் பற்றி நான் இங்கு விவாதிக்கப் போவதில்லை.

அடுத்து அவருடைய கடும் உழைப்பு. அவர் படித்தது லட்சக்கணக்கான பக்கங்கள் இருக்கும். எழுதியது ஆயிரக்கணக்கில் இருக்கும். இவ்வளவுக்கும் அவர் எவ்வளவு நேரம் செலவழித்திருக்கவேண்டும். இத்தனைக்கும் அவர் முழு நேர எழுத்தாளருமில்லை. அவர் புகழின் உச்சியில் ஏராளமாக எழுதிக் குவித்த காலத்தில், பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் ஒரு பொறுப்பான பணியில் இருந்தார். அந்தப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் கூட, சில தொழில் நிறுவனங்களில் ஆலோசகராக இருந்தார். திரைப்படத் துறையிலும் இயங்கிக்கொண்டிருந்தார். இடையிடையே உடல் நலமின்றியும் இருந்தார். இவ்வளவுக்கும் நடுவே வாசிப்பின் மீதும், எழுத்தின் மீதும் இருந்த தீராக் காதலால் இறுதி வரையிலும் அவர் உழைத்துக்கொண்டே இருந்தார்.

அடுத்து சுஜாதா ஒரு கால கட்டத்தோடு தேங்கிவிடவில்லை. அவர் தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருந்தார். பலரைப் போல அவர் சங்க இலக்கியத்துடனோ அல்லது பாரதியுடனோ அல்லது இலக்கிய க்ளாசிக்குகளுடனோ மட்டும் நின்றுவிடாமல் மிகவும் அப்டேட்டடாக இருந்தார். அவருக்கு ஆழ்வார் பாடல்களும் தெரியும். சரோஜாதேவியும் தெரியும். நானோ டெக்னாலஜியும் தெரியும். நாட்டுப்புறப் பாடலும் தெரியும். 27.2.2010 அன்று நடைபெற்ற சுஜாதா நினைவுக் கூட்டத்தில் அவருடைய உறவினர் திரு. திருமலை அவர்கள் கூறியது போல், உலக அளவிலேயே இம்மாதிரி பல்துறைகள் குறித்தும் சுவையாக எழுதியவர்கள் யாராவது இருப்பார்களா என்பது சந்தேகம்தான்.

அடுத்து சுஜாதா புகழ் பெற ஆரம்பித்த காலகட்டம். சுஜாதாவே இது பற்றி ஒரு முறை குறிப்பிட்டது போல் அது வெகுஜனப் பத்திரிகைகளின் பொற்காலம். விகடன், குமுதம், கல்கி, சாவி, குங்குமம், இதயம் பேசுகிறது, தாய்… என்று எத்தனை இதழ்கள். அதில் பாதி இதழ்கள் இப்போது இல்லவே இல்லை. அந்த இதழ்களில் ஒரு வாரத்திற்கு 3 சிறுகதைகள், 2 அல்லது 3 தொடர்கதைகள் என்று கதைகளுக்கு அபாரமான வரவேற்பு இருந்த காலகட்டம் அது. அந்த உச்ச காலகட்டத்தில் சுஜாதா ஒரே சமயத்தில் நான்கு வார இதழ்களுக்குக் கூட தொடர்கதை எழுதியிருக்கிறார். எனவே அது வெகு ஜன எழுத்தாளர்களின் பொற்காலமாகவும் இருந்தது. அப்போது சுஜாதாவுடன் சேர்ந்து மேலும் பல எழுத்தாளர்களும் மிகுந்த புகழ் பெற்றவர்களாக இருந்தனர்.

ஆனால் அதிலும் கூட சுஜாதாவின் தனித்துவம் என்ன என்றால், கதைகள் வருவது குறைந்தவுடன் அவர் காலத்திற்கு முன்பும், பின்பும் இயங்கிய வெகுஜன எழுத்தாளர்கள் பலரும் அப்படியே தேங்கி, சிறிது காலத்தில் காணாமல் போய்விட்டார்கள். ஆனால் சுஜாதா அதற்குப் பிறகும் சேட்டிலைட் சானல் யுகம், இன்டர்நெட் யுகத்திலும் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருந்தார். சூழல் காரணமாக பிற்காலத்தில் தொடர்கதைகள் எழுதுவது குறைந்தாலும் ‘‘கற்றதும் பெற்றதும்…” என்று தமிழில் ஒரு புதிய அத்தியாயத்தைத் துவக்கினார். தமிழில் பத்தி எழுத்தையும், ஒரு வெற்றிகரமான, வெகுஜன இலக்கியச் செயல்பாடாக மாற்றிய பெருமையும் சுஜாதாவையே சேரும். அதில் அவர், ஒரு முறை மருத்துவமனையில் இருந்துவிட்டு வந்த பிறகு எழுதிய கட்டுரையும், எழுபது வயது நிறைவையொட்டி அவர் எழுதிய கட்டுரையும் தமிழின் சிறந்த கட்டுரைகள் பட்டியலில் சுலபமாக இடம் பிடிக்கக்கூடியவை.

