ஜெயந்தன்

ஜெயந்தன்

ஜெயந்தன் என்ற பெயர் எழுபது எண்பதுகளில் ஓரளவு பிரபலம். வாரப் பத்திரிகைகளில் எழுதுவார். சூப்பர்ஸ்டார் எல்லாம் இல்லை. ஆனால் மணியன் மாதிரி ஒன்றுமில்லாத எழுத்தும் இல்லை. அவர் எழுத்தில் ஒரு தார்மீக கோபம் தெரியும். சு. சமுத்திரம் மாதிரி. ஆனால் சு. சமுத்திரம் அளவுக்கு உபதேசம் செய்யும் தொனி இருக்காது. எனக்கு இன்றும் நினைவிருப்பது அவருடைய சில நாடகங்கள்தான். கணக்கன் (இந்த மாதிரிதான் ஏதோ பேர், சரியாக நினைவில்லை) என்ற நாடகம் அந்த வயதில் மிகவும் பிடித்திருந்தது.

அவர் மறைந்த செய்தி ஜெயமோகனின் தளத்தில் தெரியவந்தது. அவரைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்தேன், ஆனால் கணக்கன் நாடகத்தைப் பற்றி ஒரு வரியைத் தவிர வேறு எதுவும் எழுத முடியவில்லை.

என்னிடம் அவருடைய ஒரு புத்தகம் இருந்தது. சம்மதங்கள் என்று பேர். சிறுகதைத் தொகுப்பு. அதை தேடி கண்டுபிடித்து படித்துப் பார்த்தேன். எந்த கதையும் என் சிறந்த தமிழ் சிறுகதைகள் லிஸ்டில் வராது. ஆனால் படிக்கக் கூடிய சிறுகதைகளே. நிச்சயமாக அவர் அளவுக்கு எனக்கு எழுத வராது. (இதில் என்ன ஆச்சரியம்?)

துப்பாக்கி நாயக்கர் என்ற கதையில் நாயக்கர் ஊரில் பெரிய அடிதடி ஆசாமி. அவருக்கு நாலு அடியாள். அவருடைய ஆஸ்தான அடியாள் அவர் பெண்டாட்டி கையைப் பிடித்து இழுத்துவிடுகிறான். பிறகு பயத்தில் தற்கொலை செய்து கொள்கிறான். நாயக்கர் முன்னே நின்று இறுதி சடங்கை நடத்துகிறார்.

வாழ்க்கை ஓடும் என்ற கதையில் குப்பிக் கிழவிக்கும் வள்ளிக்கும் மாமியார் மருமகள் குடுமிப்பிடி சண்டை. புருஷன்காரனோ சண்டையா போடுகிறீர்கள் மூதேவிகளே என்று இரண்டு பேரையும் அடிக்க வருகிறான். உலக மகா யுத்தம் மாதிரி இருக்கிறது. அடுத்த நாள் எல்லாரும் சமாதானம். நல்ல தொழில் திறமை கதையில் தெரிகிறது.

ஒரு ஆசை தலைமுறை தாண்டுகிறது கதை எனக்கு தெரிந்த ஃப்ரேம்வொர்க்கில் எழுதப்பட்டிருக்கிறது. கடைசி வரியில் இரண்டு மூன்று தலைமுறைகளாக கொஞ்சம் நல்ல வீட்டில் வாழ விரும்பும், ஆனால் கட்ட முடியாத கீழ் மத்தியதரக் குடும்பத்தின் வெட்டிக் கனவு சொல்லப்படுகிறது. அதற்கு முன் அதற்கு பெரிய பில்டப் கொடுக்கிறார். எனக்கு இன்னும் பெரிய பில்டப் கொடுக்க வரவில்லை…
இந்த கதையை கி. ராஜநாராயணன் வெகுவாக சிலாகிக்கிறார், வெங்கட்ரமணன் கொடுத்திருக்கும் லிங்கில் பாருங்கள்.

அவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள் இந்த தொகுப்பில் சிறந்த கதை. பெண் “விடுதலை” பேச்சளவில் மட்டுமே இருக்கிறது என்பதை அழகாக எழுதி இருக்கிறார். மச்சினி, மனைவி, கணவன் எல்லாரும் பெண் விடுதலை பற்றி பேசிக் கொண்டே இருக்கிறார்கள். குழந்தை சட்டையில் அசிங்கம் செய்துவிடுகிறது. அதை மனைவிதான் அலசிப் போட வேண்டி இருக்கிறது.

ஜெயந்தன் நன்றாக வந்திருக்கக் கூடியவர். ஆனால் கதைகளில் நமக்கெல்லாம் ஒரு பாடம் இருக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார். பிரச்சார நெடியும், உபதேசமும் குறைந்திருந்தால் இன்னும் நுட்பமான உணர்வுகளை கொண்டு வந்து ஒரு எழுத்தாளராக இன்னும் பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கலாம். ‘நிராயுதபாணியின் ஆயுதங்கள்’ என்ற ஜெயந்தன் கதைகளின் முழுதொகுப்பும் 2008 டிசம்பரில் வம்சி புக்ஸ் வெளியிட்டுள்ளது என்று நதியலை சொல்கிறார். அவரது நாடகங்கள் மறக்கப்படக் கூடாது, அவையும் தொகுப்பாக வெளி வந்தால் நன்றாக இருக்கும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்

தொடர்புடைய பதிவுகள்:
ஜெயந்தன் மறைவு
ஜெயந்தனுக்கு அஞ்சலி – ஒரு சிறுகதை
கி. ராஜநாராயணன் ஜெயந்தனின் சிறுகதையைப் பற்றி
சுரேஷ் கண்ணனின் அஞ்சலி
ஜெயந்தனின் “அவள்’ கதையைப் பற்றி அ. ராமசாமி
எம்.ஏ. சுசீலாவின் அஞ்சலி