(இது உப்பிலி ஸ்ரீனிவாஸின் இடுகை)

தண்டனையும் குற்றமும்
===========================
இது ஒரு சிறுகதை. உயிர்மையின் சுஜாதாவின் மர்மக் கதைகள் தொகுப்பில் உள்ளது. நான் படித்த கணேஷ் வசந்த் கதைகளில் அவர்கள் எடுத்துக் கொண்ட வழக்குகளில் தோற்ற ஒன்று இது மட்டும் தான். ஒருவன் அவன் மனைவியிடம் தவறாக நடந்து கொண்ட முதலாளியைக் கொல்லப் போவதாக எல்லோரிடமும் சொல்லித் திரிவான். ஒரு நாள் அந்த முதலாளியைத் தேடி செல்லும் போது அவர் ஏற்கனவே கொல்லப்பட்டிருப்பார். போலிஸ் சரியாக அந்த ஆளை கொலை நடந்த இடத்திலேயே பார்த்துக் கைது செய்வார்கள். கணேஷ் வசந்த் அவருக்காக வாதாடுவார்கள். அனைத்து சாட்சிகளும் குற்றம் சாட்டப் பட்டவருக்கு எதிராகவே இருக்கும். கணேஷ் வசந்த் கொலையை செய்தது கொலையுண்டவரின் பார்ட்னர் தான் என்பதைக் கண்டுபிடித்தாலும் நிருபிக்க முடியாமல் இருப்பார்கள். நிரபராதிக்கு தண்டனை வழங்கப் பட்டுவிடும். இறுதியில் ஒரு திருப்பத்துடன் சுஜாதாவின் சிறுகதை உத்தியுடன் முடியும்.

விதி
=====
சென்னை – பெங்களூர் சாலையில் வேலுர் அருகில் நடக்கும் ஒரு பேருந்து விபத்தில் பத்திற்கும் மேற்பட்டவர்கள் இறந்து விடுவார்கள். இது நடந்து ஒரு வாரம் கழித்து ஒரு பெண் கணேஷ் வசந்த அலுவலகத்திற்கு வந்து அந்த விபத்தில் தன் அண்ணனும் இறந்து விட்டான். பெங்களூரில் எங்களுக்கு உறவினரோ தெரிந்தவர்களோ யாருமில்லை. என் அண்ணனுக்கு சம்பவம் நடந்த அன்று ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. என்னிடம் சிறிது நேரத்தில் வருகிறேன் என்று போனவர் ஏன் பெங்களூர் பேருந்தில் போக வேண்டும். இது விதியென்று என்னால் நம்ப முடியவில்லை. அவன் ஏன் பெங்களூர் செல்லவேண்டும் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டுமென்று கேட்பாள். கணேஷ் வசந்தும் இதை விதியென்றே நினைப்பார்கள். விபத்தில் சிக்கிய பேருந்தின் கம்பெனிக்கு சென்று சில விவரங்களைப் பெறுவார்கள். பின முதலாளியையும் சந்தித்து பெண்ணின் அண்ணனைப்(தாமோதர்) பற்றி விசாரிப்பார்கள். கிடைத்த விவரங்கள் போதாது. தாமோதர் பணிபுரிந்த நகரத்தின் முக்கிய புள்ளிகள் உறுப்பினர்களாக இருக்கும் ஒரு க்ளப்புக்கு சென்று அவரைப் பற்றி விசாரிப்பார்கள்.தாமோதருக்கு நிறையப் பெண்களிடம் தொடர்பு இருந்ததெனவும் அவர்களில் ஒருத்தரைச் சந்திக்க பெங்களூர் சென்று இருக்கலாம் எனவும் முடிவுக்கு வருவர். அந்த க்ளப்பில் விபத்திற்குள்ளான பேருந்து கம்பெனி முதலாளியின் மனைவியும் உறுப்பினர். இதற்கிடையில் தாமோதரின் தங்கை தாமோதரின் தொலைபேசி தொடர்புகள் உள்ள ஒரு நோட்டை கணேஷ் வசந்திடம் தருவார். அதில் பேருந்து கம்பெனி முதலாளி வீட்டு எண்ணும் இருக்கும். விபத்து நடந்த அன்று பேருந்து 9.30 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு இருக்கும். ஆனால் தாமோதர் 10 மணி வரை வீட்டிலிருந்ததாகத் தெரிய வரும். உடனே உள்ளுணர்வின் பேரில் ஒரு முடிவுக்கு வருவார்கள். அது சரியாகவே இருக்கும்.

மெரீனா
=========
பணக்கார வீட்டு இளைஞர்களின் செயலைப் பின்புலமாக வைத்து எழுதப்பட்டக் கதை. திலீப் என்ற இளைஞன் தன் காரில் நண்பர்களுடன் வந்து மெரீனா கடற்கரையில் குடித்துவிட்டு போதை மருந்தும் அடித்துக் கொண்டிருப்பார்கள். அங்கு டாடா சுமோ வில் வரும் இன்னொரு இளைஞனையும் பெண்ணையும் பார்த்துவிட்டு தங்கள் நண்பன் தான் ஒரு பெண்ணுடன் வந்து உள்ளதாக நினைத்துக் கொண்டு புகைப்படம் எடுப்பார்கள். ஆனால் வேறு ஆளான அந்த இளைஞன் இவர்களைத் தாக்க வருவான். திலீப் அவன் மண்டையில் டயர் லீவரால் அடித்து விடுவான். அவன் இறந்துவிட்டான் என்று இவர்கள் ஓடி வந்துவிடுவார்கள். கார் சாவியைத் தொலைத்து விடுவார்கள். வீட்டுக்கு சென்று சாவி தேடிக்கொண்டிருக்கையில் திலீப்பின் தந்தை வந்து நடந்ததெல்லாம் அறிந்து அவரே காரை கொண்டு வந்து விடுவார். மறுநாள் போலிஸ் இன்ஸ்பெக்டர் வந்து விசாரிப்பார். அங்கு ஒரு அனாதைப் பிணம் இருந்ததாகவும் உங்கள் கார் அங்கு இரவு அங்கு இருந்ததால் சந்தேகமெனவும் கூறுவார். இன்ஸ்பெக்டர் பணம் எதிர்பார்ப்பார். பணம் கொடுத்தால் பிரச்சினையை முடித்து விடுவதாக. பணம் கொடுக்கும் முன் திலீப்பின் தந்தை நண்பர் ஒருவரின் யோசனையால் கணேஷ் வசந்தின் உதவியை நாடுவார். பணம் கொடுத்தால் எல்லாம் சரியாக நடக்குமா என்பதை மட்டும் தெரிந்து கொள்ள. அடிபட்டவன் இறக்கவில்லையென கண்டறிவார்கள், மேலும் அனாதைப் பிணம் வேறு யாரோ என்றும் கண்டுபிடித்து விடுவார்கள். ஆனால் இறுதியில் திலீபை கைது செய்ய அவர்களே இன்ஸ்பெக்டருக்கு யோசனை கூறுவார்கள்.

(

உயிர்மை வழங்கும் Sujatha’s Books List

http://www.uyirmmai.com/Publications/AuthorDetails.aspx?aid=101

http://www.uyirmmai.com/Publications/AuthorDetails.aspx?aid=101&pn=2

)

Advertisements