(இது உப்பிலி ஸ்ரீனிவாஸின் இடுகை)

ஐந்தாவது அத்தியாயம்
———————————-
ஒரு திருமணமான பெண் தம்பு செட்டித் தெருவில் உள்ள கணேஷ் வசந்த் அலுவலகத்துக்கு ஒரு வார இதழுடன் வருகிறார். அந்த இதழில் வரும் தொடர்கதை தன்னைக் குறிப்பதாகச் சொல்கிறார். ஐந்தாவது அத்தியாயத்தின் போது தான் கொல்லப் படுவோமென பயந்து இவர்களிடம் வருவார். அவர் தன் கணவரின் மேல் சந்தேகப் படுவார்.வசந்த் கதையை எழுதுபவரை கண்டுபிடுப்பார். ஆனால் அவர் எங்கிருந்தோ கொரியரில் வரும் கதையை தட்டச்சு செய்து அனுப்புபவர் மட்டும்தான் எனத் தெரியும். ஆனால் கடைசியில் அந்த பெண் கணவரைக் கொன்று விடுவார்.தற்காப்புக்காகக் கொன்றதாக சொல்லுவார். குற்றவாளி யார் என்பதை சுஜாதா வாசகர்களின் முடிவுக்கே விட்டுவிடுவார்.

ஆயிரத்தில் இருவர்
=============================
ஒரு (எத்திராஜ்) பெண்ணும் தந்தையும் கணேஷிடம் வருவார்கள். அவரின் மூத்த மகள் ஒரு ஐ.ஏ.எஸ் ஆபிசரை மணந்து ஒரு வருடம் முன்பு குஜராத் அகமதாபாத்தில் கேஸ் அடுப்பு வெடிப்பினால் இறந்து போய் இருப்பார். அது விபத்து இல்லையென்றும் மகளின் மாமனார், மாமியார் மற்றும் கணவருமே அவளைக் கொன்று விட்டனர் எனவும் கூறுவர். கூடவே மூத்த மகள் எழுதிய ஒரு கடிதத்தையும் காண்பிப்பார். கணேஷ் – வசந்த் தங்கள் வேலையைத் துவங்குவார்கள். ஐ.ஏ.எஸ் ஆபிசர் குடும்பத்தின் நடவடிக்கைகள் சந்தேகங்களை வலுப்படுத்தும். கணேஷும் வசந்தும் ஒருமுறைத் தாக்கப் படுவார்கள். ஆபிசர் இரண்டாவதாக மணப்பதாக இருக்கும் பெண் திடீரென தாக்கப் படுவார். அவர் தன்னை மிரட்டியது ஒரு தாத்தா என்று ஒரு சமயம் கூறுவார். திடிரென மாமனாரும் மருமகனும் ஒரே அணிக்கு வந்துவிடுவார்கள். தன் மருமகனை தவறாகப் புரிந்து கொண்டதாக இறந்த பெண்ணின் தந்தை கூறிவிடுவார். திடீரென முட்டாளாக்கப்பட்டதாக உணரும் கணேஷும் வசந்தும் இதன் பின்னணியை கண்டுபிடிப்பார்கள்.

கொலையரங்கம்
=================
இதுவும் சொத்துப் பிரச்சனையின் பின்னணியில் நடைபெறும் சில கொலை முயற்சிகள் மற்றும் கொலையின் பின்னணியில் உள்ளவர்கள் யாரெனக் கண்டுபிடிப்பதுதான்.பீனா மற்றும் உத்தம் எனும் இருவருக்கும் பொதுவான சொத்திற்காக நடைபெறும் பிரச்சனை. இலங்கைப் போராளிகளின் வெடிகுண்டுடன் ஆரம்பிக்கும் கதை அதற்கு எந்த தொடர்புமில்லாதது. ஒரு மருத்துவமனையிலேயே பாதிக்கும் மேற்பட்டக் கதை நடக்கும்.கதை மருத்துவமனயிலேயே நிறைவு பெறும். முதலில் பீனா மீது சந்தேகம் வர, பின் அவரே கத்தியால் குத்தப் பட்டு மோசமான நிலைமையில் மருத்துவமனையில் அனுமதிக்கப் படுவார். அமெரிக்காவில் குடிபெயர்ந்துவிட்ட இன்னும் இருவருக்கு அந்த சொத்தில் பாத்யதை இருந்தும் அவர்கள் வேண்டாமென்று எழுதிக் கொடுத்துவிட்டிருப்பர். அதில் ஒருவர் இந்த சமயத்தில் வேலை சம்பந்தமாக சென்னை வர அவர் மேல் சந்தேகம் வர அவரும் கொலை செய்யப்படுவார். அனைத்தும் மறுபடி முதலில் இருந்து தொடங்கும். வசந்த்க்கு மருத்துவமனையில் கத்திக்குத்து என நீண்டு கணேஷ் இறுதியில் குற்றவாளியைக் கண்டுபிடிப்பார்.

விபரீதக் கோட்பாடு
=====================
ஒரு சங்கம் செய்யும் ஒரு விபரீத செயலைக் கண்டுபிடிக்கும் கதை. தம்புசெட்டித் தெருவுக்கு ஒரு பெண்ணும் ஒரு இளைஞனும் கணேஷ் வசந்தின் அலுவலகத்திற்கு வருவார்கள். இருவரும் விரைவில் மணந்து கொள்ள முடிவு செய்துள்ளனர். ஆனால் அந்த இளைஞனுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி திடிரெனக் காணாமல் போய் விடுகிறார். எனவே மனைவியைக் கண்டுபிடித்து விவாகரத்துப் பெற வேண்டும். இது அந்த இரண்டாவதாக மணந்து கொள்ளப் போகும் பெண்ணின் பிடிவாதத்தால் தான். கணேஷ் வசந்த் சரி என்று ஒருமுறை அவர்கள் வீட்டிற்கு போவார்கள். அங்கு முதல் மனைவியின் அறையில் சில ஃப்லிம் சுருள்களை கணேஷ் எடுத்து வைத்துக் கொள்வார், கூடவே ஒரு நோட்டிலிருந்து மேல் காகிதத் துண்டையும். அங்கு அந்த இளைஞனின் சித்தப்பா ஒருவரையும் சந்திக்க நேரிடும். சித்தப்பாவின் உதவியாளராகத்தான் இரண்டாவது பெண் அங்கு சேர்ந்து அந்த இளைஞனைக் காதலித்து மணமுடிக்க இருப்பார். அந்த ஃப்லிம் சுருள்கள் அந்த வீட்டில் ஏதோ மர்மம் இருப்பதை உணர்த்தும். கணேஷ் முதல் மனைவி ஊட்டியில் இருப்பதைக் கண்டு பிடித்துவிடுவார். ஆனால் இவர்கள் அங்கு போய் சந்திக்கும் முன் அந்தப் பெண் கொலை செய்யப்பட்டு இருப்பார். இது நிறைய சந்தேகங்களை எழுப்பும். அவர் ஏன் ஊட்டி யாருக்கும் தெரியாமல் சென்றார். அந்த வீட்டில் என்ன பிரச்சினை என்பதைக் கண்டுபிடிப்பதே கதை.ஏதோ ஒரு வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு விபரீதத்தை அந்த சங்கம் நிறைவேற்றும் குற்றத்தை இறுதியில் கண்டுபிடிப்பார்கள்.