பொங்கல் வாழ்த்துக்கள்!

நான் கிராமங்களில் வளர்ந்தவன். நான் வளர்ந்த கிராமங்களில் பொங்கல்தான் பெரிய பண்டிகை, தீபாவளி இல்லை. அது சரி, எல்லாம் விவசாயக் கிராமங்கள். அறுவடை முடியும்போது கொண்டாடப்படும் பண்டிகைதான் சிறப்பாக இருக்கும். தீபாவளி அன்று ஸ்கூல், மாட்டாஸ்பத்திரி, லைப்ரரி ஆகியவற்றில் மாதச் சம்பளம் வாங்குபவர்களிடம் வேண்டுமானால் பணம் இருக்கலாம் (இல்லை என்றாலும் ஃபெஸ்டிவல் வாங்கிக் கொள்ளலாம். விவசாயக் கூலிகளிடம் எப்படி பணம் வரும்? பணமே கொஞ்சம் பெரிய விஷயம்தான். வேர்க்கடலை பிடுங்கும்போது ஊர்க்கோடியில் இருந்த எங்கள் வீட்டு வழியாக சாரிசாரியா மக்கள் போவார்கள் – அவர்களுக்கு கூலியே avarkaL பிடுங்கிய வேர்க்கடலைதான். சின்னப் பையன், பெண் என்று வாசலில் விளையாடிக் கொண்டிகொண்டிருக்கும் எனக்கும் என் தங்கைகளுக்கும் கொஞ்சம் கொடுப்பார்கள். அதன் ருசியே தனிதான்.

தீபாவளியை பெரிதாக கொண்டாடுவது எங்கள் குடும்பம்தான், மேலும் ஊரில் இருக்கும் வட்டித் தொழில் செய்யும் மார்வாடி குடும்பம். (அது என்னவோ ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு மார்வாடி குடும்பம் உண்டு) நிச்சயமாக புதுத் துணி உண்டு. அம்மா நாலைந்து நாட்களுக்கு முன்னாலேயே பட்சணம் செய்ய ஆரம்பித்துவிடுவாள். மைசூர்பாகு, ரவாலாடு, பர்ஃபி. அப்புறம் முறுக்கு, தேன்குழல், மிக்சர் என்று ஏதாவது இருக்கும். நாலைந்து ரூபாய்க்கு பட்டாசு வாங்கினால் நாள் பூராவும் வெடிக்கலாம். (அப்போது எங்கப்பாவுக்கு என்ன சம்பளம் என்று தெரியவில்லை. இருநூறு முன்னூறு ரூபாய் இருந்திருக்குமோ என்னவோ) ஊரிலிருக்கும் நாலைந்து ஐயர் குடும்பங்களுக்கு தீபாவளி என்று நிச்சயமாகத் தெரியும்.

பொங்கலுக்கு? சில சமயம் புதுத் துணி உண்டு. சர்க்கரைப் பொங்கல் அன்றைக்கு மட்டும். மாட்டுப் பொங்கலுக்கு விவசாயம் செய்யும் நண்பர்கள் வீட்டுக்குப் போவோம். அதுவும் கிட்டு மாமா வீட்டில் மாடுகளுக்கு அலங்காரம் செய்து ஊர்வலமாக ஊரில் போவார்கள். கரும்பு உண்டு. தீபாவளிக்கு அடுத்த ஸ்தானம்தான்.

இன்றைக்கு நிலை மாறி இருக்கும் – கிராமங்களில் கூட. பொங்கல் என்ற தமிழர் பண்டிகை இரண்டாவது இடத்துக்கு போய், “வடநாட்டார்/ஆரியர்/பார்ப்பனர்” பண்டிகை முதல் இடத்துக்கு வந்திருக்கும் என்று யூகிக்கிறேன். டிவி, விளம்பரங்கள் எல்லாம்தான் இந்த மாற்றத்தை கொண்டு வந்திருக்கும்.

என் பிள்ளைகளுக்கு கிருஸ்துமஸ்தான் பெரிய பண்டிகை. 🙂 என்ன செய்வது?

உங்கள் அனுபவம் என்ன? தீபாவளியா பொங்கலா இல்லை வேறு ஏதாவதா?

தொகுக்கப்பட்ட பக்கம்: மிச்சம் மீதி

Advertisements