(இது உப்பிலி ஸ்ரீனிவாஸின் இடுகை)

சுஜாதாவின் கதைகள் சொல்லப் பட்ட விதத்தாலேயே வாசகர்களுக்கு ஒரு துள்ளலான மன நிலையை அளித்தன. வசந்தின் சொல்லி முடிக்கப்படா ஜோக்குகளும், கண் மறைவில் சொல்லப் பட்டு ,கேட்ட பெண்ணின் எதிர்வினைகள் மட்டுமென வாசகனுக்கு அறிமுகமான சில ஜோக்குகள் என பிரசித்தம். வசந்த் சில கதைகளில் பாரதி கவிதைகளையும் உபயோகத்திருப்பார். அப்துல் ரகுமான், மேத்தா போன்றொரின் கவிதைகளும் அடக்கம். கன்னம் வைப்பதைத் தவிர அனைத்து வேலைகளையும் வசந்த் செய்திருப்பார். ஒரு கதையில் அவரே இதைக் குறிப்பிட்டிருப்பார். சில முறை அந்த மாதிரி வேலைகளில் தாக்கப் பட்டிருப்பார். நைலான் கயிறில் கணேஷ் , வசந்தின் இம்மாதிரி வேலையைச் செய்து போலிஸிடம் அகப்பட்டு பின்பு சமாளித்து வெளிவருவார். ஏறக்குறைய எல்லாக் கதைகளின் துப்பறிதலிலும் Mistrust the Obvious என்பதே கணேஷின் அடிப்படையாக இருக்கும்.

நைலான் கயிறு, பாதி ராஜ்யம் மற்றும் ஒரு விபத்தின் அனாடமி போன்ற நாவல்களில் கணேஷ் மட்டுமிருப்பார்.

நிர்வாண நகரம்
———————-
சென்னை நகர இளைஞன் ஒருவன் கோபத்தாலும், இயலாமையாலும் சென்னையைப் பழி வாங்க வேண்டுமென நினைக்கிறான். சில கொலைகளைச் செய்யப் போவதாக வரிசையாக காவல்துறைக்குக் கடிதங்கள் எழுதுகிறான்.பெயர் சிவராஜன், திருவல்லிக்கேணி மேன்சன் வாசி. ஆனால் தான் கொல்லப் போகிறவர்களின் அடையாளங்களைத் தெளிவாகக் குறிப்பிடுவதில்லை.ஒவ்வொரு கடிதத்திற்குப் பிறகும் குறிப்பிட்டபடி ஒவ்வொருத்தராக கொல்லப் படுகிறார்கள். போலிஸ் இவனைத் தேடுகின்றனர். கணேஷ் வசந்த் இங்கிருந்துதான் வருகிறார்கள். அவர்களும் இவனைத் தேடுகின்றனர். இதற்கிடையில் இவனுக்கு காதலியுடன் கல்யாணம் நிச்சயமாகிறது.கல்யாணத்துக்கு முந்தைய நாள் கணேஷ் வசந்த் இவனைக் கண்டுபிடிக்கின்றனர். அங்கு ஒரு திருப்பத்துடன் கதை முடிகிறது.சிவராஜன் என்ற பெயரால் சில பிரச்சினைகள் வந்ததாக சுஜாதா ஒருமுறைக் குறிப்பிட்டுள்ளார்.

வஸந்த்! வஸந்த்!
————————-
கூழமந்தல் எனும் கிராமத்தில் உள்ள ராஜராஜன் கிணறு எனும் ஒரு பழங்கால கிணறு ஒன்றின் மர்மத்தில் ஆரம்பிக்கும் இந்த கதையில் வஸந்த் நிறைய கஷ்டபட்டிருப்பார். ஒருமுறை விஷம், இறுதியில் துப்பாக்கியால் சுடப்பட்டு காப்பாற்றப் படுவார். ஒரு வரலாற்றுப் பேராசிரியரின் வரலாற்றுக் குறிப்புக் காணாமல் போவதில் இருந்து கதை ஆரம்பிக்கும். கிணற்றை ஒரு சமூக விரோதக் கும்பல் ஏதோ ஒரு காரணத்துக்காக உபயோகப் படுத்திக்கொள்கின்றனர். புதையலா, ஏதேனும் பழங்கால சிலையா எனத் தெரியாமல் கணேஷும் வஸந்தும் துப்பறிவார்கள். இதற்குள் சிலர் தாக்கப் படுவதும் ஒரு கொலையும் நடந்துவிடும். வஸந்த் வழக்கம் போல சைடில் ஒரு பெண்ணையும் மேத்தமேட்டிக்ஸ் பண்ணிக்கொண்டிருப்பார். இறுதியில் வசந்த் வில்லனிடம் மாட்டிக் கொண்டு துப்பாக்கியின் ஒரு தோட்டாவை உடம்பில் வாங்கிக் கொள்வார். கணேஷ் போலிஸுடுன் வந்து அவர்களைக் கைது செய்து வசந்தை காப்பாற்றி கதை நிறைவு பெறும்.

கொலையுதிர் காலம்  (தொடர்ச்சி)
———————————————-
ஒரு பெண்ணின் சொத்துப் பிரச்சினைகளைத் தீர்க்கப் போய் ஏற்படும் சவால்கள் நிரம்பியக் கதை. பேய், ஆவி என நிறுத்தாமல் வாசிக்கச் சொல்லும் ஒரு கதை. அந்த பெண்ணின் பரம்பரையில் ஒரு பெண் கொடுமைப் படுத்தப்பட்டு கொல்லப்பட்டதாகவும் அது ஆவியாக உலவி அந்தப் பரம்பரையைப் பழி வாங்குவதாகவும் அந்த ஊரே நம்பிக் கொண்டிருக்கையில் வஸந்தும் கணேஷும் பேயைப் பார்க்கவும் செய்கின்றனர். கணேஷ் பேயிடம் அடியும் வாங்குகிறார். சொத்துக்கு இன்னொரு வாரிசான வியாசனின் மேல் சந்தேகமிருக்க அவரும் கொல்லப் படுகிறார். இறுதியில் திடிரென வரும் ராமபத்ரன் எனும் ஐ.ஐ.டி பேராசிரியர் தான் கொலையாளி எனக் கண்டுபிடிக்கின்றனர். கதை மிகமிக வேகமாக சென்று திடிரென முடிந்துபோகும்.பொதிகையில் 90 களில் நாடகமாகவும் வந்துள்ளதாகத் தெரிகிறது.

Advertisements