(இது ஒரு guest இடுகை – ஆசிரியர் – திருமலை ராஜன்)

நான் நடக்கும் இடங்கள் – கயோட்டி ஹில்ஸ்

முதல் ஐந்து நிமிடம் மெதுவான இயல்பான நடையும், அதன் பின் தசைகளை இழுத்துச் செய்யும் சிறிய உடற்பயிற்சியும் அதன் பின்னர் சற்றே வேகமான இதயத் துடிப்பு தன் உயர் நிலையில் 70% எட்டும் வண்ணம் அதிகரித்த நடை ஒரு 40 நிமிடங்களும் பின் மெதுவான நடையுடன் தினப் படி நடையை முடித்துக் கொள்ளலாம். வெளியில் நடக்க வசதிப் படாவிட்டாலோ, அதற்கான பாதுகாப்பான இடம் கிட்டாவிட்டாலோ வீட்டிற்குள்ளேயே நடை எந்திரமான டிரெட்மில்லில் நடக்க முடியுமா என்றும் பாருங்கள். அலுவலகங்களில் உடற்பயிற்சி இடங்கள் இருப்பின் அவற்றைப் பயன் படுத்திக் கொள்ளுங்கள். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. நமது பரபரப்பான வேலை நாட்களில் ஒரே நேரத்தில் ஒரு மணி நேரமோ அல்லது சின்னச் சின்னதாக ஒரு இரண்டு 30 நிமிடங்களோ எடுத்துக் கொண்டு நடப்பது சாத்தியமான ஒரு காரியமே.

நடக்கும் பொழுது உடலை நேராக வைத்துக் கொண்டு கைகளை வீசி, கால்களை அளவான அடி எடுத்து வைத்து நடப்பது அவசியம். நடக்கும் பொழுது பேசக் கூடிய அளவில் மூச்சு சீராக இருக்க வேண்டியது அவசியம். உங்களுக்கு விருப்பமான பாடல்களை எம் பி 3 ப்ளேயர்களில் கேட்டுக் கொண்டோ, நீலப் பல் (ப்ளூடூத்) அமைந்த, தோடுடைய செவியராய் செல்பேசிகளில் விருப்பமானவர்களுடன் பேசிக் கொண்டோ கூட நடக்கலாம். அப்படி நடப்பது நடையை எளிமையாக்கும். பாதங்களுக்கு நீண்ட நடைக்கு ஏற்ற நல்லதொரு கேன்வாஸ் ஷீ அவசியம். செருப்புடனோ அல்லது லெதர் ஷீ போன்றவைகளை அணிந்தோ நடவாதீர்கள். கைகளில் சிறிய எடையுடன் நடப்பது எடை குறைக்க உதவும். ஒவ்வொரு நாளும் நடக்கும் தூரத்தையும் வேகத்தையும் அதிகரித்துக் கொண்டே செல்லுங்கள். வாரம் எப்படியும் 10 மணி நேரங்கள் நடந்து விட வேண்டும் என்று ஒரு இலக்கு வைத்துக் கொண்டு நடக்கவும். லேசான நெகிழ்வான பருத்தி ஆடைகளை அணிந்து நடத்தல் அவசியம். நடப்பது கஷ்டமான காரியமாகத் தோன்றாமல் மிக எளிமையான அனுபவித்துச் செய்யக் கூடிய ஒரு பயிற்சியாக ஆக்குவதில் அணியும் உடையும் காலணியும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

150 பவுண்டு எடையுள்ள அல்லது 70 கிலோ எடையுள்ள மனிதர் மணிக்கு நான்கு மைல்கள் வேகத்தில் ஒரு மணி நேரம் நடந்தால், கிட்டத்தட்ட நானூறு முதல் ஐநூறு கலோரிகள் நம் உடலில் இருந்து எரிக்கப் படுகிறது. எரிப்பதற்குத் தேவையான சக்கரை சக்தி கிட்டாத பொழுது நம் வயிறு மடிப்புகளிலும் பிற சதைப் பகுதிகளிலும் சேமிக்கப் பட்டு கட்டியாக உறைந்திருக்கும் கொழுப்பில் இருந்து சக்தி பெறப் பட்டு அந்தக் கொழுப்புகள் எரிக்கப் பட்டு நம் உடல் எடை குறைய நடை உதவுகிறது. ஒரு வாரம் தொடர்ச்சியாக ஒரு மணி நேரம் வேக நடை நடந்தால் நாம் 25 முதல் 30 மைல்கள் நடந்திருப்போம். ஒரு நாளைக்கு 500 கலோரியை எரித்தால் வாரம் ஒரு பவுண்டு உடல் எடை குறைய சாத்தியம் உள்ளது. நடையுடன் கூடி உணவுக் கட்டுப்பாட்டையும் கொணர்ந்தால் நம் உடல் எடைக் குறைப்பு நிச்சயம் சாத்தியமான ஒன்றாகும்.

நாம் ஒரு நாளைக்கு எத்தனை அடிகள் நடக்கிறோம் எத்தனை கலோரிகள் எரித்திருக்கிறோம் என்பதையெல்லாம் கணக்கு எடுக்கும் வேலையை பீடோ மீட்டர் என்னும் சின்ன ஒரு கைக்கு அடக்கமான கருவி கண்டு பிடித்து நமக்குக் காட்டுகிறது. அதை நடக்கும் பொழுது நம் உடலில் மாட்டிக் கொண்டு நடந்தால் அது நமது நடை பற்றிய அனைத்து புள்ளி விபரங்களையும் அளித்து நம் நடைப் பயிற்சியைத் திட்டமிட உதவும். நல்லதொரு பீடோமீட்டர் கிட்டத்தட்ட ஆயிரம் ரூபாய்களுக்குள்ளேயே கடைகளில் கிடைக்கும்.

நான் நடக்கும் இடங்கள் – கயோட்டி ஹில்ஸ்

நடப்பதற்கென்று நேரம் ஒதுக்கி நடக்க முடியவில்லையா, நடப்பதை கட்டாயமாக்க சில எளிய வழிமுறைகள் உள்ளன. மின்தூக்கியில் பயணித்து உயர் மாடிகள் அடைவதைத் தவிர்த்து மாடிப்படிகளை ஏறியே கடக்கலாம். நாம் இறங்க வேண்டிய இடத்திற்கு முந்தைய நிறுத்தத்திலேயே இறங்கி நடக்கலாம், வாகனத்தை சற்று தொலைவில் நிறுத்தி விட்டு செல்ல வேண்டிய இடங்களுக்கு நடந்தே செல்லலாம். வீட்டுச் சாமான்கள் காய் கறிகள் வாங்குவும் வேலைய எடுத்துக் கொண்டு நடந்து சென்று வாங்கி வரலாம்.
(தொடரும்)

தொடர்புள்ள பிற பதிவுகள் மற்றும் சுட்டிகள்

ஆதலினால் நடத்தல் செய்வீர் – பகுதி 1

ஆதலினால் நடத்தல் செய்வீர் – பகுதி 3

Coyote Hills

Advertisements