சுஜாதாவின் ‘என் இனிய இயந்திரா     —-    நன்றி – சரவணகுமரன் குமரன் குடில்

எண்பதுகளில், சுஜாதா ஆனந்த விகடனில் எழுதிய விஞ்ஞானத் தொடர்கதை. புத்தகமாக முதல் பதிப்பு வெளிவந்தது நவம்பர் 1986 இல். பின்பு, தூர்தர்ஷனில் நாடகமாக மாற்றங்களுடன் வந்தது. பின்ன, சுஜாதாவின் கற்பனையை அப்படியே எடுப்பது என்றால் சுலபமா என்ன? அதுவும் தூர்தர்ஷனில்?

இப்ப, இதைத்தான் ஷங்கர் எந்திரனாக எடுத்து கொண்டிருக்கிறார் என்று செய்திகள் வருகிறது.    யக்குனர் ஷங்கர் தன் எண்ணங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள http://www.directorshankaronline.com/ என்ற வலைதளத்தை 2010 புத்தாண்டு முதல் துவங்கி இருக்கிறார்.

கதையை படித்தால் அப்படி யாரும் சொல்ல மாட்டார்கள். ஏனென்றால் இந்த கதையில் ஹீரோ என்று யாரும் கிடையாது.

2020 களில் நடக்கும் கதையை 1980 களில் எழுதியிருக்கிறார். 2022 இல் எங்கும் இயந்திர மயம். கதை என்ன கதை? சுஜாதாவின் கற்பனையும் வார்த்தைகளும் தான் விசேஷம். சிபி-நிலா ஒரு இளம் தம்பதி. இவர்கள் வாழும் அப்போதைய இந்தியா, ஜீவா என்னும் ஒற்றை அதிகாரத்தின் கீழ் உள்ளது. ரவி, மனோ என்று மற்றொரு அணி. நாட்டின் அதிகாரத்துடன் விளையாடும் அணி. ரவியுடன் இருந்த ஜீனோ என்ற இயந்திர நாய், நிலாவுடன் இணைந்து போடும் ஆட்டம்தான், இக்கதையின் ஸ்பெஷல். இந்த கதையை, கதை எழுதிய காலக்கட்டத்தில் படித்திருக்க வேண்டும். ஆச்சரியத்துடன் கூடிய சுவாரஸ்யமாக, சரியாக இருந்திருக்கும். இப்போது படித்தால் கிடைப்பது, இன்னொரு வகையான அனுபவம்.

இந்த கதையில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்திற்கும் சுஜாதா, இரு எழுத்தில் பெயர் வைத்துள்ளார். நாயை விட்டே ஷெல்லியின் கவிதையை பேச விடுகிறார். வருங்காலத்தில் என்ன மாதிரியான இயந்திரங்கள் இருக்கும், மனித மனம் எப்படி மாறுப்பட்டிருக்கும் என தனக்கே உரிய பாணியில் கதையெங்கும் தோரணம் கட்டி தொங்க விட்டிருக்கிறார்.

இக்கதையில் இருந்து சில வரிகள்.

——

நிலா சிபிக்கு போன் செய்ய போகிறாள்.

“பேசுபவரைப் பார்க்கவும் வேண்டுமெனில் ஒரு ரூபாய் அதிகமாகப் போடவும்” என்றது குரல், இயந்திர முட்டாளாக.

‘என் இனிய இயந்திரா… நிச்சயம் உனக்கு நான் பணிந்து ஒரு ரூபாய் போடத்தான் போகிறேன். இன்று என் கணவனிடம் அந்தச் செய்தியைச் சொல்லும்போது அவன் முகம் மாறுவதைப் பார்த்தே ஆகவேண்டும்.’

“சிபி! நிலா பேசறேன்.”

“நிலா! எங்கருக்கே?”

“மால் பக்கத்தில் பூத்தில. சிபி, ஒரு சுபச் செய்தி!”

——

எட்டாவது தெருவில் டிக்கெட் வாங்கிக் கொண்டு ‘மானோ’ பிடித்தாள். அதன் காந்தத் தண்டு காற்று மெத்தையில் வழுக்கிக் கொண்டு செல்ல, ‘சின்த்’ இயந்திரக் குரலில்-பல்லாவரம், மீனம்பாக்கம், பரங்கிமலை, கிண்டி என்று அறிவிக்க, பத்தாவதில் இறங்கி பூமியடி ரயில் பிடித்து எட்டாவது குறுக்குத் தெருவில் இறங்கிக் கொண்டாள். சூப்பர் மார்க்கெட் சென்று ஒரு வாரத்துக்கு உண்டான காய்கறி வகைகள் ஆர்டர் செய்தாள்.

