பிஸினஸ் பக்கங்கள்!

பத்மஸ்ரீ விருது கிடைத்த குதூகலத்தில் உற்சாகமாக இருக்கிறார் ஆடிட்டர் டி.என்.மனோகரன். இந்திய ஐ.டி. துறையின் எடுத்துக்காட்டாக இருந்த ‘சத்யம் கம்ப்யூட்டர்ஸ்’ நிறுவனம் ஓராண்டுக்கு முன்பு சரிந்த போது, அதைத் தூக்கி நிறுத்தியதில் பெரும்பங்கு மனோ கரனைச் சேரும். ”நான்கு மாதம் இரவு, பகல் என்று பார்க்காமல் உழைத்ததன் விளைவு, இந்தியாவின் மானத்தையும் நற்பெயரையும் சேதாரமில்லாமல் காப்பாற்ற முடிந்தது. எந்தப் பிரதிபலனையும் எதிர் பார்க்காமல் செய்த அந்த வேலைக்குக் கிடைத்த ஒரு பெரிய அங்கீகாரம்தான் இந்த விருது” – அடக்கத்தோடு சொல்கிறார் மனோகரன்.

பத்மஸ்ரீ விருது பெறும் முதல் தென்னிந்திய ஆடிட்டர் இவர் என்பது முதல் முக்கியமான விஷயம். குடியாத் தத்தைச் சேர்ந்த இவர், பச்சையப்பன் கல்லூரியில் பி.காம் படித்தபிறகு ஆடிட்டர் ஆனவர்! இந்தியா முழுக்க எட்டு அலுவலகங்கள், அண்மையில் துபாயில் தொடங்கப்பட்ட புதிய அலுவலகம் என எப்போதும் பிஸியாக இருக்கும் அவரை, சென்னை அபிராமபுரத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தோம். பல்வேறு விஷயங்களைப் பற்றி அவர் பேசினாலும் ‘சத்ய’த்தைச் சுற்றியே பேச்சு திரும்பத் திரும்ப வட்டமடித்துக் கொண்டிருந்தது.

”வெளிநாடுகளில் ஒரு பெரிய நிறுவனம் திடீரென திவாலானால், ஒன்று அதை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும். இல்லாவிட்டால், ஒழியட்டும் என்று அப்படியே விட்டுவிடும். ஆனால் நம் இந்திய அரசாங்கம்

இந்த இரண்டையும் செய்யாமல் ஆறு பேர் கொண்ட குழுவை (அதில் நானும் ஒருவன்!) நியமித்து, அந்த நிறுவனத்தை மீண்டும் சரிபடுத்தித் தரச் சொன்னது. எங்கள் ஆறு பேருக்கும் ஏற்கெனவே நிறைய வேலைகள் இருந்தாலும், ஒரு தேச சேவையாக நினைத்தே அந்த வேலையைச் செய்தோம். இந்த வேலைக்காக ஒரு ரூபாய்கூட நாங்கள் சம்பளம் வாங்கவில்லை. ஓய்வின்றி உழைத்ததில் 10 பாடங்களையும் கற்றுக்கொள்ள முடிந்தது. இதன்படி நடந்தால் நாம் எந்தச் சிக்கலிலும் மாட்ட மாட்டோம்” என்றார் அவர். அந்த 10 பாடங்கள் இதோ…

இன்டிபென்டன்ட் டைரக்டர்களுக்கு தைரியம் தேவை!

ஒரு நிறுவனம் சரியாகச் செயல்படுகிறதா என்பதை பலரும் கவனமாகக் கண்காணிக்க வேண்டும் என்றாலும், போர்டு உறுப்பினர்களுக்கே இதில் முக்கியப் பொறுப்பு இருக்கிறது. பெரும்பாலான நிறுவனங்களில் அதன் சொந்தக்காரர்களே போர்டின் தலைவராகவும் மற்ற முக்கியப் பதவிகளிலும் இருக்கின்றனர். அவர்கள் தவறு செய்தால் அதை மற்ற போர்டு உறுப்பினர்கள் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகின்றனர். ஆனால் அந்த நிறுவனத்தோடு எந்த வகையிலும் சம்பந்தப்படாத ‘இன்டிபென்டன்ட் டைரக்டர்கள்’ அதைக் கட்டாயம் தட்டிக் கேட்கவேண்டும்.

