திருக்குறளுக்கு சுஜாதா எழுதிய இப்புதிய உரை திருக்குறளின் சாராம்சத்தை எளிய முறையில் சமகாலத் தமிழ் நடையில் கச்சிதமாக முன்வைக்கிறது. வெளிவந்த நாள் முதல் பெரும் கவனத்தைப் பெற்றுவந்திருக்கும் இந்த நூல் இப்போது ஐந்தாம் பதிப்பாக வெளிவருகிறது.

சுஜாதாவின் முன்னுரை
திருவள்ளுவரின் திருக்குறளுக்கு சில சமயம் வள்ளுவரைவிட சுருக்கமான உரை எழுதினபோது, எனக்கு இதைத் தமிழ் மக்கள் ஏற்பார்களோ என்று அச்சமாக இருந்தது.  முதலில் இவ்வகையில் எளிமையாகச் சொல்வதற்கான தகுதி எனக்கு இருக்கிறது என்று நிரூபிக்க வேண்டியிருந்தது.   ‘கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்’ என்பதை ‘கடவுளைக் கும்பிடவில்லை என்றால் படித்துப் பிரயோசனமில்லை’ என்று சொல்வதற்கேற்ற துணிச்சலை ஏற்படுத்திக் கொள்ள, திருக்குறள் பற்றிய பல ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் பரிமேலழகரிலிருந்து மு. வரதராசனார் வரை அத்தனை  உரைகளையும் படித்தேன்.

அதன்பின்தான் இந்த சுதந்திரம் எடுத்துக்கொண்டேன்.   இதனால்தான்,  இந்த உரை அங்கீகரிக்கப்பட்டு பல பதிப்புகள் கண்டது.  இப்போது உயிர்மை பதிப்பகத்தாரால்  புதிய வடிவில் வெளி வருகிறது.

Manushya Puthiran
கவிஞர் மனுஷ்ய புத்திரன் ‘இதனை இவனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்’ என்ற குறளுக்கு உத்தம உதாரணம்.
சுஜாதா பதில்கள் – பாகம் 1
டி. எம். முருகானந்தம், திருவைகாவூர்.
ஒவ்வொரு மனிதனும் 1330 குறள்களையும் முழுமையாகப் படித்து, அதான் விளக்கங்களைப் புரிந்துகொண்டால் அவனது வாழ்வு எப்படி அமையும் என்கிறீர்கள் ?
படித்தால் மட்டும் போதாது.

எம். அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.
வாய்க்கொழுப்பு இருக்கலாமா ?
லாகாது.
“தீயினால் சுட்ட புண் உள்ளாறும்  ஆறாதே வாயினால் சுட்ட வடு” என்று திருக்குறளைச் சற்றே மாற்றிச் சொல்ல வேண்டும்.

மயிலாடுதுறை இளையபாரதி,  சென்னை.
“அட்வைஸ்” செய்வது உங்களுக்குப் பிடிக்குமா ?
“சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்”
என்ற அட்வைஸ் மிகப் பிடிக்கும்.

கே. விஜயலட்சுமி, சென்னை.
மனிதனுக்கு ஏழ்பிறப்பு உண்டு என்று திருவள்ளுவரும் குறளில் கூறியுள்ளாரே ?
மறுபிறப்பில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால் அந்தக் குறளை மட்டும் விட்டுவிட்டு மற்றக் குறள்களால் பயன்பெறலாம்.
சன்சுதா, பிலிக்கல்பாளையம்.
திருக்குறளின் அனைத்துக் கருத்துகளும் ஏற்புடையதா ?
இல்லை. ராஜம்கிருஷ்ணன் போன்ற பெண்ணியவாதிகள் ஏற்றுக்கொள்ளாத சில கருத்துகளும் அதில் உண்டு.

