சுஜாதாதேசிகன்
ரங்கராஜனும் ரங்கநாதனும்!
சுஜாதாவின் ஸ்ரீரங்கத்தில்…
.

‘குறை ஒன்றும் இல்லாத
கோவிந்தா உன் தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது;’

(ஆண்டாள் அருளிய திருப்பாவை – 28)

ந்த வரிகளுக்கு எளிய விளக்கம்: ‘எந்தக் குறையும் இல்லாத கோவிந்தா; நமக்குள் உண் டான உறவு… உன்னாலோ, எங்களாலோ ஒழிக்க முடியாதது’.

சின்ன வயதில் அப்பாவுடன் ஸ்ரீரங்கம் கோயிலுக்குப் போகும்போது, கோயில் தூண்களை அப்பா தொட்டுப் பார்த்துக்கொண்டே வருவார். ஒருநாள் அவரிடம் அதுபற்றிக் கேட்டபோது, ‘இந்தத் தூண்களை திருமங்கையாழ்வார் தொட்டுப் பார்த்திருப்பார்; அவர் தொட்ட தூண்களை நானும் தொடுகிறேன். நீயும் தொட்டுப் பார்’ என் பார்.

அந்த வயதில், அவர் சொன்னது பெரிய விஷயமாகப் படவில்லை, அல்லது அதில் பொதிந்துள்ள அர்த்தத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.
‘எப்படியாவது என்னை ஸ்ரீரங்கம் அழைச்சுண்டு போயிடு. என் பிறந்த நாளைக்கு அங்கே போனா நன்னா இருக்கும். முடியுமா?’ என்று என்னி டம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சுஜாதா கேட்டார்.

ஒவ்வொரு வாரமும் அவரைப் பார்க்கும்போதும், ‘இந்த வாரம் டிக்கெட் இருக்கா பார்’ என்று கேட்பார். ‘நிச்சயம் போகலாம்’ என்று சொல்லியும், அவர் பிறந்த நாளன்று போக முடியாமல், மே மாதம் கடைசி வியாழக்கிழமை (31 மே, 2007) அன்றுதான் எங்களால் போக முடிந்தது.

முதல்முறை ரயிலில் போகும் குழந்தைபோல் ஆர்வமாக இருந்தார். அன்று எங்கள் ராசி ஒரு மார்க்கமாக இருந்ததால், ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸில் எல்லாம் ஒரு ‘சைடாக’க் கிடைத்தது. ‘சைடு அப்பர்’, ‘சைடு லோயர்’. ஐந்து அடி ஆறு அங்குலம் இருக்கும் எனக்கே முழுதாக நீட்டிப்படுத்தால், சைடு பர்த்தில் கால் கட்டை விரல் மடங்கும். சுஜாதாவுக்கு? ‘சார், வேணும்னா வேற யார்கிட்டயாவது கேட்டு பர்த் மாத்தித் தர்றேன்’ என்றேன். ‘வேண்டாம், இதுவே ரொம்ப கம்ஃபர்டபிளா இருக்கு’ என்று காலை மடக்கிவைத்துப் படுத்துக்கொண்டார்.

டிக்கெட் பரிசோதிக்க வந்தவரிடம், ‘ஸ்ரீரங்கம் எத்தனை மணிக்கு வரும்… எங்களைக் கொஞ்சம் எழுப்பிவிட்டுடுங்க’ என்றார். ‘ரொம்பக் குளிருமோ?’ என்று ரயில்வே கொடுத்த போர்வையைப் பார்த்ததும் சிரித்துக்கொண்டே கேட்டார். ‘கால் முழங்கால் வரைக்கும் போர்த்திவிடு, குளிரித்துனா இழுத்துக்கறேன்’ என்றவர் தூங்கிப் போனார்.

ஏதோ நினைப்பில் இருந்த டிக்கெட் பரிசோதகர், சிறிது தூரம் சென்று திரும்பிப் பார்த்தார். சுஜாதா தூங்கிய பின் என்னிடம் வந்து, ‘இவர்தானே மிஸ்டர் சுஜாதா?’ என்று கேட்டுச் சென்றார். அவர் பார்வையில், ‘அடடே, அவரிடம் கொஞ்சம் பேசியிருக்கலாமே’ என்ற ஏக்கம்தெரிந் தது.

ஸ்ரீரங்கத்தில் காலை 5 மணிக்கு முன்பு இறங்கியவுடன், சுஜாதா உற்சா கமும் சந்தோஷமுமாக, ‘கோயிலுக்கு வெயிலுக்கு முன்னாடி போயிட்டு வந்துடலாம்’ என்றார்.