அடுத்து நவீன இலக்கியத்துடன் அவருக்கு இருந்த தீவிர பரிச்சயம். பரிச்சயத்துடன் நின்றுவிடாமல் அவர்களில் முக்கியமானவர்களைத் தம் வாழ்நாள் முழுவதும் தமிழ் கூறும் நல்லுலகுக்கு அறிமுகப்படுத்தியபடியே இருந்தார். அதனால் அவரைச் சில இலக்கியவாதிகள் கூறுவது போல் பைங்கிளி எழுத்தாளர்கள் பட்டியலில் நிச்சயமாக சேர்க்கமுடியாது. எஸ். ராமகிருஷ்ணன் கூறியது போல், அவர் வெகுஜனப் பத்திரிகைகளில் இயங்கிய ஒரு இலக்கியவாதி.

ஆக, புதிதாக ஒரு சுஜாதா உருவாகவேண்டுமென்றால், அவர் சுஜாதா போல் அபாரமான மொழிநடை வாய்க்கப் பெற்று, பல் துறை அறிவுடன், தனது முப்பது வயதுகளிலேயே புகழ் பெற ஆரம்பித்து, கால மாற்றத்துக்கேற்ப தன்னைப் புதுப்பித்துக்கொண்டு, இடைவிடாமல் அனைத்தையும் படித்துக்கொண்டு, ஏராளமான உழைப்பைச் செலவழித்து பக்கம் பக்கமாக எழுதிக்கொண்டு, எழுத்தின் மீது ஒரு தீராக் காதலுடன் இயங்கி, கூடவே காலமும் நேரமும் சந்தர்ப்ப சூழ்நிலையும் ஒத்து வந்தால்தான் அது சாத்தியமாகும்.

மேற்கூறியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது, இன்னொரு சுஜாதா உருவாக இப்போதைக்கு வாய்ப்பில்லை என்றே கூறவேண்டும். ஏனென்றால் அப்படி ஒருவர் இருந்தால், அதன் துவக்கம் இந்நேரம் கண்ணில் பட்டிருக்கும்.

மகத்தான படைப்பாளிகளின் தனித்துவம் என்னவென்றால், அவர்களைப் போல் மற்றொருவர் இல்லை என்பதே. எனவே அந்தக் கருத்தின் அடிப்படையில் பார்க்கும்போது, சுஜாதாவும் மகத்தான கலைஞர்களின் வரிசையில், யாராலும் இட்டு நிரப்ப முடியாத இடத்தில் கம்பீரத்துடன் அமர்ந்திருக்கிறார்.

நன்றி – ஜி. ஆர். சுரேந்தர்நாத் (உயிரோசை – 01-03-2010 )


சுஜாதா பதில்கள் – பாகம் 1  (உயிர்மை பதிப்பகம்)

பஞ்சவர்ணம், போளூர்.

நிறைய எழுதுவது — அதிகமாகப் படிப்பது இதில் தங்களுக்கு எதில் ஈடுபாடு அதிகம் ?

நிறைய எழுத அதிகமாகப் படிக்க வேண்டும்.

வெங்கடாசலம்.
நீங்கள் எப்படி இன்றும் தொடர்ந்து பீல்டில் இருக்க முடிகிறது ?
தொடர்ந்து படிபதால்.ஆர். கே. குமாரி, சென்னை.
சுஜாதாவின் (ரங்கராஜன் இல்லை ஸார்!) இளமையின் ரகசியம் என்ன ?
யாண்டுபலவாகியும் நரையிலன் ஆகுதல் மீண்டும் மீண்டும் dye  அடித்துக்கொள்வதால்.

ஜெ. ஜானகிசந்திரன், தம்மம்பட்டி.
ஒரு எழுத்தாளனுக்குத் தேவையான, முக்கியமான அடிப்படைக் ‘குணம்’ என்ன ?
கூர்மையான பார்வை, காது, படிப்புத் திறன்.