சத்தி. ஏ. ஜே. ஜப்பார், சத்தியமங்கலம்.
திருக்குறளுக்கு நீங்களும் தெளிவுரை எழுதியிருக்கிறீர்கள்.  என்றாலும் உங்கள் உரை தவிர இதுவரை வந்ததில் உங்களுக்குப் பிடித்தமான தெளிவுரை எது ?
டாக்டர் மு. வரதராசனுடையது.
அ. ச. அலெக்சாண்டர், தி. அத்திப்பாக்கம்.
உங்களுக்குத் திருவள்ளுவரிடம் பிடித்த முக்கியமான விஷயம் என்ன சார் ?
சொற்சிக்கனம் .சு. பாலசுப்பிரமணியன், இராமேஸ்வரம்.
திருக்குறளுக்குக் கிடைத்த பெருமை நாலடியாருக்குக் கிடைக்கவில்லையே,  ஏன் ?
அதிகப்படியான இரண்டு அடிகள் தான் காரணம்.

அய்யை சி. முருகேசன், கடவூர்
ஆயிரத்து முன்னூற்றி முப்பது திருக்குறள்களில் எந்த ஒரு குரலிலும் “தமிழ்” என்ற வார்த்தையைத் திருவள்ளுவர் பயன்படுத்தாதது ஏன் ?
தமிழ் வார்த்தைகளையே பயன்படுத்தினாலும் தமிழ் என்ற வார்த்தையைப் பயன்படுத்தாத காரணம், திருக்குறள் தமிழ் பேசும் தமிழர்களுக்கான நீதிகளை மட்டும் சொல்வதல்ல என்பதுதான்.  உலகப் பொதுமறை  அது. அனைத்து மொழியினருக்குமான  பொதுச்சொத்து.  மொழி கடந்த மனித நீதி.கல்லார் ரஹ்மத், நாகை.
திருக்குறள்படி ஒருவன் வாழ முடியுமா ?
சில அதிகாரங்களை.

திருக்குறளிலும் சில முரண்பாடுகள் இருப்பதாகப் படித்தேன்.  உண்மையா ?
‘ஊழிற் பெருவலி யாவுள’ என்று ஒரு குறள் சொல்கிறது.  ‘ஊழையும் உப்பக்கம் காண்பர்’ என்று இன்னொரு குறள் சொல்கிறது.  தெய்வ நம்பிக்கையைப் பற்றிக் ‘கடவுள் வாழ்த்து’ பேசுகிறது. ‘தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்’ என்று ஒரு குறள் அறிவிக்கிறது.  ‘பரந்து கெடுக உலகியற்றியான்’ என்று தெய்வத்தையே கோபிக்கிறது ஒரு குறள்.  இவற்றை முரண்பாடுகள் என்று கூற முடியாது.  வெவ்வேறு சூழல்களில், கருத்தக்களை உரத்து வலியுறுத்தக் கைக்கொள்ளப்பட்ட முறைகள் எனக் கொள்ள வேண்டும்.

கோபம் மனிதனுக்கு வருவதால், அவனது வாழ்நாள் குறையும் என்பது உண்மையா ?
அவன் யாரைக் கோபித்துக்கொள்கிறானோ, அவனுடைய வாழ்நாளும் கூடக் குறையும்.  ‘சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி’ என்று ஐயமில்லாமல் அறிவிக்கிறார் அய்யன்.

ஆசைகள் கொஞ்சமும் இல்லாமல் இருக்க முடியுமா ?
ஆசையில்லாமல் இருக்க வேண்டும் என நினைப்பதும் ஓர் ஆசை தானே ? ‘பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு’ என்கிறார் வள்ளுவர்.  திருமூலரோ ‘ஆசை அறுமின்கள்  ஆசை அறுமின்கள் ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள்’  என்கிறார்.  ‘ஆசையே துன்பத்திற்குக் காரணம்’  என்று சொனன புத்தர் அதனால்தான்  கடவுள் ஆசையையும் துறக்க நினைத்தார் போல் தோன்றுகிறது.  கடவுளைப் பற்றி புத்தர் எதுவும் சொல்லவில்லை.

ச. தங்கமணி, சத்திரப்பட்டி.
உலகில் மிக இனிமையானது எது ?
மழலை என்றார் வள்ளுவர்.  காசோசை என்கிறது இன்றைய உலகம்.