காலை, ஸ்ரீரங்கம் கோயிலுக்கு அவர் தம்பியுடன் (எஸ்.ராஜகோபாலன்) கிளம்பினோம். போகும் முன், ‘எனக்குக் கொஞ்சம் இட்டுவிடு’ என்று தன் தம்பியிடம் கேட்டு, நெற்றியில் ஸ்ரீசூர்ணம் இட்டுக்கொண்டு புறப்பட்டார்.
‘வெறும் கால்ல நடந்தா எரியும், கோயில் உள்ளே சாக்ஸ் போட்டுக்கலாமா?’

உள் ஆண்டாள் சந்நிதிக்கு வெளியே இருக்கும் வேணுகோபாலன் சந்நிதியில் வெளிப்புறச் சிற்பங்களைப் பார்த்தார். ‘நம்ம ……. இருக்கானே அவன் எப்பவும் இது பக்கத்திலேயேதான் இருப்பான். அவன் இப்ப எங்கேடா?’ என்று தம்பியிடம் கேட்டார். பழைய நினைவுகள்…

‘இங்கதான் கார்த்திகைக்கு சொக்கப்பனை கொளுத்துவாங்க… இங்கேதான் ஸ்ரீஜெயந்தி உறியடி உற்சவம் நடக்கும்… எவ்வளவு தடவை இந்தக் கோயிலைச் சுத்தியிருக்கோம்!’

அவருடைய உடல் கொஞ்சம் தளர்ந்திருந்த காரணத்தால், சிறிது நடந்த பின் ஆங்காங்கே சற்று நேரம் உட்கார்ந்துகொண்டார். அவர் அப்படி உட்காரும்போதெல்லாம் எங்களுக்கு அவருடன் பேச வாய்ப்புக் கிடைத்தது. கருட மண்டபத்தில் உட்கார்ந்து, வேடிக்கை பார்த்தபடி பேசிக்கொண்டு இருந்தார். எல்லாம் பழைய நினைவுகள்.

கோயிலுக்குள் பெருமாளைச் சேவிக்க நெருங்கும்போது அவர் முகத்தில் ஒருவிதமான மகிழ்ச்சி கலந்த பரபரப்பு இருந்தது. சேவித்துவிட்டு வெளியே வந்தபோது, என் தோளை அழுத்திவிட்டு, ‘எப்படியோ பெருமாள்ட்ட என்னைக் கொண்டுவந்து சேர்த்துட்டேப்பா!’ என்றபோது அவர் கண்களின் ஓரத்தில் நீர் கசிந்திருந்ததைக் கவனிக்க முடிந்தது.

பின்பு தாயார் சந்நிதியிலும் சேவித்துவிட்டு வெளியே கொஞ்சம் நேரம் உட்கார்ந்துகொண்டார். ‘நீங்களும் உங்க தம்பியும் கொஞ்சம் நேரம் பேசிண்டு இருங்க. நான் இருந்தா பெர்சனலாப் பேச முடியாது. நான் இப்படியே ஒரு ரவுண்ட் போய்ட்டு வரேன்’ என்று கிளம்பினேன்.

‘நீங்க இருந்தா பரவாயில்ல தேசிகன்.’

‘இல்ல சார், நீங்க பேசிண்டு இருங்க. நான் மேட்டு அழகியசிங்கர் சந்நிதிக்குப் போய்ட்டு வரேன். அங்க ஓவியங்கள் நன்னா இருக்கும்.’

நான் போய் அவற்றை என் டிஜிட்டல் கேமராவில் கவர்ந்துகொண்டு வந்து காண்பித்தேன். ஆர்வமாகப் பார்த்தார்.

‘சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்ட கோயில் பெரியவாச்சான்பிள்ளை உபன்யாசங்கள் செய்ய முதுகு சாய்த்த மண்டபத்தின் முன் மேட்டு அழகியசிங்கர் சந்நிதியில் உள்ள பழங்காலச் சுவர்ச் சித்திரங்களை தேசிகன் படம் எடுத்து, டிஜிட்டலில் உடனே காட்டினார். வடக்கு உத்தர வீதியில் எங்கள் ஆச்சார்யன் சிறுபலியூர் அண்ணன் சுவாமிகளுக்குத் தண்டம் சமர்ப்பித்துவிட்டு, தாத்தாச்சாரியார் தோட்டத்து ‘இமாம் பசந்த்’தைப் பாதிக் கதுப்பு ருசித்துவிட்டு, தம்பி ராஜகோபாலனின் புத்தகங்களில் ‘கோயில் ஒழுகு’

பகுதி-3, கேரன் ஆர்ம்ஸ்ட்ராங்கின்

‘A History of God’ இரண்டை மட்டும் கவர்ந்துகொண்டு, அடுத்து அரங்கன் எப்போது அழைக்கப்போகிறான் என்பது தெரியாமல், மறுதினம் பல்லவன் எக்ஸ்பிரஸில் திரும்பினேன்’ என்று ‘கற்றதும் பெற்றதும்’ எழுதியிருந்தார்.

