முதல் பதிப்பின் முன்னுரை – சுஜாதா  (22-12-95)

தமிழில் சரித்திர நாவல்களுக்கு உண்டான சம்பிரதாயத்தை வகுத்தவர்கள்  கல்கியும், சாண்டில்யனும்.  தற்போது எழுதப்படும் சரித்திர நாவல்கள் அனைத்தும் இவ்விருவர் பாணியில்தான் எழுதப்படுகின்றன.  லேசான சரித்திர ஆதாரங்கள்;  நிறைய சரடு;  நீண்ட வாக்கியங்கள் —  இவைகளின் உள்ளே ஒரு நவீனக் கதைதான் மறைந்திருக்கும்.  குஞ்சரமல்லர்கள்,  கத்திச் சண்டைகள்,  சல்லாத் துணித் திரைகளுக்குப் பின் கரிய கண்கள் கொண்ட பெண்கள் —  இவைகள் எல்லாம் சரித்திர நாவலுக்கு உண்டான ‘பார்முலா’ க்களாக இன்றும் இருக்கின்றன.  இவைகளிலிருந்து விலகிச் செல்லும் ஆசையுடன் ‘கருப்பு, வெளுப்பு, சிவப்பு’ என்னும் நாவலை குமுதத்தில் துவங்கினேன்.  சாதிக்கலவரம் எழுந்து அதை நிறுத்த வேண்டியிருந்தது.  ஒரு விதத்தில் சமரசம் பண்ணிக்கொண்டு,  அதை ‘ரத்தம் ஒரே நிறம்’ என்று சில தினங்கள் விட்டு துவங்கி முடிக்க முடிந்தது.’காந்தளூர் வசந்தகுமாரன் கதை’ நான் எழுதும் இரண்டாவது சரித்திர நாவல். வழக்கம்போல் ராஜராஜ சோழனின் காலக்கட்டத்தில் கதையை எடுத்துக் கொண்டாலும், கதை மாந்தர்களை ‘கட் அவுட்’ பாத்திரங்களாக அமைக்காமல் சற்றே நம்பக்கூடிய பாத்திரங்களாகப் படைக்க முயற்சி செய்துள்ளேன்; இதில் தெரியும் சரித்திர சம்பவங்கள் அனைத்தும் ஆதாரமுள்ளவை. நீலகண்ட சாஸ்திரி, பர்ட்டன் ஸ்டைன், சதாசிவப்பண்டாரத்தார் போன்றவர்கள் விஸ்தாரமாக எழுதியிருக்கும் சரித்திரக் குறிப்புகளை ஆதரித்தவை. எந்தக் காலக் கட்டத்திலும் முதிர்ந்த அனுபவமுள்ள ஒருவரும்,  விளையாட்டுப் போக்கான ஒரு இளைஞனும் இருப்பார்கள்.  எந்தக் காலத்திலும் பொறாமை, சதி, அரசியல் ஆதாயங்களுக்காகத் திருமணங்கள் எல்லாம் இருக்கும்.  இந்த நாவலில் கணேசபட்டர் என்னும் பிரம்மதேயக்காரரும், வசந்தகுமாரன் என்னும் இளைஞனும், அந்தப் பெயரில் இல்லாவிட்டாலும்  வேறு பெயரில் வாழ்ந்திருக்கலாம்.  அது போலத் தான் அபிமதி.  அரசவையில் எத்தனையோ ராணிகளில் ஒருத்தியின் மகளாக இருந்திருக்கலாம்.’காந்தளூர்ச்சாலை’ என்னும் இடத்தில சோழர்களுக்கும்  சேர — பாண்டிய மன்னர்களுக்கும் நடந்த நில — கடல் போரின் ஆதாரக் காரணம் தூதனை அவமதித்தது என்பதில் கருத்து வேறுபாடில்லை.  அதனால் வசந்தகுமாரன் சோழ நாட்டுத் தூதுவனாகச் சென்றிருக்க முடியும்.இந்தக் கதையின் தொடர்ச்சியாக, காந்தளூர்ச் சாலையில் நடந்த போரின் விவரங்களைக் கொஞ்சம் படித்து ஆராய்ந்துவிட்டு எழுத உத்தேசித்திருக்கிறேன்.
காந்தளூர் வசந்தகுமாரன் கதை  |  

இக்கதைக்குப் பல புத்தகங்கள் எனக்குப் பயன்பட்டன.  புரவலர் பொன். முகிலன் அவர்கள் எனக்குச் சில சோழர்காலத்துச் சொற்களைக் குறிப்பிட்டு தொடர்ந்து கடிதம் எழுதிக் கொண்டிருந்தார்.  அவருக்கு நன்றி.  அந்தக் காலத்து நிகண்டுகளும் பயன்பட்டன.

