நான் படிக்கும் காலத்தில் கோனார் நோட்ஸ் ரொம்ப பிரபலம். தமிழ் புத்தகம் வாங்கும்போதே கோனார் நோட்சும் வாங்கிவிடுவோம் (நான் ஓசி வாங்கியே காலத்தை தள்ளினேன்) அவ்வப்போது நண்பர்கள் வட்டத்தில் கேட்டுக் கொள்வோம் – யார்ரா இந்த கோனார், இப்படி நோட்ஸ் போட்டே பெரிய பணக்காரர் ஆயிருப்பார் போலிருக்கே என்று. பல வருஷக் கேள்விக்கு விகடனில் விடை கிடைத்தது.
அவர் பேர் ஐயம் பெருமாள் கோனாராம். திருச்சி செயின்ட் ஜோசஃப் கல்லூரியில் தமிழ் பேராசிரியராக இருந்தவராம். எப்போது என்று சரியாக தெரியவில்லை. ஆனால் கோனார் நோட்ஸ் எண்பதுகளின் முற்பாதி வரைக்குமாவது பயன்படுத்தப்பட்டது என்று தெரியும். விகடனின் வார்த்தைகளில்:
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்! மாணவர்களுக்குக் கல்வியறிவோடு ஒழுக்கத்தையும் போதித்து அவர்களை நல்லதொரு குடிமகனாக வளர்த்தெடுக்கும் ஆசிரியர்கள்தான் வருங்கால சமுதாயத்தின் ஆணி வேர். அப்படித் தன்னலமற்ற சேவை மனப்பான்மையோடு கல்விப் பணி ஆற்றிய ஆசிரியர்களை அடையாளம் கண்டு அவர்களை ‘ஆசிரிய ரத்தினங்கள்’ என்னும் தலைப்பில் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது விகடன். அவர்களைக் கோட்டுச் சித்திரமாக வரைந்து நம் முன்னே கொண்டு நிறுத்தியவர் இறையருள் ஓவியர் சில்பி. இங்கே படத்தில் இருக்கும் ஆசிரிய ரத்தினம் திரு. ஐயன் பெருமாள் கோனார். திருச்சி ஜோஸப் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர். இவர் கொண்டு வந்ததுதான் பிரபல ‘கோனார் நோட்ஸ்’.
எழுத்தாளர் சுஜாதாவுக்கு இவர்தான் காலேஜில் தமிழ் ப்ரொஃபசர். தனக்கு தமிழார்வம் அதிகரிக்க ஐயம்பெருமாள் கோனார் முக்கிய காரணம் என்று சுஜாதா குறிப்பிட்டிருக்கிறார்.
கோனாரின் ஓவியம் இங்கே.
கோனார் நோட்சை பதிப்பித்தவர்கள் பழனியப்பா பிரதர்ஸ் என்று கிங் விஸ்வா தகவல் தருகிறார்.
தொகுக்கப்பட்ட பக்கம்: படிப்பு
தொடர்புடைய பதிவுகள்:
சுஜாதா வாழ்க்கை குறிப்பு – முரளிகிருஷ்ணனின் தளத்திலிருந்து