(இது ஒரு guest இடுகை – ஆசிரியர் – திருமலை ராஜன்)

நான் நடக்கும் இடங்களின் சூழல் – கயோட்டி ஹில்ஸ்

நான் என் நண்பர்களும் இன்னும் டி வி எஸ் பள்ளியில் +2 படித்த அதே பதின்ம வயதினர் அல்ல. முதுமையின் பாதையில் பயணிக்க துவங்கி விட்டோம். இனி எதிர்காலம் நமக்கு அரும்பப் போவதில்லை. இருந்தாலும்  போக வேண்டிய தூரமும் வருடங்களும் இன்னும் அதிகம் உள்ளன. தலை முடிகள் சுருங்கத் துவங்குகின்றன. இளம் வழுக்கை எட்டிப் பார்க்கிறது, இளம் தொந்தி விழுகிறது, இதுவரைக் கேள்விப் பட்டிராத கொலஸ்டிரால், டயபடிஸ் என்ற பெயர்கள் எல்லாம் அணிவகுக்கின்றன, கண் பார்வை சுருங்குகிறது, தலை முடி நரைக்கிறது, இன்னும் பல உடல் மாற்றங்கள் மெல்ல மெல்ல நாம் உணராமலேயே நம்முள் ஏற்பட்டு விடுகின்றன. இவை எல்லாம் ஆண்டவன் நமக்குப் போடும் ரிமைண்டர் லெட்டர்,நம் காலம் சுருங்குவதை நினைவு படுத்தும் எச்சரிக்கைகள் என்பார் கண்ணதாசன்.

நாற்பது வயதுக்கு மேல் நம் உடல் நலத்தின் மீது மிகுந்த அக்கறை கொள்வது நமக்கு இல்லாவிட்டாலும் நம்மை நம்பி இருக்கும் குடும்பத்தாருக்கும் மிக அவசியமானதொன்றாகும். நாம் இது வரை காட்டிய அலட்சியம் இனிமேல் எடுபடாது. நம் உடல் இது வரைத் தன்னைத்தானே பார்த்துக் கொண்டது, இனிமேல் நாம் கவனம் எடுத்து அதற்காக நேரம் செலுத்தி அக்கறை காட்ட வேண்டியது அவசியமாகிறது. நீரிழவு நோயையும், மாரடைப்பையும், புற்று நோயையும் நாம் நம்மிடம் அண்டாமல் தள்ளி வைக்க ஒரு சில உடல் உழைப்புக்களை செய்ய வேண்டிய தருணம் வந்து விட்டது. 40 வயதிலேயே இதை நாம் ஆரம்பித்திருக்க வேண்டும். நம்மில் பலர் உடற்பயிற்சிகளையும், உணவுப் பழக்கங்களையும் கவனுத்தடன் கடமையாக தினசரி நேரம் ஒதுக்கி செய்து வருபவர்களாக இருக்கலாம். இந்த வயதில் நாம் ஜிம்முக்குப் போய் உழைக்க முடிந்தால் நல்லதுதான். அதற்கான நேரமோ, இட வசதியோ நம்மில் பலருக்கு அமையாமல் இருக்கலாம். நம் அனைவராலும் நம் உடல் நலத்தைப் பேணுவதற்கு மிக எளிமையான ஒரு வழிமுறை உள்ளது, அதிகமாக நம் உடலை வருத்தாமல், நம் போக்கிலேயே, இயல்பாகவும் அனுபவித்தும் செய்யக் கூடிய ஒரு தேகப் பயிற்சி நடை. ஆம் நடப்பதுதான். ஒரு காலத்தில் நடப்பது நம் இயல்பான செயல்பாடாக இருந்திருக்கலாம், ஆனால் காலம் மாற, வசதிகள் அதிகரிக்க, வாகனங்கள் பெருக நடப்பது என்பது நாம் அறியாமலேயே நாம் அதிகம் செய்யாத ஒரு செயலாக மாறி விடுகிறது.

தினமும் 30 நிமிடம் முதல் 60 நிமிடம் வரை வேகமாக நடக்க முயன்றால் அதன் பலன்கள் அளப்பரியவை என்கிறார்கள் மருத்துவர்கள். நடப்பதினால் கெட்ட கொலஸ்டிரால் குறையும், நல்ல கொலஸ்டிரால் அதிகரிக்கும், டைப் 2 டயபடிஸ் குறையும், கேன்சர் வருவது தவிர்க்கப் படலாம், உடல் தசைகள் பலம் பெறும், எடை குறையும், மனம் சாந்தியடையும்,மன உற்சாமக் கிட்டும்,  நல்ல உறக்கம் வரும், வயது முதிர்வின் வேகம் குறையும், தன்னம்பிக்கை வளரும், ரத்த அழுத்தம் குறையும், ரத்தத்தில் கொலஸ்டிரால் அளவு குறையும், எலும்புகள் உறுதிப் படும், கால்கள் வலுப் பெறும், மூட்டு வலி குறையும், மன அழுத்தமும் பாரமும் இறங்கும் இன்னும் என்ன என்னவோ நல்லது நடக்கும் என்று குடுகுடுப்பைக்காரன் போல மருத்துவர்களும் ஆராய்ச்சியாளர்களும் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். தினமும் அரை மணி நேரம் நடந்தாலே மேற்கண்ட அத்தனை நற்பலன்களும் சித்திக்கும் என்கிறார்கள் மருத்துவர்களும் உடல்நல நிபுணர்களும். நடத்தல் எளிதான செலவில்லாத ஒரு தேகப் பயிற்சி. அதிகம் அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை. எதற்கும் எங்கும் நடக்க ஆரம்பித்தாலே நடத்தல் இயல்பான ஒன்றாகி விடும்.

நான் நடக்கும் இடங்கள் – கயோட்டி ஹில்ஸ்

நம் அனைவருக்கும் நாம் இருக்கும்  இடங்களில் அருகில் நடப்பதற்கு ஏதாவது ஒரு இடம் இருக்கும். நகர் பகுதிகளில் ஆட்கள் மேல் இடித்துக் கொள்ளாமல் நடப்பது இயலாத காரியம். மதுரை போன்ற நெருக்கமான நெரிசலான நகரங்களில் நடப்பதற்கான இடங்கள் குறைந்து கொண்டே வருகின்றன. நகரங்களில் வசிப்பவர்கள் அதிகாலை நேரங்களில் நடப்பதை வழக்கமாகக் கொள்ளலாம். புறநகர்ப் பகுதிகளில் வசிப்போர் மாலை நேரங்களில் நடப்பதை வழக்கமாக நடக்கலாம். எங்கு வாழ்ந்தாலும் தினமும் ஒரு மணி நேரம் எப்படியாவது நடந்து விட முயலுங்கள். வார இறுதிகளில் அருகில் உள்ள குன்றுகளைத் தேர்ந்தெடுத்து மலையேறுவது மற்றும் ஒரு நல்ல நடைப் பயிற்சியாக அமையும். அதற்கும் முயன்று பாருங்கள். கொஞ்சம் யோசித்தால் அருகில் மலையேறத் தோதான குன்றுகள் பல இருப்பது உங்களுக்குப் புலப் படும்.
(தொடரும்)

தொடர்புள்ள பிற பதிவுகள் மற்றும் சுட்டிகள்

ஆதலினால் நடத்தல் செய்வீர் – பகுதி 2

ஆதலினால் நடத்தல் செய்வீர் – பகுதி 3

Coyote Hills

Advertisements