நன்றி – மகேஷ் : ரசிகன் (http://gcefriends.blogspot.com/2009/10/blog-post_29.html)

ராஜராஜ சோழனின் காந்தளூர்க் கடிகைப் போரைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ராஜராஜ‌ன் மெய்கீர்த்தியிலும் முதன்மையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது இந்த போர். சேர மன்னனுடன் பேச‌ அனுப்பப்பட்ட தூதுவ‌ன் ஒருவன் அவமதிக்கப்பட்டதால் வெகுண்ட ராஜராஜன் சேர நாட்டின் மீது போர் தொடுத்தான் என்பது வரலாறு. இதைப் பின்புலமாகக் கொண்டு அமரர் சுஜாதா எழுதிய நாவல் தான் “காந்தளூர் வசந்தகுமாரன் கதை”
திருவனந்தபுரத்துக்கு அருகில் உள்ள விழிஞம் தான் அப்போதைய காந்தளூர். மிக முக்கியத் துறைமுகம் காந்தளூர். சேர நாட்டின் மீதான நிரந்தர வெற்றிக்கு இந்தத் துறைமுகத்தைப் பிடிப்பது முக்கியமாக இருந்தது. தவிர ராஜராஜனால் நாடுகடத்தப்பட்ட ரவிதாசன் முதலியோரும் இங்கிருந்து தான் ஒற்ற‌ர்களைத் தயார்படுத்தி அனுப்பியாதாகவும் கூறுவர்.
இனி கதை…
கதைப்படி, வசந்தகுமாரன் சேர நாட்டுக்கு அனுப்பப்பட்ட தூதுவன். அவனுடைய குரு,நண்பர் கணேசபட்டர். இந்த பெயர்களை எங்கேயோ கேட்ட மாதிரி இல்லை? சுஜாதாவின் பிரியத்துக்குரிய நாயகர்கள் கணேஷ், வசந்த் தான் சரித்திரத்தில் வருகிறார்கள். கணேச பட்டரிடம் அதே தீட்சண்யம். வசந்தகுமாரனிடம் அதே இளமைக் குறும்பு. ரசிக்க வைக்கிறார்கள்.
குதிரை வியாபாரத்துக்காக சோணாடு வந்த யவனன் ஒருவனைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்படுகிறான் வசந்தகுமாரன். இதனிடையே அரசகுமாரி அபிமதியைக் காதலிக்கிறான். பிறகு சந்தர்ப்ப சூழ்நிலைகளால் காந்தளூரைச் சேர்ந்த சேர நாட்டு ஒற்றன் எனப் பழி சுமத்தப்படுகின்றான். இந்த சதியில் சிக்க வைப்பது ராஜராஜனைக் கொல்ல வந்த எதிரி நாடு ஒற்றர்கள். மரண தண்டனை விதிக்கப்படும் வசந்தன் எப்படித் தப்பிக்கிறான், எதனால் சேர‌ நாடு அனுப்ப‌ப்ப‌டுகிறான், ராஜராஜன் உயிர் எப்படிக் காப்பாற்றப்பட்டது, வசந்தன் காதல் என்ன ஆனது என்பதை சுஜாதா த‌ன‌து பாணியில் விவ‌ரித்திருக்கிறார்.
