உண்மைக்கும் பொய்க்கும் இடையே இருப்பது ஒரு மெல்லிய திரைதான்.  அனால் அது அன்றாட வாழ்க்கையில் உறவுகளின் நாடகத்தில் அவ்வளவு எளிதில் விலக்க இயலாத இரும்புத்திரை என்பதை சித்தரிக்கும் நாவல் வண்ணத்துப்பூச்சி வேட்டை.
ஆண்களின் உலகத்தில் பெண்களின் தனிமையையும், பயங்களையும்,  அவர்கள் மேல் செலுத்தப்படும்  வெளிப்படையான, மானசீக வன்முறையையும் சுஜாதா மன நெகிழ்ச்சியூட்டும் வகையில் இந்நாவலில் விவரிக்கிறார்.  மிக நுட்பமான சித்தரிப்புகளும், அவதானிப்புகளும் இந்நாவலை மிகவும் அழகியல்தன்மை கொண்டதாக மாற்றுகின்றன.

சுஜாதாவின் முன்னுரை

‘வண்ணத்துப்பூச்சி வேட்டை’,  ‘கல்கி’ பத்திரிகையில் பல ஆண்டுகளுக்கு முன்பு தொடர்கதையாக வெளிவந்து, இப்போது உயிர்மையில் புதிய பதிப்பாக வருகிறது. (நவம்பர்,  2005)

முதல் பதிப்பின் முன்னுரை (சுஜாதா  – 27-7-94)

இந்த கதை ‘கல்கி’ இதழில் தொடர் கதையாக வெளிவந்தபோது, பலர் இதன் கதாநாயகனான அர்ஜுன் நல்லவனா கெட்டவனா என்று உத்தரவாதமாகச் சொல்லிவிடுங்கள்  என்று விசாரித்தார்கள்.  எனக்கே சொல்ல முடியவில்லை.  வாழ்க்கையில் ஒரு வெறித்தனமாக ஆதர்சத்தை வைத்துக்கொண்டு, அதை எப்படியும் துரத்திப் பிடிக்கும் முயற்சியில் எது செய்தாலும் அதை நியாயப்படுத்தும் இளைஞர்களை இந்த சமுதாயம் தினம் உருவாக்கிக்கொண்டுதான் இருக்கிறது.  கதாநாயகி ரேகா எப்படி ஒரு சமூக அமைப்பின் கைதியோ, அதே அமைப்பின் மற்றொரு கைதிதான் அர்ஜுன் போன்றவர்களும் என்பதைத்தான் இதில் சொல்ல முயற்சித்திருக்கிறேன்.
Advertisements