நிறமற்ற வானவில்

உலகில் எப்படிப்பட்ட இழப்பை சந்தித்த மனிதனும் வாழ்வதற்கு நியாயமான காரணங்கள் பல இருக்கின்றன என்பதை அழுத்தம் திருத்தமாக இந்த நாவலில் முன் வைக்கிறார் சுஜாதா. சந்தோஷம், துக்கம், பரவசம் என்று எந்த மாதிரியான உணர்ச்சிகளையெல்லாம் இக்கதையின் நாயகன் அனுபவிக்கிறானோ அது நம்மையும் தொற்றிக் கொள்கிறது. நாவலைப் படிக்கப் படிக்க அடுத்து அவனுக்கு என்ன ஆகுமோ என்ற பதைபதைப்பு ஏற்படுகிறது.

எதிர்பாராது ஏற்பட்ட விபத்தில் அன்பு மனைவியையும், அருமைக் குழந்தையையும் இழந்து தவிக்கும் தந்தையின் பேதலித்த மனதை உயிர்த் துடிப்புடன் சித்தரித்துக் காட்டுகிறது.

இந்த உலகில் விபத்துக்களுக்குப் பஞ்சமில்லை. கணவனை இழந்த மனைவி; தாய் தந்தையை இழந்த குழந்தைகள்; அனாதையாக விடப்பட்ட முதியோர்கள்; இவர்களுக்கெல்லாம் என்ன சொல்லி எப்படித் தேற்ற முடியும் ?

எல்லாவற்றையும் விட விபரீதமானது தற்கொலை எண்ணம்!  உளவியல் ஆய்வாளர்கள் கருத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த நாவலை சுஜாதா அழகாக முடித்துள்ளார்.

எந்தத் துயர் வந்தாலும் வாழக் கற்றுக் கொள்ளுங்கள். வாழ்வது நமக்காக மட்டுமல்ல. பிறரை வாழ்விக்க. அதில் உள்ள மகிழ்ச்சிக்கு எல்லை கிடையாது! அதில் இன்பம் கண்டு மீண்டும் வாழ முற்படுகிறார் சுஜாதாவின் கதாநாயகர்.

இனி இந்த நாவலில் இருந்து சில பகுதிகள்…

மணவாளன் உள்ளே வந்தபோது கூடவே ஒரு தாடிக்காரரும் வந்தார். நல்ல கருமையான தாடி, வனப்பான கண்கள்.

“மூர்த்தி இவர் ராம்தாஸ். கேள்விப்பட்டிருப்பியே? ‘தி ஸ்பிரிட் ஆப் மேன்’னு  ஒரு புஸ்தகம் எழுதி அமெரிக்காவில் பரபரப்பா வித்திருக்கு.”

“அப்படியா? உங்களுக்கு எந்த ஊர் ?”

“கலிபோர்னியா” என்றார்.

“வாட் ஆர் யு ?”

“ஐ எம் எ சீக்கர்.”

“வாட் டு யு சீக் ?”

“உண்மையை”

“நைஸ்.”

அவர் தெளிவான சற்றே மலையாள உச்சரிப்புடன் ஆங்கிலம் பேசினார்.

“உங்க இழப்பைப் பற்றி மணவாளன் சொன்னார். உங்கள் வருத்தத்தை என்னால் பங்கிட்டுக் கொள்ள முடியாது. மிக நெருக்கமானவர்கள் மரணத்தில் தான், நமக்கு உண்மையான தரிசனம் கிடைக்கிறது. தினம் தினம் பல பேர் இறக்கிறார்கள். அந்தச் சாவெல்லாம் நம்மைப் பாதிப்பதில்லை.

‘மரணம் – கடவுளுக்கு வாசல்’ என்று ரஜனீஷ் சொல்லியிருக்கிறார். மனிதனால் இதுவரை களங்கப்படாத ஒரே ஒரு சங்கதி மரணம். அதை அவன் இன்னமும் கொச்சைப்படுத்தவில்லை. கொச்சைப்படுத்தவும் முடியாது. அது துல்லியமானது. அதை அவனால் அறியவே முடியாது. அதை அவனால் ஒரு விஞ்ஞானமாகவோ, வேதாந்தமாகவோ மாற்றமுடியாது. அது அவன் கைப்பிடியிலிருந்து எப்போதும் வழுக்கிச் செல்கிறது. உங்கள் வாழ்வில் எதிர்பாராமல் மரணம் குறுக்கிடும்போது உங்கள் வாழ்வு அர்த்தமற்றதாகிறது. ஆம், வாழ்வு அர்த்தமற்றதுதான். ஒவ்வொருவரும் கொஞ்சம் இறக்கிறோம்.”

கிருஷ்ணமூர்த்திக்கு அவர் சொல்கிற விஷயங்களின் அர்த்தத்தை விட, குரலின் நிதானம் மனத்தை ஈர்த்தது.

——————————-

ராத்திரி இருட்டினதும், அந்த பிளாட்டுக்குச் சென்றான். மேஜை மேல் புத்தகத்தைப் பார்த்தான். ஜே. கிருஷ்ணமூர்த்தி சொற்பொழிவுகள், லயால் வாட்சனின் ‘தி பயாலஜி ஆப்  டெத்”…

“சாவைப் பத்தி நிறைய படிப்பீங்க போல. ரஜனீஷ் புத்தகம் கூட  பார்த்தேன்.”

“போன வருஷம் முழுக்கச் சாவைப் பத்திதான் படிச்சேன்.”

“ஏதாவது புரிஞ்சுதா?”

“புரியறதுக்கு ஏதும் இல்லை. சாவுங்கறதே ஒரு முடிவு இல்லை. ஒரு தொடர்ச்சிதானாம். நம்ம உடம்பில் அறுநூறு கோடி செல் உயிரணுக்கள் இருக்கு. ஒவ்வொரு இருபத்துநாலு மணி நேரமும் அதில ஒரு பகுதி செத்துக்கிட்டே இருக்கு. முப்பது வயசுக்கப்புறம் நம்முடைய மூளை வருஷத்துக்கு ஒரு பர்சென்ட் செத்துக்கிட்டு இருக்காம். கொஞ்சம் கொஞ்சமா, செதில் செதிலா அழிஞ்சுண்டு வர்றோம். அதனால நாம எப்போ சாகறோம், எப்போ உயிரோட இருக்கோம்கிறதே சரியா சொல்ல முடியாது.  பிறந்த நிமிஷத்திலிருந்து இறந்து கொண்டே இருக்கோம்.”

“அதனால?”

“இறந்து போயிட்டாங்கன்னு சொல்றதில அர்த்தமேயில்லை.”

“எப்படி?”

“நம்ம மனசிலே அவங்களைப் பத்திய நினைப்புகள் இருக்கிற வரைக்கும் தே டோன்ட் டை!”

Advertisements