இந்தக் கதையில் நடைபெறும் அனைத்து முக்கிய சம்பவங்களுக்கும் சரித்திரத்தில் நடந்ததாகச் சொல்கிறார் சுஜாதா. பாத்திரங்களின் பெயர் வேண்டுமானால் வேறாக இருக்கலாம். ஆனால் சம்பவங்கள் உண்மை என்கிறார். உதகைக் கோட்டையைப் பிடிக்க முனைவது, ராராஜேஸ்வரத்துக்கான ஆயத்தப் பணிகள், மலை நாட்டின் மீதான போர் என ஏராளமான விஷய‌ங்கள் வருகின்றன. இந்தப் போர்களுக்கெல்லாம் கலிங்கப்பரணி,மூவர் உலா போன்ற நூல்களை ஆதாரமாகக் காட்டுவார்கள்.
பாத்திரங்களை கல்கி அளவுக்கு கட்‍அவுட் பாத்திரங்களாகப் படைக்காமல் சாதாரண மக்களாக உலவ விட்டிருப்பார் சுஜாதா. இதை அவரே கூறியிருப்பார்.  உதாரணத்துக்கு ராஜராஜன் மீதும் மக்கள் கோபப்படுகிறார்கள்கள். நாயகன் வசந்தனும் ஏராளமான வசவு வார்த்தைகளைப் பிரயோகிக்கின்றான்(உம் : விலைமகள் மைந்தன்). கணேச பட்டரும் ஆபத்துக் காலத்தில் மயங்கி நிற்கிறார்.
ஆனால் அரசகுமாரி ஒருத்தி கடத்தப்பட்டால் அந்நாளில் இப்படி வாளாவிருப்பார்களா என்பது சந்தேகம் தான். அது தவிர, அபிமதியை சளுக்க மன்னன் விமலாதித்தனுக்குக் கொடுக்க முனைந்தது, ராஜராஜனைக் கொல்ல நடந்த ச‌தியில் விமலாதித்தன் இருந்தான் என்பதெற்கெல்லாம் ஆதாரம் இருக்கிறதா எனத் தெரியவில்லை. நிறைய இடங்களில் ராஜராஜனை “இராஜராஜீச்சுரம் கொண்ட” என அடை மொழி கொடுத்து அழைக்கிறார்கள் கோயில் கட்டுவதற்கு முன்பே. இந்த மாதிரி சில விஷயங்கள் நெருடுகின்றன. ஆனால் உண்மையான வராலாறு தெரிந்தால் இதுவும் ஒரு பிரச்சனையாக இருக்காது என நம்புகிறேன்.
பக்கம் பக்கமாக வர்ணித்து எழுதப்பட்ட ஒரு காட்சி, நாடகத் தனமான வசனங்கள் என்றே சரித்திர நாவல்களைப் படித்தவர்களுக்கு சுஜாதாவின் கூர்மையான வசனங்களும், எளிய கதையோட்டமும் வித்தியாசமான விருந்தாக இருக்கும்.
ஆனால் சுஜாதாவின் மற்ற நாவல்களில் உள்ள அந்த “அது” இந்த நாவலில் இல்லை🙂
குறிப்பு : காந்தி செத்துட்டாரா ரேஞ்சுக்கு இந்த நாவலைப் பற்றி இவ்வளவு தாமதமாக எழுதியிருக்கிறேன். ரொம்ப நாள் தேடலுக்குப் பின் போன வாரம் கிடைத்தது இந்த நாவல். அதான்!

