(இது ஒரு guest இடுகை – ஆசிரியர் – திருமலை ராஜன்)

நான் நடக்கும் இடங்கள் – கயோட்டி ஹில்ஸ்

நான் பல வருடங்களாகவே நடப்பதை ஒரு இனிய பொழுது போக்காகக் கொண்டு வருகிறேன். நடக்கும் பொழுது கட்டற்ற தெளிவாக சிந்தனை பிறக்கிறது. ஏகாந்தமான உணர்வு கிட்டுகிறது. மனம் எளிதாகி பறவை போலப் பறக்கிறது. உடலும் மனமும் இயற்கையுடன் ஒன்றி மனம் சிறகடிக்கிறது. அதற்காகவே நடக்கிறேன். உடல் நலம் என்பது அதனால் கிடைக்கும் ஒரு உபரி பலனாகி விடுகிறது. வேலையில் மதிய உணவை வேகமாக முடித்து விட்டு ஒரு 40 நிமிட நடை, வார இறுதியில் ஒரு நீண்ட நடை என்று வாரம் எப்படியும் இருபது மைல்கள் (1 மைல் = 1.61 கீ மீ) என்னையறியாலேயே நடந்து விடுகிறேன். நடப்பது என்பது ஒரு இனிமையான பொழுது போக்காக அமைந்து விடுகிறது. பேச வேண்டியவர்களிடம் பேசி முடிப்பதற்கும், கேட்க்க விரும்பும் இசையைக் கேட்பதற்கும் நடை உறுதுணையாகி விடுகிறது. நடை இப்பொழுது என் நல்ல நண்பன், எனக்கு நல்லதொரு பொழுது போக்கு, என் கொலஸ்டிராலை குறைக்கும் ஒரு சேவகன், என் உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கும் ஒரு காவலன், என் உடல் நலத்தைப் பேணும் ஒரு நல்ல மருத்துவன், என் கற்பனைகளின் ஊற்று, என் சிந்தனைகளின் வடிகால், என் ஆசிரியன், என் இனிய துணைவன்.

நடப்பதற்கென்றே இங்கு ஏராளமான இடங்களை உருவாக்கிப் பேணி வைத்திருக்கிறார்கள்.வீட்டிற்கு அருகே ஒரு ரெண்டு மைல் தாண்டிப் போனால் அற்புதமான இடங்கள் கொட்டிக் கிடக்கின்றன. பசிஃபிக் மஹா சமுத்திரம் தன்னைத் தடுக்கும் மலைகள் வழியாகப் புகுந்து எங்கள் வீட்டின் அருகே வரை எட்டிப் பார்க்கிறது. கடற்கரைக் காயலும் அவற்றை அணைத்த  குன்றுகளுமாக இயற்கை அன்னை தன் எழிலை பொழிந்திருக்கும் அற்புத நிலப் பரப்பு விரிந்திருக்கிறது.

வீட்டில் இருந்து கிளம்பி ஒரு அரை மைல் துரத்தில் ஒரு சின்னப் பாலம் ஏறி இறங்கி, கார் ஓடும் சாலைகளின் இருந்து விலகி உலகின் எல்லை விரியும் இடம் நோக்கி புற வழிச்சாலை வழியாக நேரே போனால் வரிசையாகக் குன்றுகளும் அந்தக் குன்றுகளின் இடை வழியே ஏறி இறங்கினால் பரந்து விரிந்த பசிஃபிக் மஹாசமுத்திரத்தின் மிச்சமும் வந்து விடுகிறது. நான் போகும் பாதையில் கண்ணுக் காணக் கிடைத்தக் காட்சிகளை எல்லாம் கிளிக்கிக் கொண்டே போய் இங்கு இட்டிருக்கிறேன். போக வர மொத்தம் 7 மைல் நீண்ட நடை. வை கோ போயிருந்தால் நீதி கேட்டு நெடிய பயணம் என்று அழைத்திருப்பார். நான் நீதி கீதி எல்லாம் கேட்க்காமலேயே வாரா வாரம் போய் வருகிறேன். இந்த வாரம் போன பொழுது வழக்கமாகக் காணக் கிடைக்கும் மான்கள் கூட இல்லாமல் நான் மட்டும் தனியாகப் போய் எனக்கே சற்று பயமாகிப் போனது :)) இருந்த ஒரே ஒரு கொக்கும் கூட என் காமிரா திறமை அறிந்து இவனுக்கெல்லாம் நாம் போஸ் கொடுப்பதா என்று கேவலமாக நினைத்துப் பறந்து போய் விட்டது. மற்றபடி மலையும், கடற்காயலும் பின்னே நானும் மட்டுமே. அந்தப் பரந்து விரிந்த பிரதேசத்தில், இயற்கையும், அணில்களும், குருவிகளும், வாத்துக்களும், இளையராஜாவும்  துணைக்கு வரத் தனியே நடந்தேன்.  முதலில் எங்கள் குடியிருப்புப் பகுதி பின்னால் மறைய, பரந்து  மஞ்சள் விரிஞ்ச பூக்கள், மஞ்சள் பூக்காடுகளைத் தாண்டினால் கடற்காயல் தண்ணீர் ஓடும் ஓடைகள், ஓடைகளிலே மிதக்கும் வாத்துக்கள்,  பசுமை போர்த்திய குன்றுகள், பொன்வேய்ந்த புல்வெளிக் குன்றுகள், மாலை வெயிலின் மஞ்சள் குளிப்பாட்டிய மலைகள், குன்றுகளைத் தாண்டினால் கடல் என்று காட்சிகள் விரிவதை எல்லாம் எதோ என்னால் முடிந்த வரை பிடித்துப் போட்டிருக்கிறேன். கால் போன போக்கிலே கண் போக கண் போன போக்கிலே மனம் போக, மனம் போன பாதையை மறந்து போகாமல் இங்கு  இட்டிருக்கிறேன்.