ஒன்பது மாதங்கள் (பிப். 27, 2008) கழித்து ஆச்சார்யன் திருவடிகளை அடைந்தார்.

சில நாட்கள் கழித்து, அவரது தம்பி எனக்கு ஒரு மெயில் அனுப்பியிருந்தார். கோயிலில் அவர்கள் என்ன பேசிக்கொண்டார்கள் என்பதன் விவரம் அதில் இருந்தது. அதன் சாரம் பின்வருமாறு…

‘… ஸ்ரீரங்கமும் ஸ்ரீரங்கம் பெரிய பெருமாளாகிய நம்பெருமாளைச் சேவிக்கும்போதும், நம்மை ஒருவித பரவசமான மனநிலைக்கு ஏன் ஆட்படுத்துகின்றன என்று அந்த உணர்வுக்கான காரணத்தைக் கண்டுபிடிக்கப் பல சமயம் நினைத்தது உண்டு. மற்ற திவ்ய தேசங்களில் இல்லாமல், ஏன் ஸ்ரீரங்கத்தில் மட்டும் இத்தகைய உணர்வு வருகிறது என்று நானும் என் சகோதரனும் (ரங்கராஜன்) அன்று பேசிக்கொண்டோம். யாதும் ஊரே என்றாலும், சொந்த ஊர் ஏன் நம்மை நெகிழவைக்கிறது? பிறப்பணுவிலேயே சொந்த ஊர், மொழி உணர்வு எல்லாம் வந்துவிடுகிறதோ?

அதற்கான காரணம், ‘இந்தப் பெருமாளைச் சேவிக்கும்போது, நம் தாய் – தந்தையர், பாட்டனார், முப்பாட்டனார்களை இந்தப் பெருமாளின் மூலம் பார்க்கிறோம்’ என்பதை அன்று உணர்ந்தோம். அவர்கள் பலப் பல வருடங்களாக இந்தப் பெருமாளின் முக விலாசத்தைப் பார்த்துப் பார்த்து இவனையே சிந்தித்து வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் இவனுள்ளேயே வாழ்கிறார்கள்; இவன் பாதங்களையே சென்றடைந்திருக்கிறார்கள்; நம் வாழ்வுக்கு ஓர் இடைவெளியற்ற தொடர்பை இவனே ஏற்படுத்திக் கொடுக்கிறான். கோயில் தூண்கள் சிலவற்றைத் தொட்டுக்கொண்டு, நம் முன்னோர்கள் கால்வைத்து ஏறிய படிகள் மீது நடந்துகொண்டு நாங்கள் இவரும் இந்தக் கருத்தைப் பரிமாறிக்கொண்டோம். அப்போது எங்கள் முன்னோர்கள் தங்களின் குழந்தைகளைப் பார்ப்பது மாதிரி உணர்ந்தோம். பெருமாளை நன்றாகச் சேவிக்கும்போது அந்த திவ்யமங்கள ரூபத்தில் எங்கள் தாய் – தந்தையரைப் பார்க்கும்படியும் ரங்கராஜனிடம் சொன்னேன். அவனும் ‘ஆம், அதுதான் உண்மை’ என்று ஆமோதித்தான். அந்த உண்மையை அறிந்ததால்தான் இங்கு வந்து பெற்றோருடன் நெருக்கமாக இருக்கும் ஆர்வம் மேலோங்கியதாகச் சொன் னான்.

அவன் உயிருடன் இருக்கும் வரை அந்த ஆசையைப் பூர்த்திசெய்துகொள்ள இயலவில்லை; ஆனால், தற்போது அவனது ஆத்மாவும் ரங்கநாதனுடன் ஐக்கியமாகிவிட்டது!’ என்று கடிதத்தை முடித்திருந்தார்.

இப்போதெல்லாம் ஸ்ரீரங்கம் சென்று நம்பெருமாளைச் சேவிக்கும்போது, என் அப்பாவையும் ஸ்ரீரங்கம் எஸ்.ஆர். என்கிற சுஜாதா ரங்கராஜனையும் பார்க்க முடிகிறது.

ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு மற்றொரு பெயர் ரங்க ராஜன்!