அதற்குத் தேவையான தைரியமும் விஷயஞானமும் விழிப்புணர்வும் அவர்களுக்கு வேண்டும். ‘சத்யம்’ வீழ்ச்சிக்குப் பிறகு இன்டிபென்டன்ட் டைரக்டர்களின் பொறுப்பு கணிசமாகவே உயர்ந்திருக்கிறது. இனிவரும் காலத்திலாவது எந்த கணக்கைக் காட்டினாலும் அது எந்த அளவுக்கு சரி, தவறு என்பதை ‘இன்டிபென்டன்ட் டைரக்டர்கள்’ கேள்வி கேட்கவேண்டும். அப்படிப்பட்டவர்கள் போர்டில் அவசியம் இருக்கிற மாதிரி அந்த போர்டை அமைக்கவேண்டும்.

‘ஆடிட் கமிட்டி’க்கு சுதந்திரம் வேண்டும்!

ஒரு நிறுவனம் சரியாகச் செயல்படுகிறதா என்பதை சரிபார்க்கும் வேலை ‘ஆடிட் கமிட்டி’யைச் சேர்ந்தது. என்ன செலவு செய்கிறோம், அதை எதற்காகச் செய்கிறோம்? இந்த செலவு முறையானதுதானா? அங்கீகரிக்கப்பட்டதா? இப்படி பல கேள்விகளைக் கேட்கக்கூடிய சுதந்திரம் ‘இன்டர்னல் ஆடிட் கமிட்டி’க்கு அளிக்கவேண்டும். அவர்கள் வேலையை சுதந்திரமாகச் செய்யவிட்டாலே போதும், சிறு தவறைக்கூட ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துச் சொல்லிவிடுவார்கள். ஆனால், ‘தவறுகளைக் கண்டுகொள்ளாதீர்கள்’ என்று நீங்கள் கட்டளை யிட்டால், அப்படி ஒரு கமிட்டி இருந்தும் எந்தப் பயனும் இல்லாமல் போய்விடும்.

‘ஆடிட்டிங்’ நிறுவனங்களே பொறுப்பு!

ஒரு நிறுவனத்தில் மிகப்பெரிய மோசடி நடந்திருக்கிறது எனில், அதற்கான பொறுப்பை அந்த நிறுவனத்தின் கணக்கு -வழக்குகளைச் சரிபார்த்த ஆடிட்டிங் நிறுவனமே ஏற்றுக் கொள்ளவேண்டும். ஆடிட்டிங் என்று வரும்போது என்னென்ன விஷயங்களைச் சரிபார்க்கவேண்டும் என்று ஒரு செக்லிஸ்ட் வைத்துக் கொண்டு சரிபார்த்தால் மட்டும் போதாது. ஒவ்வொரு வரவையும் செலவையும் முறையாக, நேர்மை யாகச் செய்திருக்கிறார்களா என்று ஆராய்ந்து பார்த்துவிட்டுத்தான் கையெழுத்திட வேண்டும். காரணம், எல்லா முதலீட்டாளர்களாலும் ஒரு நிறுவனத்தின் கணக்கு -வழக்குகளை நேரடியாகப் பார்க்கமுடியாது. அவர்கள் ‘ஆடிட்டிங்’ நிறுவனத்தின் கையெழுத்தை நம்பியே அதில் முதலீடு செய்கின்றனர். முதலீட்டாளர்களின் அந்த நம்பிக்கைக்கு ஆடிட்டிங் நிறுவனங்கள் ஒருபோதும் துரோகம் செய்யக்கூடாது.

‘இன்டர்னல் ஆடிட்’டை வெளியே கொடுக்கலாம்!

‘இன்டர்னல் ஆடிட் கமிட்டி’யில் இருக்கும் ஊழியர்கள் அந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களால் கணக்கு-வழக்குகளை நேர்மையாக, சரியாகப் பார்க்க முடிவதில்லை. அதிகாரத்தில் இருப்பவர்கள் என்ன சொல்கிறார்களோ, அதன்படி கணக்கை முடித்துக் கொடுத்துவிடுகின்றனர். இந்தப் பிரச்னையைத் தவிர்க்க, ‘இன்டர்னல் ஆடிட்’ வேலையை வெளியில் இருக்கும் வேறு ஒரு ஆடிட் நிறுவனத்திடம் கொடுத்து செய்யச் சொல்லலாம். இதனால் ரகசியம் கசிந்துவிடும் என்று பயப்படத் தேவையில்லை. முக்கியமான தகவல்களை மட்டும் வைத்துக் கொண்டு, மீதமுள்ள வேலையை தாராளமாக வெளியே கொடுக்கலாமே!

தவறை சுட்டிக் காட்டினால் பாதுகாப்பு!

