சில நாட்கள் கழித்து, அவரது தம்பி எனக்கு ஒரு மெயில் அனுப்பியிருந்தார். கோயிலில் அவர்கள் என்ன பேசிக்கொண்டார்கள் என்பதன் விவரம் அதில் இருந்தது. அதன் சாரம் பின்வருமாறு…
‘… ஸ்ரீரங்கமும் ஸ்ரீரங்கம் பெரிய பெருமாளாகிய நம்பெருமாளைச் சேவிக்கும்போதும், நம்மை ஒருவித பரவசமான மனநிலைக்கு ஏன் ஆட்படுத்துகின்றன என்று அந்த உணர்வுக்கான காரணத்தைக் கண்டுபிடிக்கப் பல சமயம் நினைத்தது உண்டு. மற்ற திவ்ய தேசங்களில் இல்லாமல், ஏன் ஸ்ரீரங்கத்தில் மட்டும் இத்தகைய உணர்வு வருகிறது என்று நானும் என் சகோதரனும் (ரங்கராஜன்) அன்று பேசிக்கொண்டோம். யாதும் ஊரே என்றாலும், சொந்த ஊர் ஏன் நம்மை நெகிழவைக்கிறது? பிறப்பணுவிலேயே சொந்த ஊர், மொழி உணர்வு எல்லாம் வந்துவிடுகிறதோ?

அதற்கான காரணம், ‘இந்தப் பெருமாளைச் சேவிக்கும்போது, நம் தாய் – தந்தையர், பாட்டனார், முப்பாட்டனார்களை இந்தப் பெருமாளின் மூலம் பார்க்கிறோம்’ என்பதை அன்று உணர்ந்தோம். அவர்கள் பலப் பல வருடங்களாக இந்தப் பெருமாளின் முக விலாசத்தைப் பார்த்துப் பார்த்து இவனையே சிந்தித்து வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் இவனுள்ளேயே வாழ்கிறார்கள்; இவன் பாதங்களையே சென்றடைந்திருக்கிறார்கள்; நம் வாழ்வுக்கு ஓர் இடைவெளியற்ற தொடர்பை இவனே ஏற்படுத்திக் கொடுக்கிறான். கோயில் தூண்கள் சிலவற்றைத் தொட்டுக்கொண்டு, நம் முன்னோர்கள் கால்வைத்து ஏறிய படிகள் மீது நடந்துகொண்டு நாங்கள் இவரும் இந்தக் கருத்தைப் பரிமாறிக்கொண்டோம். அப்போது எங்கள் முன்னோர்கள் தங்களின் குழந்தைகளைப் பார்ப்பது மாதிரி உணர்ந்தோம். பெருமாளை நன்றாகச் சேவிக்கும்போது அந்த திவ்யமங்கள ரூபத்தில் எங்கள் தாய் – தந்தையரைப் பார்க்கும்படியும் ரங்கராஜனிடம் சொன்னேன். அவனும் ‘ஆம், அதுதான் உண்மை’ என்று ஆமோதித்தான். அந்த உண்மையை அறிந்ததால்தான் இங்கு வந்து பெற்றோருடன் நெருக்கமாக இருக்கும் ஆர்வம் மேலோங்கியதாகச் சொன்னான்.

சுஜாதாவுடன் ஸ்ரீரங்கம் போன கதையை தேசிகன் எழுதி இருந்தார். இந்த வரிகள் மனதை தொட்டன. சாமி பூதம் எல்லாம் உண்மையில் ஆசாமிதான் – நம் பாட்டன் முப்பாட்டன்தான்!

இதற்கு மேலும் எழுதி மனதில் இருக்கும் நெகிழ்ச்சிக்கு கோனார் நோட்ஸ் போட விருப்பம் இல்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: படிப்பு

தொடர்புடைய பதிவு: சுஜாதாவுடன் ஸ்ரீரங்கம் போன நிகழ்ச்சி

Advertisements