நெட்டில் இருப்பதை எல்லாம் படித்தே கொஞ்ச நாளாகிவிட்டது. வந்தேமாதரம் பற்றி எழுந்த சர்ச்சை இப்போதுதான் கண்ணில் பட்டது.

நான் ஒரு நாலைந்து வருஷம் கார்லி, செயின்ட் ஜோசஃப் பள்ளிகளில் படித்திருக்கிறேன். இவை எல்லாம் கிருஸ்துவ மத சார்புடைய பள்ளிகள். கார்லி பள்ளியில் காலை பிரேயர் எல்லாம் நடக்கும். தேவ பிதா எந்தன் மேய்ப்பனல்லோ, கேளுங்கள் தரப்படும் (நாங்களும் ஸ்கூல் இன்றைக்கு மூடிவிட வேண்டும் என்று கேட்டு கேட்டு பார்த்தோம்…) என்றெல்லாம் பாட்டு பாடுவோம். பரமண்டலத்தில் இருக்கும் பரம பிதாவை கூப்பிடுவோம். அதற்கு முன் படித்த அரசு பள்ளிகளிலும் சரஸ்வதி வாழ்த்து என்று யாராவது ஏதாவது (அபூர்வமாக) பாடுவார்கள். நந்தகுமார், சந்திரசேகர், ஸ்ரீனிவாசன், சுப்ரமண்யன், சமத் கான், ஜெசுமூர்த்தி எல்லாரும்தான் பாடுவோம், ஜெபிப்போம். எங்களுக்கும் சரி, எங்கள் பெற்றோர்களுக்கும் சரி தவறாகத் தெரிந்ததில்லை. அது ஸ்கூலின் வழிமுறை; ஏதோ ஒரு விதத்தில் கடவுளை வழிபடுகிறார்களா, ஒன்றும் தப்பில்லை என்ற எண்ணம்தான் இருந்தது. (நாஸ்திகன் யாரையும் நான் காலேஜுக்கு முன்னால் பார்த்ததில்லை)

ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு பண்பாட்டுப் பின்புலம் இருக்கிறது. அந்த பண்பாட்டுப் பின்புலத்தில் மதத்துக்கு பெரும் பங்கு இருக்கிறது. வந்தேமாதரம் பாட்டு அப்படித்தான். விடுதலைப் போராட்டத்தில் ஒவ்வொருவரும் முழங்கிய மந்திரம் அது. வங்காள மொழி புரியவில்லை என்று தூத்துக்குடிக்காரர்கள் அதை ஒதுக்கவில்லை. குர்ஆனில் ஆழமான புலமை கொண்ட மௌலானா ஆசாத்தும் அதை முழங்கி இருப்பார். ஏன் ஜின்னாவே கூட வந்தே மாதரம் என்று கூவி இருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதில் சக்தியை புகழ்ந்து நாலு வார்த்தை இருக்கிறதே என்று யாரும் அதை தேசிய கீதம் ஆக்கவில்லை. (அதைக் கூட “எடிட்” செய்துவிட்டார்களாம்.) பிறகு என்ன ஆட்சேபனை? என் கருத்தில் ஜனகனமன தேசிய கீதம் ஆகியே இருக்கக் கூடாது. வந்தே மாதரத்துக்கு பதில் என்ற பேச்சே எழுந்திருக்கக் கூடாது. அப்படியே எழுந்திருந்தாலும் சாரே ஜஹான் சே அச்சா alternate தேசிய கீதம் ஆகி இருக்க வேண்டும்.

சரி இனி மேல் சரித்திரத்தை மாற்ற வேண்டிய தேவை இல்லை. ஜனகனமன தேசிய கீதமாகவும் வந்தே மாதரம் அல்டேர்ணடே தேசிய கீதம் ஆகவுமே இருந்துவிட்டுப் போகட்டும். அதையும் மாற்ற நினைப்பது தவறு. இதில் முஸ்லிம்கள் மனம் புண்படுகிறது என்று யாராவது ஒரு முல்லா சொன்னால் கண்டுகொள்ளாமல் போய்விட வேண்டும். முகமது நபிக்கு முந்தைய நபியான ஈசா நபி (நம்ம ஏசுனாதருங்க) சொன்னதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள் – Render unto Ceaser what is due to Ceaser! அப்புறம் பஞ்சாபிகள் ஏன் பஞ்சாபி மொழியில் தேசிய கீதம் இல்லை என்று வருத்தப்படுவார்கள்; கலைஞர் செம்மொழியில் ஏன் இல்லை என்று கேட்பார். அத்வானி ராமர் கட்டிய பாலத்தை இடிக்காதே என்பார். (நானும் ராமர் பாலம் இடிக்கப்படக் கூடாது என்று நினைப்பவன்தான். ஆனால் அது சுற்றுச்சூழல் பாதிப்பு, மற்றும் ஆகும் செலவுக்கு ஏற்ற வரவு இருக்காது என்ற காரணங்களுக்காக; நான் ராமனை கும்பிடுபவந்தான். ஆனால் ராமனே நேரில் வந்து இது நான் கட்டிய பாலம் என்று சொன்னாலும் ராமன் கட்டிய பாலம் இடிக்கப்படுவதால் ஏற்படும் ஹிந்துக்களுக்கு ஏற்படும் intangible நஷ்டங்களை விட நாட்டுக்கு ஏற்படக் கூடிய tangible லாபங்களே – அப்படி லாபம் ஏதாவது இருந்தால் – முக்கியம் என்று நினைக்கிறேன்.) அரசு தன எல்லை எது என்று தெளிவாக புரிந்து நடந்து கொள்ள வேண்டும். ஹெல்மட் போட வேண்டும் என்று சட்டம் போட்டால் சீக்கியர் தலைப்பாகை அணிய வேண்டும், அதனால் அவர்களுக்கு விதிவிலக்கு என்று மதத்தையும் அரசையும் குழப்பிக் கொள்ளக் கூடாது. அப்புறம் நாளைக்கு அம்மை ஊசி போட்டால் மாரியம்மனுக்கு தெய்வக் குத்தம் ஆகிவிடும் என்று நினைப்பவர்களிடம் என்ன சொல்வது?

வந்தே மாதரம் பாட்டு கீழே. (ஒரிஜினல், ஏ.ஆர். ரஹ்மான் version இல்லை)

Advertisements