ஆவடி த, தரணிதரன், சென்னை.
தங்கள் வெற்றிக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் ?
விடா முயற்சி என்கிற என் நண்பர்.

ஆர். பி. ஜெயச்சந்திரன், திருச்சி.
ஒரு மனிதன் எந்த வயது வரை இளைஞனாக வாழ முடியும் ?
இறக்கும் வரை.எழிலரசி, கோவில்பட்டி.
வாழ்க்கையில் நீங்கள் கற்றதிலேயே மிக முக்கியமான விஷயம் என்று எதைக் கருதுகிறீர்கள்?
கற்றது போதாது என்பதை.டி. சுப்பிரமணியன், மேலையூர்.
இலக்கியத் துறையில் உங்களது இமாலய இலக்கு எது ?
கடைசி வரை எழுதிக் கொண்டிருப்பது.

சுஜாதா பதில்கள் – பாகம் 2  (உயிர்மை பதிப்பகம்)

விவேக்.
எழுதுகையில் உங்களுக்கே உரிய பாணியில் எழுதுகிறீர்கள். நீங்கள் எழுதும்போது என்னென்ன விஷயங்களை மனதில் வைத்துக்கொண்டு எழுதுகிறீர்கள் ?
முதலில் யோசிக்காமல் எழுதுவேன்.  திருப்பிப் படிக்கும்போது சிந்தித்து திருத்துவேன்.

கே. அரவிந்த்.
நீங்கள் ஸ்பென்சர் பிளாசாவுக்கு முக்காடு போட்டு வந்து ஒட்டுக் கேட்டீர்களா ? அது எப்படி நாங்க பயன்படுத்தும் அதனை வார்த்தைகளையும் நீங்கள் எழுதுகிறீர்கள் ?
1962 இலிருந்து எழுதி வருகிறேனே,  இந்தத் தகுதிகூட இல்லையேல் வெட்கம்.

கல்யாண்.
உங்கள் மூளை இன்ஷூர் செய்யப்பட்டுவிட்டதா ?
இல்லை. அதை மதிப்பிடுவதில் சிக்கல்.

ஸ்ரீப்ரியா.

உங்களை ஒரு க்ளோன் எடுத்து வைத்துக் கொள்ளலாம் என்று பார்க்கிறேன்.  ஒத்துழைப்பீர்களா ?

எந்த விதத்தில் ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிய வேண்டும்.

ஸ்ரீராம்.
ஒரு நாளில் எத்தனை மணி நேரம் உழைக்கிறீர்கள்,  எத்தனை மணி நேரம் படிக்கிறீர்கள் ?
நான்கு மணி நேரம்.  ஒரு மணி நேரம்.

ஷீலாமதி.
உங்களைப் பற்றி ஒரு புத்தகம் எழுத ஆசை !  அனுமதிப்பீர்களா ?
என் எழுத்தைப் பற்றி எழுதுவதானால் சம்மதம்.  என்னைப் பற்றி உங்களுக்குத் தெரியாது.

சுஜாதா, சின்னச் சின்னக் கட்டுரைகள், 1985
.. எழுத்து என்பது தினம் உட்கார்ந்து கொண்டு தினம் கட்டாயமாக எழுதுவது; மார்புக்குள்ளிருந்து மேதைத்தனம் என்னும் அந்த நீல ஒளிக்குக் காத்திருப்பதல்ல – திரும்பத் திரும்ப எழுதுவது – மகிழ்ச்சியோ, வலியோ எழுதுவது; எழுத்து என்பது நிறைய கிழித்துப் போடுவது, நிறைய எழுதுவது, எழுதியதில் திருப்திப்படாமல் இருப்பது…. மீண்டும் எழுதுவது.
சுஜாதா சொன்ன இரண்டு முக்கியமான விஷயங்கள்.