நன்றி – பிரசன்னா இராசன்   (http://oliyudayon.blogspot.com/2009/08/blog-post.html)

சுஜாதாவின் ‘காந்தளூர் வசந்தகுமாரன் கதையும்’ கல்கியின் சரித்திர நாவல்களும்

STD – ன்னா வரலாறு தானே என்று திரிந்து கிடந்த எனக்கு சரித்திரத்தில் கொஞ்சமாவது பிடிப்பு ஏற்படுத்தியவை கல்கியின் நாவல்களே. ’பார்த்திபன் கனவு’, ‘சிவகாமியின் சபதம்’, ’பொன்னியின் செல்வன்’ மூன்றுமே தமிழின் ஆகச் சிறந்த படைப்புகள் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனாலும், கல்கியின் பாத்திர படைப்புகள் பெரும்பாலும் கொட்டாவி விடவே வைத்தன. கல்கியின் பாத்திரங்கள் ஒன்று ரெம்ப நல்லவர்களாக இருப்பார்கள், அல்லது ’தவசி’ பாசையில் ரெம்ப ரெம்ப கெட்டவர்களாக இருப்பார்கள். ‘பார்த்திபன் கனவு’ என்னைப் பொறுத்த மட்டில் அவரின் மிகச் சிறந்த முழுமையான படைப்பு. அதற்கு பிறகு ‘சிவகாமியின் சபதம்’, அதற்கு அடுத்த வரிசையில் தான் எல்லோராலும் கொண்டாடப் படும் ‘பொன்னியின் செல்வன்’. கல்கியின் பாத்திரங்களின் அளவுக்கு அதிகமான ரொமாண்டிஸிஸம், என்னை பல சமயங்களில் தூக்கத்தில் ஆழ்த்தியிருக்கின்றன. இது அனைத்தும் எனது கருத்தே (பின்னூட்டத்தில சண்டை போடாதீங்க சாமிகளா!!)
சரி சரி மேட்டருக்கு வரேன் மாமே. இப்ப தான் சுஜாதாவின் இரண்டாவது சரித்திர நாவலான ‘காந்தளூர் வசந்தகுமாரன் கதை’யைப் படித்து முடித்தேன். (அவரின் முதலாவது சரித்திர நாவல் ‘இரத்தம் ஒரே நிறம் – முதலாம் சிப்பாய் கலகத்தின் அடிப்படையில் எழுதியிருந்தார்). கதை வழக்கம் போல் சோழப் பேரரசின் காலத்தில் நடக்கும் கதை. ஆனால் கதை நாயகன் நம்ம வசந்த குமாரன். அவனுக்கு குரு போல் இருந்து செயல் படுபவர் கணேச பட்டர். இந்த பேரை எல்லாம் எங்கே கேட்டது போல் இருக்குதா. ஆமாம் பாஸீ. கணேஷ், வசந்த் ஒரு சரித்திர நாவலில். ஷப்பா!! இன்னாமா யோசிச்சு இருக்காருப்பா சுஜாதா. சத்தியமாக மேலே சொன்ன வரிகளை எழுதும் முன் இந்த பாத்திரப் படைப்பை நான் உணரவில்லை.
நம்ம வசந்தகுமாரன் வழக்கம் போல் பெண் பித்தன். சூதாடுபவன். நம்மாளு சிக்கல்ல மாட்டும் போதெல்லாம் நம்ம கணேச பட்டர் தான் காப்பத்துறாரு. கணேச பட்டர் பிரம்மதேய பணியில் இருப்பவர் (லாயர் மாமே). யவன தேசத்தில் (க்ரீஸ்) இருந்து வரும் ஒரு குதிரை வணிகனிடம், குதிரைகளை வாங்குவதற்காக பேரம் பேசும் வசந்தகுமாரன், அவனை ஒரு பதியிலார் விடுதிக்கு (ஹிஹி… அர்த்தம் புரிஞ்சதா??!!) அழைத்து செல்ல அங்கு மர்மமான முறையில் அவன் இறக்கிறான். அதற்கு பிண்ணனியில் உள்ள சதி என்னவென்று கணேச பட்டர் உதவியுடன் ஆராய அது இராஜ இராஜ சக்கரவர்த்தியை சேர, பாண்டியர்கள் கொலை செய்யும் சதியில் வந்து முடிகிறது. கதையின் முடிவை போட்டு உடைக்க விரும்பவில்லை. அதனால் படித்து தெரிந்து கொள்ளுங்களேன். ஆனால் ஒன்று மட்டும் உறுதியாக தெரிகிறது. இந்த நாவலுக்கு இரண்டாம் பாகம் எழுத நினைத்திருக்கிறார். அது மட்டும் உறுதியாக தெரிகிறது. ஏனெனில் இறுதி அத்தியாயம் முழுமையாக முற்று பெறவில்லை.