படத்தில் காணப்படும் இந்த இடம் இப்பொழுது கயோட்டி ஹில் என்றழைக்கப் படுகிறது. கயோட்டி எனப்படும் மிருகங்களும், ஓநாய்கள், பறவைகள், அணில்கள் நிறைந்த ஒரு கடற்கரைக் காயல் பிரதேசம். முன்னொரு காலத்தில் ஓலோன் எனப்படும் செவ்விந்தியப் பழங்குடியினர்களின் வசிப்பிடமாக இருந்தது. கடற்கரையோரம் வளரும் ராட்சத நாணற் புற்களை வெட்டி குடிசை கட்டி, அதிலேயே படகு செய்து, வளைகுடாப் பகுதியில் சென்று மீன் பிடித்து, அக்னி வளர்த்து, உலக நலம் வேண்டி யாகங்கள் செய்து, கூட்டுக் குடியிருப்பாய் வாழ்ந்திருந்த இடம். ஆத்தோரம் நாணல் எடுத்து அழகழகாய் வீடு கட்டி, தோட்டம் இட்டு, செடி வளர்த்து ஜோராக வாழ்ந்திருந்த அவர்கள் வாழ்க்கைக்கு எமனாக் வந்தார்கள் ஸ்பானிஷ் மிஷனரிகள். அவர்களைப் பிடித்து அடிமைப் படுத்தி கொட்டடிகளில் அடைத்து உணவு உடை பழக்க வழக்கம் எல்லாம் மாற்றி அந்தப் பழங்குடி இனம் அழிந்து போக இப்பொழுது அவர்கள் வாழ்ந்த இடம் மட்டும் ம்யூசியமாக மிச்சம் இருக்கிறது. செவ்விந்தியர் வாழ்ந்த வாழ்க்கையை இப்பொழுது மியூசியமாக அந்தக் குன்றில் வைத்திருக்கிறார்கள். மனிதன் போன பாதையை மறந்து போகலாமா?

நான் நடக்கும் இடங்களின் சூழல் – கயோட்டி ஹில்ஸ்

ஆகவே நண்பர்களே நடப்பதினால் ஆய பயன்களை நான் பட்டியலிட்டு விட்டேன். படமும் காட்டி விட்டேன். நடையினால் நிச்சயம் எனக்குப் பலன்கள் பல கிட்டின. நடையினால் கிடைக்கும் பலன்களைப் பற்றிய சந்தேகம் இருப்பின் உங்கள் மருத்துவ நண்பர்களை கேட்டுக் கொள்ளலாம். அட, நடப்பதினால் வேறு எந்த பயனும் கிட்டாவிட்டாலும் கூட வீட்டுச் சச்சரவுகளில் இருந்து கொஞ்சம் அமைதியாக ஒரு மணி நேரத்தை ஏகாந்தமாக கழித்து விட்டாவது வரலாமே, அந்த அமைதிக்காகவாவது நடக்க மாட்டீர்களா என்ன?

நடப்பதனால் நலம் உண்டாம்
நடப்பதினால் நன்மை உண்டாம்
நடப்பதினால் உடல் எடைக் குறைவுண்டாம்
நடப்பதினால் புத்துணர்ச்சியுண்டாம்
நடப்பதினால் கொலஸ்டிராலுக்குக் குறையுண்டாம்
ஆதலினால் நடத்தல் செய்வீர்

(முற்றும்)

தொடர்புள்ள பிற பதிவுகள் மற்றும் சுட்டிகள்

ஆதலினால் நடத்தல் செய்வீர் – பகுதி 2

ஆதலினால் நடத்தல் செய்வீர் – பகுதி 1

Coyote Hills

Advertisements