திரைக்கதையைப் பற்றிய இந்தப் புத்தகம் என்னைஆச்சரியத்தில் ஆழ்த்தியது. திரைக்கதையின் வடிவத்தையும் அதன் ஆதார அமைப்பையும் இத்தனை தெளிவாக இவரால் எழுத முடிந்திருக்கிறது. நான் என் முதல் திரைப்படத்தை எழுத முயற்சிக்கும்போது இவர் இந்தப் புத்தகத்தை ஏன் எழுதவில்லை? இந்திய சினிமா, இந்தியத் திரைக்கதைகள் பற்றி எதுவுமே இல்லாத நீண்ட நாள் குறையை நீக்குவதற்கு முதல் படி, முதல் பெரிய படி இதோ.(மணிரத்னம்)

சிறந்த இயக்குனரா ஷங்கர்?

சுஜாதாவின் ‘திரைக்கதை எழுதுவது எப்படி?’ புத்தகத்திலிருந்து…

டைரக்டர் ஷங்கரின் ‘முதல்வன்’ படத்தில் கடைசிக் காட்சியில் ஒரு வசனம் எழுதியிருந்தேன்.

காட்சி இது.

ரகுவரனை அர்ஜூன் தன் முதலமைச்சர் அலுவலகத்துக்கு வரவழைத்திருப்பார். ‘உன்னால் எனக்கு ரொம்ப தொந்தரவு. என்னைக் கடமையைச் செய்யவே விட மாட்டேன் என்கிறாய். கலவரம் பண்ணுகிறாய். பாம் வைத்து என் தாய் தந்தையைக் கொன்றுவிட்டாய். உன்னை நான் இப்பொது கொல்லப்போகிறேன்’ என்று ஒரு துப்பாக்கியை டிராயரிலிருந்து எடுக்க, அதற்கு ரகுவரன் சிரித்து, ‘என்னை உன்னால கொல்ல முடியாது. நான் இங்கு வந்ததற்கும் உன்னுடன் தனியாக இருப்பதற்கும் சாட்சிகள் உள்ளன’ என்கிறார்.

அர்ஜுன், ‘நான் சுடப்போவது உன்னையல்ல, என்னை’ என்று தன் கையில் சுட்டுக்கொண்டு அந்தத் துப்பாக்கியை அவர்பால் எறிகிறார். ரகுவரன் அதைப் பிடித்துக்கொண்ட நேரத்தில் காவலாளர்களைக் கூப்பிட்டுவிட, அவர்கள் நிலைமையைத் தவறாகப் புரிந்துகொண்டு ரகுவரனை சுட்டு வீழ்த்துகிறார்கள்.

ரகுவரன் இறந்துபோகுமுன் ஒரு வசனம் எழுதியிருந்தேன். ‘ That was a good interview’ என்று.

ஷங்கர், ‘இதை எதற்காக எழுதினீர்கள்’ என்று கேட்டார்.

‘வில்லன் இறக்கும் முன் புத்திசாலித்தனமாக ஒரு வசனம் சொல்லிவிட்டுப் போவது ஹாலிவுட் வழக்கம். அது ரொம்பப் புத்திசாலித்தனமாக இருந்தால் வேண்டாம்’ என்றேன்.

ஷங்கர், ‘இருக்கட்டும். அதை நான் எப்படிக் காட்டுகிறேன் பாருங்கள்’ என்றார்.

ரகுவரன் இறக்குமுன் ஒரே ஒரு ‘இண்டர்கட்’டாக அந்த இண்டர்வியூவின் ஒரு கேள்வி பதிலை ப்ளாக் அண்ட் ஒயிட்டில் போட்டார். அர்ஜுன் நிருபராக இருந்தபோது முதலமைச்சராக இருந்த ரகுவரனை எடுத்த பேட்டி அது.

அதுதான் கதையின் முக்கியத்திருப்பம். அதை அவ்வாறு ‘இண்டர்கட்’டில் போட்டபோது பாமர மக்களுக்கும் அதைப் புரியவைத்துவிட்டார். டைரக்டரும் திரைக்கதை எழுதுபவரும் ஒத்துழைத்துச் சினிமாவின் அத்தனை சாத்தியம் பயன்படுத்தி ஒரு நல்ல காட்சியை அமைப்பதற்கு உதாரணம் ஷங்கர்.


இந்த படம் எனக்கு ரொம்ப பிடித்த படம். பலமுறை பார்த்தும் சலிக்கவில்லை. மனிஷாவை தவிர எல்லாம் சரியாக இருந்ததென நான் நினைக்கும் படம். ஆக்‌ஷன் படங்கள் பிடித்துக்கொண்டிந்த காலத்தில், அந்த இண்டர்வியூ காட்சி ஒரு ஆக்‌ஷன் காட்சியாகத்தான் தெரிந்தது.

வழக்கமாக வரும் ஒரு நீள சண்டைக்காட்சியை கிளைமாக்சில் வைக்காமல், ஒரு டயலாக் சீனை வைத்து விறுவிறுப்பு ஏற்படுத்திய படம்.

கமர்ஷியல் படம் என்றாலும், கமர்ஷியல் ஐட்டம் என்று தேவையில்லாதது எதையும் இந்த படத்தில் ஷங்கர் திணிக்கவில்லை. (பாடல்களை தவிர… அது இல்லாம எப்படி?) காரணம், ஒருவேளை ஷங்கர் தயாரிப்பு என்பதாகக்கூட இருக்கலாம்.

நன்றி – சரவணகுமரன் (குமரன் குடில்)

Advertisements