1. நிறைய படிக்கவேண்டும். படிப்பது என்றால் நாம் எழுதியது, அடுத்தவர் எழுதியது என்றெல்லாம் வகை தொகையில்லாமல் படிக்கவேண்டும்
2. காட்டமான விமர்சனங்களுக்கான பதிலடியை படைப்புகளின் மூலமாகத்தான் சொல்லவேண்டும்; பகிரங்கமாக அல்ல.
சுஜாதா ஒரு பேட்டியில்…….
என் எழுத்து, என்னைப் பல தேசங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. பல வகைப்பட்ட மனிதர்களைச் சந்திக்க வைத்திருக்கிறது. பிரைவேட் ஜெட்டி லிருந்து ஃப்ரீமாண்ட் மிஷன் பீக் மலை யுச்சி மாளிகை வரை அனுமதித்திருக்கிறது. பெயர் தெரியாத வாசகர்கள் நள்ளிரவில் கூப்பிட்டுப் பாராட்டியிருக்கிறார்கள். மனைவிமார்கள் அழுதிருக்கிறார்கள். கணவன்கள், மனைவிகள் மேல் சந்தேகப்பட்டுத் தற்கொலை செய்து கொள்ளுமுன்,  கடைசி ஆறுதலுக்கு என்னை விளித்திருக்கிறார்கள். ரோஜா வெளிவந்த சமயத்தில், பெங்களூருக் குத் தனியாக ஓடி வந்த இளம்பெண் அதிகாலை ஜலஹள்ளியில், அரவிந்த சாமியுடன் என்னை மண முடி! என்று கதவைத் தட்டியிருக்கிறாள். “ஆ” கதையைப் படித்துவிட்டு, “என் மகளை மணம் செய்துகொள்ள வேண் டும்” என்று திருநெல்வேலில் இருந்து வந்த மனநிலை சரியில்லாத இளைஞரும், பாலம் கதையைப் படித்து விட்டு என்னைக் கொல்ல வர தேதி கேட்டிருந்த கோவை வாசியும் என் வாசகர்கள்தான். வாழ்க்கையின் அத்தனை பிரச்னைகளுக்கும், முதுகுவலியில் இருந்து முண்டகோபனிஷத் வரை யோசனை சொல்லியிருக்கிறார்கள்; கேட்டிருக்கிறார்கள். மிகச் சிறந்த நண்பர்களையும், அற்புதக் கணங்களையும் என் எழுத்தால் பெற்றிருக்கிறேன். அதுதான் என்னுடைய நோபெல்!
முதல் கதை வெளிவந்த போது திருச்சி நகரமே அலம்பி விட்டாற்போல இருந்தது. அந்த வட்டாரத்தில் ‘சிவாஜி ‘  இதழின் காப்பிகள் கடகடவென்று விற்றுத் தீர்ந்து விட்டன, எல்லாவற்றையும் நானே வாங்கி விட்டதால்”, தனது முதல் இதழை பற்றி சுஜாதா..


தமிழ் இலக்கியத்தின்  மீது நான் கொண்ட ரசனையை பன்மடங்கு உயர்த்தியதற்காகவே அவருக்கு நிறைய கடன்பட்டிருக்கிறேன்” – கமல்.

உன் விஞ்ஞானப் பார்வையால் வெளிச்சம் பெற்றன சில மூளைகள்” – கவிஞை தாமரை

சுஜாதா – பார்வை 360

எழுத்தில் எந்த அளவுக்கு அந்தரங்க விஷயங்கள் கலக்க வேண்டும்;  எந்த விகிதத்தில் உண்மையும் பொய்யும் கலக்க வேண்டும் என்பது பற்றி கருத்துக்கள் வேறுபடுகின்றன.  என்னைக்கேட்டால் முழு உண்மையை அப்படியே எழுதக்கூடாது.  எப்படியும் நான் எழுத மாட்டேன்.  தின வாழ்க்கையில் உள்ள சம்பவங்கள் இலக்கிய அந்தஸ்து பெற, அவற்றில் ஒரு காலம் கடந்த உண்மை பொதிந்திருக்கவேண்டும்.  இல்லையேல் அது ஒரு சாதாரண சிறுவனின் நாட்குறிப்பு போல, காலை எழுந்தேன், பல் தேய்த்தேன், குப்பை பொறுக்கினேன் என்று அற்பமாக முடிந்துவிடும்.  முழுக்க முழுக்க கற்பனையாகவும் எழுத முடியாது.  அப்படி எழுதினால் அது கதையல்ல fairy  tale,  fantasy.  உண்மையும் பொய்யும் கலக்க வேண்டும்.  இந்த கலக்கல், ஸ்ரீரங்கம் தெற்கு வாசலில் ஒரு கடையில் மட்டும் கிடைக்கும் நன்னாரி சர்பத் போல தனிப்பட்டது.  இந்த விகிதாச்சாரம்  ஆளுக்காள் மாறுபடுவதைக் கவனிக்க, கோபிகிருஷ்ணன், தி. ஜானகிராமன், ஆதவன் இம்மூவரின் கதைகளைப் படித்துப் பாருங்கள்.

அவரது எழுத்துக்கு என்றும் மரணமில்லை.
Advertisements