——

ஜீனோ மேசை விளக்கைத் தன்பால் பொருத்திக் கொண்டு கொட்டாவி விட்டது நிலாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவள் மனத்தைப் படித்தது போல் ஜீனோ, “கொட்டாவி விடுவது என்னுடைய மேம்போக்கான செயல்களில் ஒன்று. நிஜ நாய் போல இருக்கவேண்டும் என்று என் கம்பேனிக்காரர்கள் கற்றுத் தந்த அசிங்கம்!”.

——-

“டில்லிக்கு எப்படிப் போவது?”

“அரை மணிக்கு ஒரு தரம் ஷட்டில் விமானம் இருக்கிறது. வார நாட்களில் போனால் பாதி விலைதான் டிக்கெட். காற்று சுவாச பிளேனில் அரை மணி பயணம்!” என்றது ஜீனோ.

——-

”ஜீனோ, இது என்ன வம்பு? வேண்டாம்! உன்னைச் சுட்டுப் பொசுக்கி விடுவார்கள்.”

“என் மெமரியைக் காப்பி பண்ணிக் கொண்டு விட்டால் சுட்டுப் பொசுக்கினாலும் இன்னொரு மாடல் வாங்கிக் கொள்ளலாமில்லையா? எனக்கு என்ன உயிரா இருக்கிறது?”

——-

“ஐயோ! இது சிபி இல்லை. இது யார்? இது யார்?” என்று நிலா புலம்ப,

“’யார்’ இல்லை, இது அஃறிணை” என்ற ஜீனோ, “எனக்கு இருக்கிற படிப்பறிவுகூடக் கிடையாது, மனித சாதியில்லை. என்ன சக யந்திரமே, உனக்கு சித்தர் பாடல் தெரியுமா?”

——-

நாய் தேநீரை சாஸரில் ஊற்றி ‘ப்ளக் ப்ளக்’ என்று நக்கிக் குடித்தது. “இதில் உள்ள க்ளுகோஸ் மட்டும்தான் என் ஸெல்லுக்கு உபயோகம்! மற்றவை யாவும் விரயம். ரவி, தித்திப்பு என்றால் என்ன?”

“உன் நாக்குக்கு அது தெரிவதில்லையா ஜீனோ?”

“என் நாக்கில் ஒரு தெர்மோகப்பிள் மட்டும்தான் இருக்கிறது. ருசி என்பதே எங்கள் மாடலுக்குக் கிடையாது. நானூறு கொடுத்தால் நாக்கு மாற்றித் தருகிறார்கள்.”

“நாக்கு போல வேறு அவயவங்கள்?”

“ஷட் அப்!” என்றது ஜீனோ.

——–

ஜீனோ போன்ற சிறிய இயந்திர நாயைக் கைது செய்ய மூன்று காவலர்கள் அதிகப்படிதான். மேலும், சக்தி வாய்ந்த லேசர் துப்பாக்கிகளை ‘பயம்’, ‘மரணம்’ போன்ற வார்த்தைகளுக்கெல்லாம் அர்த்தமில்லாத அந்த மெஷின் ஜென்மத்திடம் காட்டுவது அபத்தமாக இருந்தது.

——-

“பாட்டரி இணைப்பை எடுத்து விட்டால் போதுமே… நான் செத்துப் போய் விடுவேனே? புறப்படு. தப்பித்து விடலாம்” என்றது ஜீனோ, தீர்மானத்துடன்.

”ஏன் ஜீனோ?”

“பயம்! அவர்கள் என்னைக் கொன்று விடுவார்கள் என்ற பயம் வந்துவிட்டது. என் ஞாபகம், என் செயல்பாடுகள் எல்லாவற்றையும் இழந்துவிட்டால் நான் என்கிற நான் என்ன ஆவேன்?”

”ஜீனோ, நீ மனிதர்கள் போல் சிந்திக்கத் துவங்கி விட்டாய்.”

——

“ஜீனோ, வர வர நீ பேசுவது எதுவுமே புரியவில்லை எனக்கு.”

“மனுஷத்தன்மையின் அடையாளம்!”


Advertisements