‘விசில் ப்ளோயர் பாலிசி’ என்று ஒரு கொள்கை உண்டு. ஒரு நிறுவனத்தில் யார் தவறு செய்தாலும் அதை விசாரிப்பதுதான் இந்த பாலிசி. ஒரு நிறுவனத்தில் தவறு நடக்கிறது என்பதை யாரிடம் சொல்வது என்பதுதான் இப்போதிருக்கும் மிகப் பெரிய பிரச்னை. காரணம், யாரோ தவறு செய்தால் நிறுவனத்தின் தலைவரிடம் புகார் செய்யலாம். ஆனால் அந்த நிறுவனத்தின் தலைவரே தவறு செய்தால், அதை யார் விசாரிப்பது? என்கிற மாதிரியான கேள்விக்கு புதிய விதிமுறைகளை உருவாக்கலாம். இந்த விசில் ப்ளோயர் பாலிசியை இன்னும் பலப்படுத்துவதன் மூலம் நிறுவனங்களை சரியான பாதையில் கொண்டு செல்லலாம்.

திறமையான ஊழியர்களே சொத்து!

ஒரு நிறுவனத்தின் கஸ்டமர்கள் மாறலாம். முதலாளி கள்கூட மாறலாம். ஆனால் திறமையான ஊழியர்கள் இருந்தால் அந்த நிறுவனம் எந்த காலத்திலும் விழாது. சத்யம் நிறுவனத்தின் திறமையான ஊழியர்கள் பலர் வேறு எங்கும் ஓடிவிடாமல் தொடர்ந்து இதே நிறுவனத்தில் இருந்ததால் அந்த நிறுவனத்தை இவ்வளவு குறைவான காலத்துக்குள் சேதாரமில்லாமல் மீட்டுக் கொண்டுவர முடிந்தது.

எதிர்பாராததை எதிர்பாருங்கள்!

வாழ்க்கையில் எப்போதும் பாசிட்டிவாக இருப்பது நல்லதுதான். ஆனால் கொஞ்சம் நெகட்டிவாக யோசிப்பதும் அவசியம். அப்படி யோசிப்பதன் மூலம் எதிர்காலத்தில் நடக்கப் போகும் மிகப் பெரிய அசம்பாவிதத்திலிருந்து உங்களை தப்பிக்க வைத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள்.

நோக்கம் மட்டுமல்ல,
வழியும் நேர்மையாக இருக்கவேண்டும்!

உழைப்பால், உயர்ந்த சிந்தனையால், தொலை நோக்கால் மிக உயர்ந்த இடத்தை அடையமுடியும். ஆனால் வெற்றி அடைய வேண்டும் என்கிற வெறியின் காரணமாக தவறான பாதையைத் தேர்வு செய்தால் மிகப் பெரிய வீழ்ச்சியைச் சந்தித்தே ஆகவேண்டும். எனவே நீதி, நேர்மை போன்ற விஷயங்களை எந்தக் காலத்திலும் ஒதுக்கி வைத்துவிடாதீர்கள்.

பேராசை, வேண்டவே வேண்டாம்!

ஆசை நாசம் செய்யும். பேராசை சர்வநாசம் செய்யும். உங்களுக்கு வேண்டியதெல்லாம் கிடைக்கும் என்கிறபோது கிடைப்பதெல்லாம் உங்களுக்கானதாக ஏன் ஆக்கிக்கொள்ள நினைக்கிறீர்கள்? இந்த பேராசை, சொந்தபந்தத்தில் ஆரம்பித்து சொத்து சேர்ப்பது வரை எப்படி வேண்டுமானாலும் உருவாகலாம். அதை உருவான நிமிஷத்திலேயே கிள்ளி எறிந்தால் மட்டுமே நம்மால் நிலைத்து நிற்கமுடியும்.

முயன்றால் முடியாதது இல்லை!

‘சத்யம்’ நிறுவனத்தை சிக்கலிலிருந்து காப்பாற்றும் வேலையில் இறங்கியபோது, ‘உங்களுக்கு எதுக்கு சார் இந்த வேண்டாத வேலை’ என்றனர் சிலர். ஆனால், 50 ஆயிரம் குடும்பங்கள், பல கோடி முதலீட்டாளர்கள், எல்லாவற்றுக்கும் மேலாக நம் இந்திய நாட்டின் மானத்தையும் நற்பெயரையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே இந்த வேலையை ஏற்றுக் கொண்டோம். சுயநலமற்ற எங்கள் லட்சியத்தையும், அவ்வளவு சீக்கிரம் நாங்கள் விழுந்துவிட மாட்டோம் என்கிற முயற்சியையும் கண்ட வெளிநாட்டு கஸ்டமர்கள், எங்களுக்கு முழுஆதரவு தந்தனர். அதனோடு சத்யம் ஊழியர்களின் ஆதரவும் சேர, அந்த வேலையை நூறு சதவிகிதம் சரியாக முடிக்க முடிந்தது.”

Advertisements