இந்திரா பார்த்தசாரதி

இந்திரா பார்த்தசாரதி

நான் இ.பா.வை ரசிப்பவன் இல்லை. அவரது நாவல்களில் எல்லாரும் பேசுகிறார்கள், பேசுகிறார்கள், பேசிக் கொண்டே இருக்கிறார்கள். எல்லா நாவல்களிலும் ஒரு “அறிவுஜீவியின்” கோணம்தான், அதுவும் டெல்லியில் வாழும் ஒரு தமிழ் பிராமண “அறிவு ஜீவி” கோணம் மட்டுமே. இதில் நகைச்சுவை என்கிறார்கள், அங்கதம் என்கிறார்கள் எனக்கென்னவோ இதை விட வடிவேலு அடி வாங்குவதே கொஞ்சம் பெட்டர் நகைச்சுவையாக இருக்கிறது. அவரது சாகித்ய அகாடமி விருது பெற்ற குருதிப்புனல் என் கண்களில் குறைகள் நிறைந்த படைப்புதான். அதில் அனாவசியமாக கோபால கிருஷ்ண நாயுடு காரக்டரை ஒரு ஹோமொசெக் ஷுவலாக ஆண்மைக் குறைவு உள்ளவனாக சித்தரித்துவிட்டார் – படித்தவர்கள் பலருக்கு நாற்பத்து சொச்சம் பேர் எரிந்ததை விட வில்லன் ஹோமோ என்பது மட்டும்தான் நினைவில் தங்கி இருக்கிறது. தந்திர பூமி, சுதந்திர பூமி, ஏசுவின் தோழர்கள் எதுவும் எனக்கு தேறவில்லை. என் கண்ணில் வெறும் fluff. அவருடைய புகழ் பெற்ற நந்தன் கதை நாடகத்தைப் பாருங்கள் – கொக்கு தலையில் வெண்ணை வைத்து பிடிப்பது போல நந்தனை ஒழிக்கிறார்கள். ராமானுஜர் நாடகம் வைஷ்ணவ குரு பரம்பரை கதைகளில் தொகுப்பு மட்டுமே. அவருடைய படைப்புகளில் கிருஷ்ணா கிருஷ்ணா ஒன்றுதான் எனக்கு பிடித்திருந்தது. அவருடைய படைப்புகளில் அது ஒன்றுதான் நூறு வருஷத்துக்குப் பின்னாலும் படிக்கக் கூடியது என்பது என் கருத்து. என் மகாபாரதப் பித்தும் இந்த நினைப்புக்கு ஒரு காரணமாக இருக்கலாம். அவர் எழுதிய ஒரு கப் காப்பி சிறுகதை புகழ் பெற்றது, ஆனால் அது சீக்கிரம் மறக்கப்பட்டுவிடும் என்று நினைக்கிறேன். அழியாச்சுடர்கள் தளத்தில் படிக்கலாம். போட்டால் லிங்க் செய்யலாம். பதித்த ராமுக்கு நன்றி!

ஆனால் இ.பா.வின் தாக்கம் பெரியது. அவருடைய தாக்கம் ஆதவனில் நன்றாகவே தெரிகிறது. ராமசேஷன் அதே மாதிரி அறிவுஜீவிதான். இன்று வரை கீழ்வெண்மணி நாவல் என்றால் குருதிப்புனல்தான். அவருடைய நாடகங்கள் முக்கியமான முயற்சிகள். நந்தன் கதை கூட நாடகமாகப் பார்த்தால் கொக்கும் வெண்ணையும் தெரிவதில்லை. வைஷ்ணவ குரு பரம்பரை கதைகள் எல்லாம் ஐயங்கார்களே மறந்துகொண்டிருக்கும் காலம் இது. ராமானுஜர் நாடகம் பார்க்க நன்றாக இருக்க வாய்ப்புகள் இருக்கின்றன. அவருடைய எந்த நாவலும் மோசம் இல்லை. கால வெள்ளத்தில் நிற்காது, அவ்வளவுதான். அவர் பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தில் கொண்டு வந்த மாற்றங்களும் அநேகம்.

தமிழில் சீரியஸ் எழுத்தாளர்களுக்கு பத்மஸ்ரீ கொடுக்கப்படுவது நல்ல விஷயம். ஜெயகாந்தனுக்கு போன வருஷம் கொடுத்தார்கள். இந்த வருஷம் இ.பா.வுக்கு. சீக்கிரம் அசோகமித்திரன், கி. ராஜநாராயணன், சா. கந்தசாமி, பூமணி, ஜெயமோகன் மாதிரி எழுத்தாளர்களுக்கும் கொடுங்கப்பா! அதுவும் அசோகமித்திரன் இருக்கும் நிலையைப் பார்த்தால் ரொம்ப நாள் தாங்கமாட்டார் என்று தோன்றுகிறது, இருக்கும்போது மரியாதை செய்யுங்கள்! (சுந்தர ராமசாமிக்கான சான்சைத்தான் விட்டுவிட்டோம்.)

லிஸ்டில் டாக்டர் ரங்கநாதன் பார்த்தசாரதி என்று போட்டிருந்தார்கள். இந்திரா பார்த்தசாரதியைத்தான் தெரிகிறது, யாருக்கு ரங்கநாதனைத் தெரியும்? 🙂

தொகுக்கப்பட்ட பக்கங்கள்: படிப்பு, ஆளுமைகள்

தொடர்புடைய பதிவுகள்:
2010 – விருது பெற்றவர்களின் முழு லிஸ்ட்
2009 பத்ம விபூஷன்/பூஷன்/ஸ்ரீ விருதுகள்
ஜெயகாந்தனுக்கு பத்மபூஷன்
ராஜாவுக்கும் ரஹ்மானுக்கும் பத்ம பூஷன்
விவேக்குக்கெல்லாம் பத்மஸ்ரீயா?

கீழ்வெண்மணி நாவல்கள்
இந்திரா பார்த்தசாரதியின் ஏசுவின் தோழர்கள்

Advertisements