வாசுதேவன், ஸ்ரீராம்பூர்.
திருவள்ளுவர் எழுதிய திருக்குறளைப் புரிந்துகொள்வதைவிட  ஒளவையாரின் ஆத்திசூடியைச் சுலபமாக புரிந்து கொள்ள முடிகிறதே.  என்ன காரணம் ?
ஆத்திசூடி காலத்தால் மிகப் பிற்பட்டது.  அதுதான் காரணம்.

எஸ். அகிலா, தென்கடப்பன்தாங்கல்.
உலகத்தைப் படைத்த இறைவனையே, அழிந்துபோகும்படி வள்ளுவர் கூறியிருக்கிறாரே, என்ன காரணம் ?
உழைக்காமல் பிச்சையெடுக்கும் சோம்பேறிகளைப் பார்த்து, வள்ளுவருக்கு வந்த சீற்றம் அது.  மேலும் உலகியற்றியான் என்று கூறுவது ஆராய்ச்சிக்குரியது.  அவர் அரசனைச் சொல்கிறாரோ என்னவோ ?

ஔவை, திருவள்ளுவர், கபிலர் என்போர் உடன் பிறந்தவர்களா ?
அப்படியும் ஒரு கதை.  உண்மையில் அவர்கள் தமிழுடன் பிறந்தவர்கள்.

எம். தாமோதரன், ஆண்டிப்பாளையம்.
திருக்குறளில் குழந்தைகளுக்குக் காமத்துப் பால் தேவையா ?.
குழந்தைகளுக்குக் காமத்துப் பால் தேவையில்லை.  ஆனால்,  குழந்தைகள் தேவையென்றால்,  காமத்துப் பால் தேவை.

ஆர். பி. ஜெயச்சந்திரன், பூனாம்பளையம்.
நடுரோட்டில் நிற்கும் தலைவர்களின் சிலைகள் பற்றி ?
தக்கர் தகவிலர் என்பது தலைவர்களைப் பொறுத்தவரை அவரவர் எச்சத்தால் (வாரிசால்) காணப்படும் என்ற குறளைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் காக்கை எச்சத்துக்குக்  கொண்டுவந்துவிட்டார்கள்.

எம். தாமோதரன், கானூர்.
பொருள் தெரியாமல் 1330 குறள்களையும் ஒப்பிப்பதால் என்ன பயன் ?
ஒப்பிப்பதற்குப்  பொருள் கொடுத்து ஊக்கப்படுத்தும்போது, கொஞ்ச நாள் கழித்து, பொருளையும் புரிந்து கொள்ள ஆர்வம் வரும் அவர்களுக்கு.  பள்ளியிறுதி வகுப்பில் படிக்கும்போது அழுக்காறாமை, வெகாமை போன்ற அதிகாரங்களைப் பரீட்சைக்காகத்தான் நெட்டுருப் போட்டேன்.  ‘அழுக்காறு என ஒரு பாவி திருச் செற்றுத் தீயுழி  உய்த்து விடும்’ என்பதன் முழு அர்த்தம் 50 வயதில் தான் புரிந்தது.

ஆர். ராம்மோகன், என். மேட்டுப்பட்டி.
‘ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் !’  ஊழல் வினை ?
முதலில் செல்வம் காட்டும்.  பின்னர் கைவிலங்கு பூட்டும்.

சுஜாதா பதில்கள் – பாகம் 2
தமிழ்மகன், சென்னை.
‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்று வள்ளுவர் கூறியிருக்கிறாரே, அது சாத்தியமா ?
சும்மா சிரித்தால் மட்டும் போதும்.  அதனை ‘அடுத்து ஊர்வதற்கு’ (வெல்வதற்கு) இந்த மேம்போக்கான மகிழ்ச்சியை விட வேறு எதுவும் இல்லை என்கிறார் வள்ளுவர்.

