(இது உப்பிலி ஸ்ரீனிவாஸின் இடுகை)

எதையும் ஒருமுறை
======================
ஒரு சட்டக் கல்லூரியில் மாணவர்களுடன் ஒரு கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கணேஷ் வசந்த் கல்லூரிக்கு சென்று இருப்பார்கள். அங்கு நிருபமா என்ற மாணவியின் சில கேள்விகளுக்கு பதிலளிப்பார் கணேஷ். திரும்பி வரும் போது தன்னை ஓர் இடத்தில் இறக்கிவிட வேண்டுமென நிருபமா கேட்க இவர்களும் காரில் ஏற்றிக் கொள்வார்கள். வழியில் ஒரு கால்வாயில் ஒரு இளம்பெண்ணின் சடலம் மிதந்து கொண்டிருக்கும். போலிஸ், கூட்டமென அந்த இடம் பரபரப்பாக இருக்கும். மூவரும் இறங்கி சென்று பார்ப்பார்கள். அதை அனாதை பிணமென போலிஸ் தீர்மானத்திருக்கும். நிருபமா அதை கண்டுபிடிக்க வேண்டுமெனவும் அதில் தங்களின் உதவி வேண்டுமென கணேஷிடம் கேட்பார். கணேஷ் அது கடினம் எனக் கூறிய பிறகும் நிருபமா பிடிவாதமாக இருப்பதால் கணேஷ் சில உதவிகளைச் செய்வார். ஒரு சமயம் அந்த கால்வாயின் வழியே சிறிது தூரம் நிருபமாவின் நச்சரிப்பால் செல்வார்கள். அங்கு இறந்தகிடந்த பெண் அணிந்திருந்த சேலையைப் போன்றே ஒரு சேலையை அணிந்து மற்றொரு பெண் இருப்பதைப் பார்த்து அவரிடம் விசாரிப்பார்கள். அந்தப் பெண் தானும் தன் தோழி காவேரியும் அந்த சேலையை ஒன்றாக வாங்கினோம் என கூறுவாள். தன் தோழியை ஒரு பத்து நாளாக காணவில்லையெனக் கூறுவாள். அவள் உதவியுடன் காவேரியின் வீட்டிற்கு செல்வார்கள். இறந்த பெண் காவேரி தானா என முடிவாகவில்லை. எல்லாமே யூகம் தான். அங்கு ஒரு புத்தகம் மட்டும் வித்தியாசமாக இருக்கும். பறவைகள் சம்பந்தப்பட்ட புத்தகம். அதில் ஒரு பெயர் இருக்கும். பறவைகள் சார்ந்த ஒரு சங்கத்தின் மூலம் அந்த புத்தகத்திற்கான ஆளைக் கண்டுபிடிப்பார்கள். அவரின் செயல்களைப் பார்த்து நிருபமாவின் மூலமாக சுஜாதா ஆண்களை எக்கச்சக்கமாக திட்டுவார் :) அந்த மனிதர் வாழ்க்கையில் எதையும் ஒருமுறை செய்துபார்க்க வேண்டுமென நினைப்பவர். பல பெண்களுடன் பழகி அவர்களை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து வைத்து இருப்பார். காவேரியும் அதில் உண்டென அவர் சொல்ல(இவர்களின் சில செய்திகளால்) இவர்கள் பார்ப்பார்கள். நிருபமா இவன் தான் கண்டிப்பாக காவேரியைக் கொலையை செய்து இருப்பான் என முடிவுடன் இருக்க, மருத்துவமனையில் இருந்த அனாதைப் பிணம் தங்கள் மகள் கங்கா எனக் கூறி அவரின் பெற்றோர்கள் பிணத்தைப் பெற்றுக் கொண்டிருப்பார்கள். கணேஷ் நிருபமாவிடம் ஒன்றும் செய்ய முடியாதெனக் கூறிவிடுவார்.