சரித்திரத்தின்படி பார்த்தால் காந்தளூரில் நிகழ்த்திய யுத்தம் தான் முதலாம் இராஜ இராஜ சோழன் நிகழ்த்திய மிகப் பெரிய துவந்த யுத்தம். கி.பி 994இல் சேரனும், பாண்டியனும் இணைந்து சோழர்களுக்கு எதிராக நடத்திய இந்த யுத்தத்தின் பின்னர் இராஜ இராஜன் மும்முடிச் சோழன் என்னும் புகழ் பெற்றான். காந்தளூர் இன்னும் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ளது. அதன் பின்னர் உதகை கோட்டை யுத்தம், அதன் தொடர்ச்சியாக இலங்கை யுத்தம். இப்படி தான் செல்கிறது முதலாம் இராஜ இராஜனின் வரலாறு. வரலாற்று நாவல்கள் பெரும்பாலும் புனைவு தானே. இந்த வரலாற்றில் கணேஷ், வசந்த் கதாப் பாத்திரங்களை புகுத்தியது தான் சுஜாதாவின் சாமர்த்தியம்.
நாவலின் ஆரம்பத்திலே சுஜாதா சொல்லி இருக்கிறார். ”கட் அவுட் கதாப்பாத்திரங்களாக அமைக்காமல் அவற்றை சுதந்திரமாக உலவ விட்டிருக்கிறேன்” என்றிருக்கிறார். உண்மை தான். கல்கியின் கதாப்பாத்திரங்களின் ரொமாண்டிஸிஸம் இங்கு சுத்தமாக இல்லை. கதையின் நாயகன் ஒழுக்க சீலனாக இல்லாமல், சூப்பர் ஹீரோ போல் காட்டாமல் மிகச் சாதாரணமாகக் காட்டி இருந்தார்.சரித்திரப் படி, மிகத் துல்லிய தகவல்களை தர மிகவும் மெனக்கெட்டு இருக்கிறார். அங்கங்கே சுஜாதா டச். முதல் பாகத்திலேயே மசாலா மேட்டரை ஆரம்பித்திருந்தார் சுஜாதா ( பதியிலார் விடுதி!! இன்னும் புரியலையா??).இருப்பினும் கதையின் வேகத்தில் ஏனோ கொஞ்சம் மந்தம். வழக்கமான கணேஷ், வசந்த் நாவலின் சூடு இல்லை.
‘யவனிகா’ நாவலின் கடைசியில் வசந்த் சொல்வதாக ஒரு வரி வரும். “இந்த கதையைப் படமா எடுத்தா புரொடியூசர் வெடிகுண்டுக்கு செலவு பண்ணியே போண்டி ஆகிடுவார்”. சுஜாதா என்றும் தன் நாவல்களை திரைப்படமாக எடுக்கப் பட விரும்பியதில்லை. அதை தனது நாடகம் ஒன்றில் அவரே தெரிவித்து இருந்தார். ஆனால் என்னமோ இந்த நாவலைப் படிக்கும் போது மனதில் ஒரு பெரிய பிரம்மாண்டமான திரைப்படம் ஓடியது. கல்கியின் சரித்திர நாவல்களுக்கு, முக்கியமாக ‘பொன்னியின் செல்வனுக்கு’ ஒரு சமர்ப்பணம் போல் தான் இந்த நாவலை எழுதியிருக்கிறார் என்று தோன்றியது. இந்த நாவலின் இன்னொரு பாகம் ஏன் வெளிவரவில்லை என்ற ஏக்கம் தான், ஏனோ ஜீரணிக்க முடியாததாக இருக்கிறது.
சுஜாதா பதில்கள் – பாகம் 1  (உயிர்மை பதிப்பகம்)

செ. செல்லமுத்து, நத்தக்காடையூர்.
காந்தளூர் வசந்தகுமாரன் கதையின் இரண்டாம் பாகம் என்னவாயிற்று ?
எனக்கு வேளையும்,  ‘மூடு’ ம் வரக் காத்திருக்கிறது.

சிவக்குமார், அரக்கோணம்.
முன்பு போல் சரித்திர நாவல்கள் இப்போது எழுதப்படுவதில்லையே  ஏன்?  எழுத்தாளர்கள் இல்லையா அல்லது ரசிகர்கள் குறைந்து விட்டார்களா ?
சரித்திரச் சம்பவங்கள் குறைந்து விட்டன.  இனிச் சரித்திர நாவல்கள் அடுத்த நூற்றாண்டில்தான் சாத்தியம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s