கல்பனா, சுப்ரமணியபுரம்.
திருக்குறள், தொல்காப்பியம், புறநானூறு உள்பட எல்லா இலக்கியத்துக்கும் ஏன் மீண்டும் மீண்டும் உரை எழுதணும் ?  இதில் நிலையான ஒரு உரையை எப்படி  தேர்ந்தெடுத்து  வாங்கிப் படிக்கறது ?
நிலையான உரை மட்டும் போதாது.  இவைகளின் அடித்தளத்தில் பல அர்த்தங்கள் இருப்பதால்.

சுகுமாரன்.
‘சிக்’ ஜோக் என்றால் என்ன ?
வள்ளுவர் சொனன ‘இடுக்கண் வருங்கால் நகுக’ தான்.  ஆனால் ஒரு சிறு மாறுதல்.  இடுக்கண் அடுத்தவர்களுக்கு வர வேண்டும்.

மகேஷ்.
உங்கள் தேர்வில் ‘Man of  the Year’  யார் ?
ஏபிஜே அப்துல் கலாம்தான்.

அப்துல் கலாம் பற்றி சுஜாதா

See full size image
அந்த நாட்களில் அவர் பணியில் கவனமும், கடமை உணர்ச்சியும் மிக்க ஓர் உன்னதமான தலைவராக, வேலை, வேலை, வேலை என்று காலையும், மாலையும் ஆர்வலராகத்தான் அறிமுகமானார்.  எந்தக் காரியத்தையும் நேற்றே செய்து முடிக்க வேண்டும் என்னும் அவசரத்தில் இருந்தார்.  அவர் நடத்தும் கூட்டங்கள் சுருக்கமானவை.  தன் கீழ் பணி புரிவார்கள் மேல் மிகுந்த நம்பிக்கை வைப்பார்.  அவருடைய வெற்றியின் ரகசியம் ‘இதனை இவனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்’ என்னும் திருக்குறளின் சாராம்சமாக இருந்தது.517 . இதனை இவனால் இவன்முடிக்கும் என்றாய்ந்(து)

அதனை அவன்கண் விடல்
‘இந்தச் செயலை, இப்படி இவன் முடித்துக் கொடுப்பான்’ என்று ஆராய்ந்து அந்தச் செயலை அவனிடம் விட்டுவிட வேண்டும் (சுஜாதா உரை)
236  தோன்றின் புகழோடு தோன்றுக அதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.
எங்கேயாவது தோன்றினால் புகழோடு தோன்ற வேண்டும்.  இல்லையேல் சும்மா இருக்க வேண்டும் (சுஜாதா உரை)
மறுப்புகள் – சுஜாதா

ஷங்கரின் முதல்வன் படத்தின் மறுப்பு வேறு விதமாக இருந்தது. “அதில் வரும் முதல்வரின் பாத்திரம் எந்த விதத்திலும் தமிழக முதல்வர் கலைஞரை தோற்றத்திலோ, பேச்சிலோ பிரதிபலிக்காமல் இருக்க பிரத்தியேக கவனம் எடுத்துக்கொள்ளுங்க” என்று ஷங்கரிடம் சொன்னேன்.  அந்தப் பாத்திரத்தில் நடித்த ரகுவரனுக்கு நரைத்த தலையும், ஜிப்பாவும் தடுமாற்ற தமிழ் உச்சரிப்பும் மிகவும் வித்தியாசமாக இருந்தது.  எந்தவிதத்திலும் தமிழக முதல்வரைப்போல இல்லை. ஒரே ஒரு இடத்தில மட்டும் ‘அகலா(து) அணுகாது தீக்காய்வார் போல்க’ என்ற திருக்குறள் பயன்படுத்தியிருந்தேன்.  போச்சு! அது போதுமானதாக இருந்தது மறுப்புக்கு.  எந்த முதல்வர் திருக்குறள் மேற்கோள் காட்டுகிறார் என்று மதுரையில் அந்தப் படத்துக்கு பெரிய மறுப்பு ஊர்வலம் நடத்தினார்கள்.691  அகலா(து) அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.
கிட்டேயும் போகாமல், தூரத்திலும் இல்லாமல் நெருப்பில் குளிர்காய்பவர்களைப் போல மன்னரிடம் பழக வேண்டும். (சுஜாதா உரை)

Advertisements