மறுபடியும் கணேஷ்
=====================
பிரபாகர் என்ற ஒரு தொழிலதிபரின் மனைவி ஷைலஜா. பிரபாகர் இந்தப் பெண்ணை சட்டென்று மணந்து கொண்டு வந்துவிடுவார். அந்தப் பெண் கல்லூரி நேரத்தில் தயாள் என்பவரைக் காதலித்திருப்பார். கல்யாணமாகி எட்டு வருடம் கழித்து தயாள் மறுபடி ஷைலஜாவை சந்தித்து தன்னுடன் வந்துவிடுமாறு கேட்பான். மணவாழ்க்கையில் ஏற்பட்டக் கசப்பாலும் குழந்தையின்மையினாலும் இருக்கும் ஷைலஜா இதனால் சிறிது குழப்பமடைவார். கணவருக்கு இந்த விஷயம் தெரிந்துவிடும். ஒரு நாள் பெங்களூர் செல்லும்போது மனைவியைக் கண்காணிக்க ஒருவரிடம் கூறிவிட்டு செல்வார். ஷைலாஜா வும் அன்று ஒரு கடற்கரையில் தயாளை சென்று சந்திப்பாள். நாளை இரவு சென்ட்ரல் நிலையத்துக்கு வரும்படி அவன் சொல்லிவிட்டு கிளம்பிவிடுவான். இந்த விஷயம் பெங்களூரில் இருக்கும் கணவனுக்கு தெரிவிக்கப்பட்டுவிடும். அவர் அடுத்த நாள் காலை விமானத்தில் சென்னை வர தயாராகி விடுவார். இதனிடையில் சென்னையில் வீட்டில் ஷைலாஜாவுக்கு ஒரு கடிதம். கணவனுக்கு தெரியாமல் இருக்க 10000 ரூபாய் தரவேண்டுமென. இவள் குழம்பிப்போய் கணேஷை உடனே வரச் சொல்வாள். கணேஷ் வசந்த வந்து இவளிடம் பேசி சில விஷயங்களைத் தெளிவாக்கி விடுவர். மறு நாள் தெளிவாக கணேஷிடம் பேசும் ஷைலஜா வேலைக்காரர்களை சீக்கிரம் வீட்டிற்கு அனுப்பிவிட்டு தானும் புறப்படுவார். திரும்பி வரும்போது கணவர் வீட்டிலிருப்பார். வாக்குவாதம் முற்றி மனைவியைக் கொன்று விட்டு தற்கொலை மாதிரி அனைத்தையும் மாற்றிவிட்டு திரும்ப பெங்களூர் சென்றுவிடுவார். மாலை ஷைலாஜா கேட்டுக்கொண்ட படி அவரை சந்திக்க வரும் கணேஷ் வசந்த் அவர் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்ப்பார்கள். போலிஸுக்கு தெரிவிப்பார்கள்.ஏறக்குறைய எல்லாம் தற்கொலை என உறுதி செய்யப் படுமுன் வசந்த் சில விஷயங்களைக் கண்டுபிடித்து சொல்வார். இவர்கள் ஒரு காகிதத்தில் வரிசையாக என்னென்ன நடந்திருக்குமென கண்டுபிடிப்பார்கள். சரியாகப் பொருந்திவரும். பிரபாகரை சந்திக்க அவர் வீட்டுக்கு சென்றால் அங்கு அவரும் தூக்கில் தொங்கிக்கொண்டிருப்பார். கணேஷ் போலிஸுக்கு தொலைபேசியில் மறுபடியும் கணேஷ் என்பார். இரண்டு கொலையும் ஒரே மாதிரி ஆனால் வேறு வேறு ஆட்களால் செய்யப்படும்.

அனிதா – இளம் மனைவி
===========================
இது நைலான் கயிறுக்கு அடுத்து குமுதத்தில தொடர்கதையாக எழுதப் பட்ட நாவல். இதில் கணேஷ் மட்டும் தான். கணேஷிடம் வசந்துக்கும் உரிய அனைத்து குணங்களும் இருக்கும்.ஒருவரின் சடலம் ஒன்றைக் கண்டுபிடித்து அங்குக் கிடந்த முகவரியின் மூலம் அவர் வீட்டிற்கு போலிஸ் போன் செய்து இறந்தவர் ஷர்மா என்பவரா என உறுதிப்படுத்த வேண்டுமெனக் கேட்பார்கள். ஷர்மாவின் மனைவி அனிதாவும் உதவியாளர் பாஸ்கரும் ஷர்மாதான் என கூறுவார்கள். அவர் தன் இன்னொரு உதவியாளரோடு கிளம்பி போனார் என தெரியும். உதவியாளார் தலைமறைவாகி விட்டாரெனத் தெரிந்து அவரைத் தேடுவார்கள். அவரின் ஒரு புகைப்படம் கூட கிடைக்காது. ஷர்மாவின் மகள் மோனிகா அமெரிக்காவில் இருப்பார். அவர் வருமுன் இங்கு அனைத்துக் காரியங்களும் முடிந்து விட்டிருக்கும். அவர் நேராக கணேஷை சந்தித்து தனக்கு சேர வேண்டிய சொத்துக்களை நீங்கள் சீக்கிரம் பெற்றுத்தர வேண்டுமெனக் கூறுவார். கணேஷ் ஒப்புக்கொண்டு அவர்கள் வீட்டிற்கு செல்வார். அங்கு ஷர்மாவின் இரண்டாவது மனைவி அனிதாவை (மோனிகா முதல் மனைவியின் மகள்) சந்திப்பார். நிறையத் திருப்பங்கள். கணேஷ் கொலையாளியைக் கண்டுபிடிக்கவும் தீர்மானித்து விடுவார்.முதலில் அனிதாவின் மேல் சந்தேகம். கணவரைப் பழிவாங்கி விட்டாரோ என. பின பாஸ்கரின் மேல். ஆனால் பாஸ்கரும் கொல்லப்படுவார். அனிதா காணாமல் போவார். இறுதியில் திருப்பங்களுடன் கதை முடியும். ஷர்மாவுடன் கடைசியாக காரில் சென்ற செயலாளரின் புகைப்படம் கிடைக்காததன் பின்னணியேக் கொலையாளி மற்றும் கொலையுண்டவரின் கதை.

Advertisements